பிரம்படி

        இதுதான்...... ஓங் கடைக்கு வந்தாலே தொல்லை. எம்புட்டு நேரம் காத்துக் கிடக்கிறது? உனக்கு உன் வேலைதான் முக்கியம்! என்னப்பத்திக் கவலையே படமாட்டியே.....

        பொறுப்பா பொறு...... இன்னும் ஒரே ஒருத்தர்தான், அடுத்து நீதான்.

        என்னமோப்பா...... இன்னிக்கு ஸ்கூல்ல அடிதான் வாங்கப்போறேன்.

        இதோ பாரு...... வேல நேரத்துல சும்மா நய நயன்னு பொலம்பாத ஒரு மனசா வேலையச் செய்யவிடு.

        பய படிப்புல சுட்டி வெளையாட்டு கிளையாட்டுல வெளுத்துக் கட்டுவான், பள்ளிக்கூடத்துல நல்ல பேரு; அதான் அப்படி இப்படிக் கண்டுக்காம விட்டாங்க; போன வரமே P.T.வாத்தியார் மொறச்சார்.

        இன்னிக்கு மாட்டுனா...... பெரிய வாத்தியார் பிரம்புக்கு - ரூல்ஸ்...... ரூல்ஸ் மட்டும்தான் தெரியும்; சமய சந்தர்ப்பம் தெரியாது; பின்னி எடுக்கத் தெரியும்; மன்னிக்கத் தெரியாது.

        எப்போய் எனக்கு நேரமாச்சு...... லேட்டாப்போனா அதுக்குவேற அடிப்பாங்க.

       இந்தா...... இந்தா ஆயிடுச்சுப்பா...... அடுத்து உனக்குத்தான்.

       என்ன முத்துவேலு...... அவசரமா ஊருக்குப் போகனும்...... இன்னும் ½ மணியில் ரயிலடியில் இருக்கணும்...... அந்த ட்ரெயின விட்டா அடுத்து சாய்ங்காலந்தான் ட்ரெயின்; மொத்தப் பொழப்பும் கெட்டுடும்.

       சார்...... ஒரு செகண்ட்ல உங்கள அனுப்பிடுறேன்.

       அப்பா! நான் ஸ்கூலுக்குப் போனும்......
 
       தம்பி சுடல...... எனக்கு தலைக்கு மேல வேல இருக்கு; நீ சாயங்காலமா வாப்பா......

       மூணு நாளா இதையே தான் சொல்லுற.

       சரிசரி இன்னைக்கு முடிச்சிடலாம்...... கவலைப்படாதே;

       வேதனையோடும் வெறுப்போடும் பயந்து பயந்து பள்ளிக்குப் போனான் சுடலை

       அடேய்! அதட்டினார் P.T.வாத்தியார்; மூணு நாள் லீவுல கழுதை மேய்க்கப்போனியா? பெரிய சண்டியர்னு நெனைப்போ! ஏதோ நல்லாப் படிக்கிறியேன்னு விட்டா….. குடுமி பொடனியில பொறளுது...... ரிப்பன் வாங்கிக் குடுக்கவாடா? கேக்குறேன்ல...... உங்கப்பாவுக்கு என்ன வேல?

       சுடலை தயக்கத்தோடு சொன்னான் “சலூன் கடை”, வச்சிருக்கார்...... சொல்வதற்குமுன் அடிவிழுந்தது; பிரம்பு அமைதியாய் அழுதது.

புதுக்கவிதை 2

உலகப்படத்தில்
வறுமைக் கோட்டைத்
தேடினேன்……
அரசியல்வாதி -
இந்திய எல்லைக் கோடுகளைக்
காட்டினான்.

துளிப்பாக்கள் 20

விசாரணைக்கு உரியவர்கள்
விசாரித்துக் கொண்டிருந்தனர்
கூண்டுக்குள் நிரபராதிகள்.

