எது கவிதை?
============
தோழி : எங்கே போகிறாய்?
ராதை : கண்ணனைப் பார்க்க....
தோழி : யாராவது பார்த்துவிட்டால்?
ராதை : இது இரவுதானே ....
தோழி : இது இரவுதான் ... நீ மின்னல் அல்லவா?

ஈரோடு தமிழன்பன் ஐயா எழுதிய கவிதையிது. இதில் "நீ மின்னல் அல்லவா?" என்ற கடைசி வரியே கவிதை. இந்த மின்வெட்டு மாதிரியான துய்ப்பே கவிதை. உணர்ந்ததை உணர்ந்தவாறு கற்பனை கலந்து உணர்த்தவல்லது கவிதை.தேர்ந்த சொற்சிக்கனத்தோடு நயம்படப் புனைய வேண்டும்.

1.அவன் இங்கு வந்தான்.   - உரைநடை.
2.இங்கு வந்தான்.                  - வசனம்.
3.வந்தான்.                                - கவிதை.

மூன்றும் ஒன்றே. படர்க்கை ஆண்பால் ஒருமை தன்னிலைக்கு வந்த வினையைக் குறிக்கிறது.

THE BEST WORD IN THE BEST ORDER - என்பது கவிதையின் முக்கியக் கூறு.

அளவான சொற்களில் நயம்படச் சொல்வது கவிதை.

இலக்கண வரம்புக்குள் எழுதுவன எல்லாம் கவிதைகள் அல்ல; அவை செய்யுள்களே. கம்பராமாயணத்தின் 10000 பாடல்களோ,சிலம்பின் 5005 வரிகளோ முற்றும் கவிதைகளல்ல.

செய்யுள் இலக்கணம் சரிபார்த்துச்
     செய்வன எல்லாம் கவியாமா?
நொய்யுள் நெல்மணி விளையுமென
     விதைப்பான எல்லாம் பயிராமா ?
போய்யுள் புரட்டைக் கலந்தபடி
     புலம்புவ தெல்லாம் போகட்டும்;
செய்யுள் எழுதும் தருமிகளே
     செய்யாதிருப்பீர் கவிக்கொலையே.

என்று நான் எழுதிய விருத்தத்தின் இரண்டாம் அடியில் மோனை இல்லை.

கவிதை பற்றிய புரிதலும், வாசிப்பும், பயிற்சியும், முயற்சியும், தொடர்ந்தால், கவிதை தன்னைத்தானே எழுதுவித்துக்கொள்ளும்.

வைரமுத்து:
------------------- 
 என்னை எழுதிய என்கவியே.... இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
உடம்பில் உறைகிற ஓருயிர் போல்.... உனக்குள்தானே நானிருந்தேன்.

ஒரு வரி சிலம்பு:
புகாரில் பிறந்தான்; புகாரிலேயே இறந்தான். -- கவிஞர் வாலி.

இருவரி ராமாயணம்:
புருவமெனும் வில் வளைத்தால் சீதை...
அந்தப் போதையிலே வில்லோடித்தான் ராமன். -- கவிஞர் சோம.சிவபிரகாசம்.

இப்படிக் கன்னத்தில் அறைந்து விட்டுக் காதுக்குள் போகும் கவிதைகள் படைப்போம்.