வங்கி

                                                               வங்கி

                                            காசாளர் வேலை
                                            எண்ணிக் களைத்தான்
                                            காசில்லை கையில்.
என்ற, என் கவிதை, கொஞ்சம் பொய்யாகிப் போன சூழலை, வங்கியில் பார்த்தேன்.பணத்தை எண்ணிப் பார்க்கவும், கள்ள நோட்டைக் கண்டு பிடிக்கவும், இயந்திரங்கள் வந்துவிட்டன.எத்தனை முறை எண்ணினாலும் இயந்திரம் களைப்பதில்லை. ஆனால் இப்போதும் ஏதோ ஒரு வங்கியின் காசாளர் எண்ணிக் களைக்கா விட்டாலும், கையிலும் பையிலும் காசில்லாத கவலையில், களைத்தும் சலைத்தும் தவிக்கலாம்.

                 குளிர்சாதன வசதி செய்யப்பட்ட, தனியறையில் இருந்தபடி,மேலாளர், இயந்திரத்தனமாய், ஏதேதோ செய்துகொண்டிருந்தார்.

                  11 மணி.... பரபரப்பில் எல்லோருமே இயந்திரத்தனமாகத்தான்  இருந்தார்கள்.ஏதோ ஒரு ஒழுங்குக்குள் ஓடிக்கொண்டிருந்தன வேலைகள்....

                  காசோலையைக் கொடுத்துவிட்டு 11ம் எண் வில்லையைப் பெற்றுக் கொண்டு காத்திருந்தேன்.

                  சுற்றுச் சுவர்களில், குட்டிக் குட்டி எழுத்துக்களில் ஆங்கிலத்திலும், இந்தியிலும் அறிவிப்புப் பதாதைகள் தொங்கின; சம்ரதாயமாகத்தான் இருந்தனவே ஒழிய, அதுபடி ஏதும் நடப்பதாகவோ, யாரும் கண்டு கொண்டதாகவோ, தெரியவில்லை.

                  எழுதிவிட்டுத் தருவதாக, ஏன் பேனாவை, ஒருவர் இரவல் கேட்டார்; முன்னெச்சரிக்கையோடு, மூடியை எடுத்துக் கொண்டு,பேனாவை மட்டும் கொடுத்தேன்.

                 குழி விழுந்த கன்னமும், சுருங்கிய கண்களும், தளர்ந்த நடையுமாய், வத்தலும் தொத்தலுமாய், ஒரு பாட்டி உட்கார்ந்திருந்தார்....

                  இந்தக் கிழவிக்கு, இங்கென்ன வேலை...? பரட்டைத் தலையும், அழுக்குப் பிடித்த சேலையுமாய், எதற்கு வந்திருப்பார்...? யாராவது கூட்டி வந்திருப்பார்களோ... சுற்று முற்றும் பார்த்தேன்....

                  கலர் கலராய்க் காகிதங்கள் ஒட்டியிருந்தார்கள். ஆயுத பூசையையோ, புத்தாண்டையோ கொண்டாடியிருக்கலாம்....

                  பலரும் வந்து போகிற பொது நிறுவனத்தில், சாமி படம், எப்படி சாத்தியப்பட்டது...?

                   அடுப்படியையும் தெருப்படியையும் தாண்டாத, அம்மணிகள் எல்லாம், சுய உதவிக் குழுக்களில் சேர்ந்து, வங்கிப் படிகளில் ஏறத் தொடங்கி விட்ட சூழலில்,குட்டி குருமாக்களும் வங்கியில் வரவு செலவு செய்வது சகஜமாகி விட்டது,

                    காசாளர் கூண்டுக்கு வெளியே, அவசரமும் அவஸ்த்தையுமாய்ச்  சிலர்.... பெருமையும் மிடுக்குமாய்ச் சிலர்.... அடுத்தவர் கையில் இருக்கும் பணத்தையும், பூர்த்தி செய்த எழுத்தையும், நோட்டமிட்டபடிச் சிலர்....

                     நம்ம பணத்தைப் போட்டுட்டு, நாம எடுக்கப் போனா, ஏதோ.... அவங்க தேட்டக் கேட்ட மாதிரி அதட்டல், அதிகாரம், அது இருக்கா? இது இருக்கா? யாரு கையெழுத்து? கேள்வி மேல் கேள்வி கேட்டு, நொனனட்ன  பண்ணுவாக....

                    ஹைதர் அலி காலத்தில், கணிப்பொறிகள் இல்லையே.... பிறகு எப்படி வங்கிக் கணினிகள், வேலை செய்யாமலே வேலை செய்கின்றன-- அலுவலர்களைப் போலவே...!