******
ஒப்பனை உணர்ச்சி
காமம் களிப்பு
திரைக்குப் பின்னால் தேசம்.

******
சிலுவைக்குள் சக்தி
சிவனுக்குள் மேரி
பரமபிதாவே ‌இரட்சியும்.

******
கருவறையைத் திற
கடவுளை விடுதலை செய்
ஆண்டவனுக்கு அருள்.

******
கால்களில் காயம்
கைகளில் மருந்து
நிவாரண நிதி.

******
திருடன்
கண்ணில் பட்டது –
“நன்றி; மீண்டும் வருக”.

தொழில்

கடைக்காரன் சொன்னான்
என் பிள்ளைக்கு
இந்தத் தொழில் வேண்டாம்.

விவசாயி சொன்னான்
என் பிள்ளைக்கு
இந்தத் தொழில் வேண்டாம்.

பொற்கொல்லன் சொன்னான்
என் பிள்ளைக்கு
இந்தத் தொழில் வேண்டாம்.

சிரைப்பவன் சொன்னான்
என் பிள்ளைக்கு
இந்தத் தொழில் வேண்டாம்.

வெளுப்பவன் சொன்னான்
என் பிள்ளைக்கு
இந்தத் தொழில் வேண்டாம்.

விலைமகள் சொன்னாள்
என் பிள்ளைக்கு
இந்தத் தொழில் வேண்டாம்.

அரசியல்வாதி சொன்னான்
என் தலைமுறைக்கும்
என் வைப்புகளின் வைப்புகளின்
         வைப்புகளின் வைப்புகளின்
         வைப்புகளின் தலைமுறைக்கும்
         அரசியல் மட்டும் போதும்;
         அமைச்சராய் இருந்தால் போதும்.

ஈழத் தமிழச்சியோ
தன் பெண்வயிற்றுப் பெண்வயிற்றுப்
         பெண்வயிற்றுப் பெண்வயிற்றுப்
         பெண்வயிற்றுப் பெண்வயிற்றுப்
         பெண்வயிற்றுப் பெண்கூட
         புலியாய்ப் பிறக்க வேண்டுமென்றாள்.

உறவுகள்

  ஊருக்கு மட்டும்தான்
     உறவென்ற சொல்லுண்டு,
     உறவுக்காய் அன்பதுவோ
     ஒருநாளும் வாராது

     பேருக்கு முறைசொல்லிப்
     பேச்சளவில் உறவாடும்
     பிறப்புவழிச் சொந்தங்கள்
     பேசாதீர் இனிமேலும்.

     யாருக்கு வேண்டுமிந்த
     ஏமாற்று உறவுகள்?

     யார்யார் மனமெல்லாம்
     அன்புமலர் பூக்கிறதோ,
     பாருக்குள் அவருள்ளே
     பாசத்தின் பந்தங்கள்
     பாங்குடனே வருமன்றோ
     தன்னுயிரைத் தருமன்றோ…!

பந்தபாசம் என்பது
     இரத்த பாசத்தோடு
     கலந்தது;
     வந்தபாசமெல்லாம்
     வாய்வார்த்தையோடு சரி.

அன்பு என்று
     சொல்லிக்கொண்டு
     அலையுது உன் மனசு;
     அன்பு என்று
     சொல்வதெல்லாம்
     அந்தக்காலப் பழசு.

     முன்ன ஒன்னு
      பின்ன ஒன்னு
      சொல்வதுதான் புதுசு;
     முதுகிலதான்
      மொய்க்கும் இந்த
      ஈக்கள் பல தினுசு

மனக்கதவைப்
     பூட்டிவை;
    லாப நட்டக்
    கணக்குப் பார்;
    சுருங்கிப் போ…
    சுகமாய் இரு....

இறைவன் இறங்கி வந்தால்……

இமயம் இறங்கி
இனிய பஞ்சாப்
சமயம் எழுப்பிய
தங்கக் கோவிலைப்
பதமுடன் பார்த்துப்
பரவசம் அடைய
முதலே நினைத்து
முடியும் முன்னே –
அடவோ அங்கே
அகாலிக் துப்பாக்கி
சுடவே பயந்து
தூர நடந்து
குஜராத் வருவான்;

இதயம் குளிர
காந்தியின் மண்ணைக்
காண நினைத்தால்,
காந்தல் கொண்டு
கயவர் பலரும்
சண்டைகள் போட்டுத்
தாக்கிக் கொண்டு
மண்டைகள் உடைந்து
மாண்டது கண்டு
அஞ்சி வருவான்
அஸ்ஸாம் மண்ணே.

