பத்து மார்க்

                                                                 பத்து மார்க்.

          மக்கும் குப்பையோ .... மக்காக் குப்பையோ.... பொதியைக் குறைத்தால் போதும். குப்பை =கல்வி. மெக்கேலாவின் கல்வி முறைக்குச் சரியான குறியீடு குப்பைதான்.
       
          இந்த லட்சனத்தில் 'ஜெயித்துக் காட்டுவோம்',என்று சத்தமில்லாமல் சமர் புரிவதில் எல்லோருமே சமத்தாய்க் களமிறங்கியிருப்பது தவிர்க்க முடியாத சாபக்கேடு.
       
          ஏதேதோ கனாக் கண்டவர்களும், சவால் விட்டவர்களும், ஆவலாய், கவலையாய், அவஸ்த்தையாய் அலைந்தவர்களும், எதிர் பார்த்த, பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின.
       
          படித்த லட்சணமும், படிப்பித்த லட்சணமும் வெட்ட வெளிச்சமாய் வீதிக்கு வந்தன. தேர்தல் முடிவுகளைவிடத் தேர்வு முடிவுகளின் அதிர்வுகள் விநோதமானவை..... விபரீதமானவை....
       
          தலையில தலையில அடிச்சேன்.... அடங்காத நாயி ஆட்டம் போட்டுட்டு... முழுசா மூணு பாடத்துல பெயிலாகி நிக்கிறான்.... முட்டாப்பய....

          அப்பன் குடிகாரன், ஆத்தா கைநாட்டு.... பிள்ளைகளப் பாரு.... ஒன்னுக்கொன்னு வீச்சா.... கஞ்சிக்கு இல்லாட்டியும், படிப்புல யாரும் மிஞ்ச முடியாது....

          இவன்லாம், தேருவான்னே  நெனைக்கல.... பஸ்ட்  அட்டம்ட்லையே பாசாயிட்டான்யா....

          எலே .... பொட்டப்புள்ள மாதிரி விசும்பாதலே.... போனப் போகுது, அக்டோபர்ல பாத்துக்கலாம்.... அதுவும் இல்லாட்டி இருக்கவே இகுக்கு நம்ம தொழிலு.... இன்னொரு கடையப்  போட்டுக்  காலாட்டிக்கிட்டே, காலம் தள்ளலாம்....

          இப்படி, இன்னும், எத்தனை எத்தனையோ சம்பாசனைகளும் சங்கதிகளும் எல்லோரும் கேட்பதும் பார்ப்பதும் சகஜம்தான்.

          ஆனால் வித்தியாசமான, விசித்திரமான சம்பவம்தான், இந்தக் கதையின்.... இல்லை.... நிஜத்தின் நிஜம்.

          ஒரு குடும்பமே கலவரத்தின் களேபரத்தில் கசங்கிக் கிடந்தது.... அதிர்ந்துபோய் உட்கார்ந்திருந்தார் அப்பா ராமமூர்த்தி; எவரெவர் முகமேல்லமோ அவர்முன் நிழலாடி  நின்றன.... எவர் முகத்திலும் முழிக்க முடியாதவராய் நெகிழ்ந்தார்.... ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தாள் அம்மா.... ஏழாவது போகப் போகிற தங்கைகூட ஏளனமாய்த்தான் பார்த்தாள்....

          கணக்கு டீச்சர் காயத்ரி மேடம், போனில் கூப்பிட்டு, வறுத்து எடுத்து விட்டார்; தன்னைக் கேவலப் படுத்திவிட்டதாகக் கடிந்து கொண்டாள் தமிழம்மா வள்ளித்தாய் .

          பேச்சு, கவிதை, ஓவியம், கபடி, கைப்பந்து, கராத்தேன்னு வெட்டி வேல செய்யாதன்னு எத்தனதடவ எச்சரிச்சேன்.... கேட்டியா.... நீ வாங்குன கப்பும் மேடலுமா காப்பாத்தப் போகுது? பொரிந்து தள்ளினாள் ஹெட்மிஸ்ட்ரஸ் கீதாக்கண்ணன்.

          நொந்து நூலாகிப் போன, மீனாகுமாரி, கம்ப்யூட்டரில் எடுத்த, மார்க் லிஸ்ட்டை, மூன்றாவது முறையாகக் கூட்டிப் பார்த்தாள்.... எப்படிக் கூட்டினாலும், 490 தான் வருகிறது.

          எங்கே போனது 10 மார்க்....? எப்படிப் போகும் 10 மார்க்....?
                                           
                                                               *  *  *  *  *
 கிளைக்கதை:

               ரீ வேல்யுவேசன் போட்டார்கள்....
                           கணக்குல 5 வந்து செண்டம் ஆனது.
                           தமிழ்ல 2 வந்து 99 ஆனது.      
                இப்போ டோட்டல் 497.
                            அப்படியானால், 496 ல் ஸ்ட்டேட் பஸ்ட் என்று பேப்பரிலும் TVயிலும் போஸ் கொடுத்து, பேட்டி கொடுத்து, அலட்டிக் கொண்ட அமலாவையும் அவள் படித்த சூப்பர் பள்ளியையும் என்ன செய்வது....?                
                                  
கிளைக்கதையின் கிளைக்கதை:

                  விட்டுப் போன 3 மார்க், நெத்தியில் மூணு விரல் நாமமிட்டது.
                             நடந்த கதை நடந்ததுதான்.
                             முடிந்த கதை முடிந்ததுதான்.

0 comments:

Post a Comment