                    சொடுக்கிச் சொடுக்கி, அலுத்துப் போய் ஆத்திரமாய்ப் பொத்தானை அழுத்துவார்.... அசைந்து கொடுத்த பிரின்ட்டரில், பேப்பர் சிக்கும்....

                    நாலே வரியில் இருக்க வேண்டிய ஸ்டேட்மெண்ட்டை, பக்கத்துக் கொன்றாய், நாலு பக்கத்தில் அச்சடித்துத் தரும் ஆபீசர் ஒரு பக்கம்....

                    பேப்பரை மிச்சப் படுத்துகிறேன் பேர்வழி  என்று, சலான்களைத் தன் கஸ்ட்டடியில் வைத்துக் கொண்டு,ஒரு கையில் இரட்டைக் குழல் துப்பாக்கியைப் பிடித்தபடி, எச்சிலைத் தொட்டுத் தொட்டு, ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு சலானாய், எடுத்துக் கொடுக்கிற, செக்யூரிட்டி ஒரு பக்கம்.....

                     லோன் வாங்க லோல்பட்டு, அல்லாடுகிறவர்கள் ஒரு பக்கம்....

                     இப்படியாகப் பல வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறது  பேங்க்.

                     பாஸ் புத்தகத்தில், கோடு ஒரு பக்கம் இருக்க, பதிவு இன்னொரு பத்தியில் இருக்கும்... நேர இருந்தாலே புரியாது.... பற்றா வரவான்னு தெரியாது.... ஏதோ நம்பிக்கையில் -- திவால் ஆனா வங்கிகளிலும் -- நடவடிக்கைகள் தொடர்கின்றன....

                     கூட்டுறவு வங்கிகளின், தேர்தல் அடிதடிகளில், மரண பயத்தோடு, கரைவேட்டிகள் கிழிபடுவது தனிக் கதை....

                     டாஸ்மாக் வரிசையிலோ, டாலர் தேசத்துப் பாஸ்போர்ட் வரிசையிலோ, காத்திருந்து கடுக்காத கால்கள்,வங்கி வரிசையில் வாடித் தவித்தன....

                     டோக்கன் 6... டோக்கன் 6... என்ற அழைப்பு வந்தது....என்னைப் போலவே பலரும் தங்கள்  வில்லை எண்ணைப் பார்த்தார்கள்....

                     ஆறு... அது யாரு...? என்று நானும் தேடினேன்....

                     உள்ளே இருந்து சப்த்தம் கேட்டது.... அந்தக்  கெழவிக்குத் தான்யா கொடுத்தேன்.... இருக்குதா பாரு...

                     காக்கிச்  சட்டைச் சிப்பந்தி கிழவியை நெருங்கினான்....

                     ஏ  கெழவி...! எத்தன தடவ கத்துறது...? டோக்கன எங்க...?

                     பேந்தப் பேந்த விழித்தபடி, தன் மடியில் தேடிக் கிடைக்காமல், சிரமத்தோடு எழுந்து, அழுக்குப் புடவையை, உதறிப் பார்த்தாள்.... கிடைக்க வில்லை.

                     எப்ப வந்தாலும், ஒனக்கு, இதே பொழப்பாப் போச்சு... மாசந் தவறாம, எங்க உசுர, எடுக்க வந்துருவ....

                     எதையும் காதில் வாங்காத கிழவிக்கு, 'காது கேட்குமோ... கேட்க்காதோ...!'

                     ரூவா குடுங்க சாமி....

                     ஒனக்கு இன்னும் பணம் வரல....

                     நாலு நாளா இதையேதான சொல்றீக...

                     துணுக்குற்றேன்.... பாட்டிக்குக் காது கேட்க்கிறது.

                     டொய்ங்.... சத்தத்தோடு, உருண்டு புறண்டு, ஓடியது டோக்கன்... ஒரு குழந்தை, எடுக்க ஓடியது....

                     விசுக்கென்று எடுத்த ஒருவர், கவுண்ட்டரில் கொடுத்தார்....

                     ஓடிய குழந்தையும், குனிந்து எடுத்தது, ஒரு பேனா மூடி....

                     நினைவு வந்தவனாய்ப் பேனா  வாங்கிய ஆளைத் தேடினேன்... அடையாளம் நினைவில்லை.... ஆத்திரமாய்த் தேடினேன்....

                     கிழவி, படி இறங்கிக் கொண்டிருந்தாள்....

                     மூடியைக் குழந்தையிடம் கொடுத்தேன்....

                     குதுகூலமாய்க் குதித்தது குழந்தை.
                              

0 comments:

Post a Comment