பஞ்சாப் போலப்
பாழ்பட் டிதுவும்
கிடப்பது கண்டு
கேவி அழுவான்

மெல்ல இறைவன்
மேலைக் கடலின்
செல்ல விளிம்பைச்
சேர்ந்து நடந்து
சென்னை நகரம்
தெரியும் போது
எண்ணிப் பார்ப்பான்
"எப்படி இருக்கும்?"

முன்பு
கோட்டைகளாய்
இருந்தவை எல்லாம்
பின்பு
மூர்மார்க் கட்டாய்ப்
பிரிந்து
வஞ்சகர் வாழும்
வளாக மாகிப்
பஞ்சாய் நெருப்பில்
எரிந்தது அறியான்
எண்ணிப் பார்ப்பான்
"எப்படி இருக்கும்?"

கண்ணீர்க் கடலில்
கலங்கள் மிதப்பதைக்
கண்டு இறைவன்
கலங்கி நிற்பான்.

அரசியல் வேள்வி
நடத்தும் நாயகர்
உரசிய சந்தனம்
கலந்து ஓடும்
கூவம் நதியில்
குளிப்பவர் கண்டு
பாவம் இறைவன்
பதைத்துப் போவான்.

சோகம் அவனின்
தொண்டையை அடைக்க
வேகமாய் நகரின்
வீதியில் நடப்பான்

தண்ணீர் குடித்துத்
தாகம் அடக்க
எண்ணிக் கமண்டலம்
ஏந்திய கையைத்
தூக்கிப் பார்ப்பான்……
             கைபிடித் துண்டு
             பாக்கி இருக்கும்.
தெற்கே பார்த்தால் –
             ஈழத் தமிழர்
             ஈந்த குருதியால்
             ஆழக் கடலின்
             அலைகள் சிவக்க
             இலங்கையில் ஏற்றிய
             நெருப்பின் நாவு
             இலங்கு விசும்பை
             எட்டி எரிக்கப்
             பாழும் உலகைப்
             பார்த்தது போதும்……
என்றே எண்ணி
ஈசன்
சென்றே விடுவான்
சிவபுரி தானே…!

தமிழ் என் காதலி

கண்ணுக்கு விருந்தான
கற்பகச் சிலையே – உன்
அற்புதம் நான்பாடுவேன் – பெண்ணே
அற்புதம் நான்பாடுவேன்.

கற்பனை வடிவான
காரிகை உன்னழகை
எப்படிக் கவிபாடுவேன் – பெண்ணே
எப்படிக் கவிபாடுவேன்.

சேயிழை உன்னழகைச்
செப்பிட நானென்ன
கம்பனின் அவதாரமா? – பெண்ணே
கம்பனின் அவதாரமா?

கூந்தல் அசைந்தாடக்
குறுநகை புரிந்தேநீ
நெஞ்சத்தைத் தாலாட்டுவாய் – பெண்ணே
நெஞ்சத்தைத் தாலாட்டுவாய்.

மாதுளை நிறமொத்த
மாங்கனி உனையென்று
மஞ்சத்தில் நீராட்டுவேன்? – பெண்ணே
மஞ்சத்தில் நீராட்டுவேன்?

உன்முகம் பார்க்கின்ற
ஒவ்வொரு நொடிப்போதும்
என்னுயிர் பறந்தோடுதே – பெண்ணே
என்னுயிர் பறந்தோடுதே.

பார்வையில் பகலாகி
ஆசையின் கனவான
ஆனந்த விடிவெள்ளிநீ – பெண்ணே
ஆனந்த விடிவெள்ளிநீ.

பயணத்தில் நான்பார்த்த
பாவையர் பலருள்ளும்
தேவதை நீதானடி – பெண்ணே
தேவதை நீதானடி.

தேவியே உன்காதல்
தேங்கிய என்நெஞ்சில்
நீயொரு பெண்பெட்டகம் – பெண்ணே
நீயொரு பொண்பெட்டகம்.

சுந்தரத் தமிழேயென்
நாவினில் நீயிருந்து
களிநடம் புரிவாயடி – பெண்ணே
களிநடம் புரிவாயடி.

