மரபின் இலக்கணம் மாசறக் கற்று
உரனும் உணர்வும் உயிர்ப்புடன் ஊட்டின்
அரனும் அரியும் அதனதன் போக்கில்
கரனும் அறியும் கவி.

வெண்பா அகவல் விருத்தமொடு வஞ்சி
வண்பா கட்டளை வாய்த்த கலியென
நண்பா நயப்பா இயற்றினர் பண்டு;
புண்பா புனைவது போக்கு.

தளைகள் அசைகளும் தட்டாமல் யாப்பின்
கிளைகள் இலைகளும் வெட்டாமல் கீர்த்தி
முளைகள் முனைகளும் முட்டாமல் சீர்த்தி
வளைகள் வசப்பட வாழ்த்து.

வார்த்தைக்கு வார்த்தை வலிந்து வலிந்துமே
கோர்த்தது கோர்த்துக் குற்றம் குவிந்திட
சேர்த்தது சேர்த்துச் செய்த செய்யுளை
பார்த்தது பார்த்துப் பதை.

இங்கே இருக்கும் இவைகள் எவையுமே
மங்காத் தமிழின் மரபுக் கவிகளா?
எங்கே எதற்கு எதுவும் தெரியாது
பொங்கு கவிஞனே பொங்கு.

0 comments:

Post a Comment