எதனாலே?

ஒவ்வொரு அசைவிலும்
ஒருசில பூக்கள்
உதிர்வது எதனாலே?

           உயிரில் கலந்த
           மணத்தைப் பிரிந்த
           வாட்டம் அதனாலே…!

பிரிவது அறியாப்
பெண்ணே உனக்குப்
பிரியம் எதனாலே?

             அழகும் மணமும்
             அருகருகிருக்கும்
             அற்புதம் அதனாலே…!

நாரே நீயும்
தலையில் இருந்து
நடிப்பது எதனாலே?

             நறுமலர் தன்னை
             நயமுடன் கோர்த்த
             நளினம் அதனாலே…!


சிதறிக் கிடக்கும்
பூக்கள் மெல்லச்
சிரிப்பது எதனாலே?

             சிகையெனும் சிறையில்
             சிக்கிக் கிடந்த
             சிரமம் அதனாலே…!

விடுதலை என்பது
கெடுதலையாகிற
விசமம் எதனாலே?

             விழுவதை மிதிக்கும்
             பெண்ணே உந்தன்
             கால்கள் அதனாலே…!

சினிமா

கூழுக்கு வழியில்ல
குருபார்வ சரியில்ல
பாலுக்குப் பிள்ளையழ
படத்துக்குப் போவாக.
              சினிமாக் கொட்டகையில்
              சிலுக்கு ஆடுறத
              துணியே இல்லாம
              சுமீதா குளிக்கிறத
              ஏழாம்தரம் பார்க்க
              எடமே கெடைக்காம
              தவியாத் தவிக்கிறது
              தாத்தா மனசுங்க.

ஏசு படத்துக்கும்
“ஏ” முத்திரை
இருந்தாத் தான்
எங்க ஊர்ப் பாதிரியார்
எட்டிப் பாப்பாரு.
              ருக்குமணி ருக்குமணி
              அக்கம்பக்கம் என்ன சத்தம்?
              சின்ன சின்ன ஆசைகளைச்
              சீரழித்தது இந்தச் சத்தம்.

வெக்கம் கெட்டவங்க
வெத்துடம்பப் பாத்துருகிச்
சொக்கிக் கிடந்தவங்க
சொப்பனம் கண்டாக.
            மணி ரத்தினம்
            வைரம் முத்தென்று
            கொட்டிக் கொடுத்தோமே……
            ராமா! நாராயணா!

அடுத்த தலமுறைக்கு
ஆபத்து இல்லாம
எடுக்கும் படமெல்லாம்
இனியிருக்க வேணுமப்பா.

("ரோஜா" - படம் பார்த்ததும் எழுதியது)

காத்திருக்கிறாள்……

இவள் காத்திருக்கிறாள் –
பொருளாசையே இல்லாத
புத்தனுக்காக அல்ல;

திருமணம் என்பதனைப்
புரிந்து கொண்ட
திருவாளனுக்காகக்
காத்திருக்கிறாள்……

சீர்வரிசையே
கேட்காத
சீராளனுக்காகக்
காத்திருக்கிறாள்……

தங்கத்தைப் பெற்று,
தங்கமாய் வளர்த்து,
கன்னிகாதானம் தரும்
பெற்றோரிடம்,
தங்கம் கேட்காமல்
தங்கவரும்
தங்கமனம் பெற்ற ஒரு
தங்கத்திற்காகக்
காத்திருக்கிறாள்……

முல்லை அவளுக்குத்
தன்னையே தேராக்கும்
பாரி ஒருவனுக்காகக்
காத்திருக்கிறாள்……

ஒரு பேகனின் போர்வையில்
அவனோடு தானும்
போர்த்திக் கொள்ள
இந்த மயில்
இன்னும் காத்திருக்கிறாள்……

ஏதுக்குப் பெண் பெற்றாய்?

ஓம்பொன்னு
சமஞ்சாளா?
உறுப்படியாச்
சமைப்பாளா?
ஏம்பையன் நிறத்துக்கு
எடுப்பா இருப்பாளா?
ஆணழகன்
என்பதனால்
அவன் கொஞ்சம்
கருப்பு தான்;
மீனழகி
நிறமென்ன
எலுமிச்சம் பழம் தானே!
அதுக்கே தரவேணும்
அறுபது சவரன்தான்;
இதுக்கே பயந்தாக்க
ஏதுக்குப் பெண் பெற்றாய்?

துளிப்பாக்கள் 19

உள்ளே ஒன்று
வெளியே ஒன்று
வாழ்த்தியது வாய்.

******
ஏதேதோ சொன்னான்
பாசாங்கு செய்தான்
எதிர் முனையில் எவரோ!

******
புன்னகையும் கண்ணீரும்
ஆயுதங்கள் ஆயின
காயப்பட்டதோ காதல்.

******
அபாய அறிவிப்பு
எச்சரிக்கையாய் இருங்கள்;
தேர்தல் வருகிறது.

******
கோடம்பாக்கத்தில் தொடக்கம்
கோட்டையில் முடிவு
சினிமாக் கனவு.

******
பழைய பாயைப்
பாதியாய்க் கிழித்தனர்
பாகப்பிரிவினை.

பகட்டு

பட்டாடை பளபளக்க
சரம் சரமாய்  நகை பூட்டி
மாமிசமலை
மதர்ப்பாய் நடந்தது
மண்ணதிர......
ஒப்பனை இல்லாத
இயற்கை அழகின்
இதழோரப் புன்னகை
ஏளனம் செய்தது
 மெதுவாக.

ஆசிறியர் ஆசிரியராக......

அறியாமை இருளகல
அவதரித்த ஆன்மாவே!
நெறியான வழிநீயும்
நின்றொழுக வேண்டாவா!

தெய்வதமே தொழத்தக்க
தெய்வீகம் உனக்குள்ளே
நெய்தீபம் போல்நெஞ்சில்
நின்றெரிய வேண்டாவா!

கையளவு கற்றதிலே
காலளவு கற்பிக்கும்
கடனறிந்து கொண்டுதினம்
கற்றறிய வேண்டாவா!

வழிகாட்டும் விழியாக
விழிபேசும் மொழியாக
ஒளிதீபம் நீயாக
வலியறிய வேண்டாவா!

விதையே நீயாகி
விதைகளுக்குள் விதைக்கின்ற
வித்தையினை நீயறிந்து
வினைசெய்ய வேண்டாவா!

நீயறிந்து கொண்டதனை
நேர்படவே அறிவிக்கும்
நேர்த்தியினை நீயறிந்து
நேர்படவும் வேண்டாவா!

மாணவனே நீயாகி
மாணவனே ஆசானாய்
மனப்பாடம் செய்தேநீ
மாண்புறவும் வேண்டாவா!

வீணே பொழு‌‌தோட்டி
வெறுங்கதைகள் பேசிதினம்
நீனே இருக்கின்ற
நிலைமாற வேண்டாவா!

சாகாத இலக்கியத்தின்
சரித்திரமாய் எந்நாளும்
ஆசானே நீநின்று
அருள்புரிய வேண்டாவா!

ஆதாரம் நீயாகி
அவதாரம் தானாகி
தீயோரும் தொழத்தக்க
திருவாக வேண்டாவா!

(நல்ல ஆசான்களுக்கு மட்டும் நல்வாழ்த்துக்கள்)

சிகிச்சை

என்
நம்பிக்கை இலைகளை
உதிர்த்தபடி
காற்று……
மழை……
இடி……
மின்னல்……
நெருப்பு……

என்
உயிர் இலையின்
ஒற்றை ஓவியத்தை
எழுதப் போகும்
ஓவியனைத் தேடும்
காயப்பட்ட கண்கள்.

வெளிச்சம்

காயப்பட்ட கண்களில்
காணாமல் போனது காட்சி
கசியும்
கண்ணீர்த் தாரைகளில்
கரைந்தது கனவு;

விளிம்பில் நின்றபடி
விசனப்பட்டது
வாழ்க்கை;

தடயங்களைத் தேடித்
தடவிய கைகளில்
தைரியம் தந்தது
மனசு;

காலத்தின் கல்லறையில்
கண்சிமிட்டும்
வெற்றியின் வெளிச்சம்.