பரிசீலனை

     இப்பவே இப்படிக்  கொளுத்துதே,மட்ட மத்தியானத்துல என்ன ஆகுமோ என்று தவித்தபடி நடந்து, ஒதுங்க இடமில்லாமல் முச்சந்தியில் காத்துக் கிடந்து, வெகுநேரம் கழித்து, தடதடக்கும் சத்தத்தோடு தள்ளி நின்ற டவுன்  பஸ்ஸில் முண்டியடித்து ஏறி, கூட்ட நெரிசலில் பிதுங்கி, இரைச்சலையும் குமட்டலையும் சகித்து, இருபது கிலோ  மீட்டர் தள்ளி இருக்கும் பாளையத்தில் இறங்கி, மூன்று பர்லாங் நடந்து, தாலுகா ஆபிஸ் வந்தார் தர்மலிங்கம்.

     ஏம்ப்பா..... குடும்ப அட்டை வாங்க யாரைப் பாக்கணும்....?

     பாத்தா பத்தாது பெருசு; கவனிக்கணும் என்று கண்ணடித்தான் ஒருவன்.

     ''இந்த வயசுல உனக்கு எதுக்குயா குடும்ப அட்டை?'' கிண்டலடித்தான் இன்னொருவன்.

     எனக்கில்ல தம்பி..... என் பேரன் குடும்பத்துக்கு;பயலுக்கு வண்டிப் பெரியாறுல வேல; வாரத்துக்கு ஒரு நாள் தான் வீட்டுக்கு வாரான்; அதுவும் நாயத்துக் கிழமையாப் போகுது; அதான்..... நாமளாவது ஏற்ப்பாடு செய்யலாமேன்னு, மனு எழுதிக் கொண்டாந்தேன்..... 
   
     ஏ 3 கிளார்க்கப் பாருங்க..... 

     அவர எங்க போயித் தேடுறது?

     அதோ அந்த மாடியில ஏறி எடதுபக்கமாத் திரும்பினா சன்னல் ஓரமா 3 வது டேபிள்ல, கண்ணாடி போட்டு ஒரு வழுக்க மண்டையன் இருப்பாரு..... அவருதான் ஏ 3 கிளார்க்.

     பெரிய பெரிய  படியில நின்னு நின்னு ஏறி, மேல போனார் பெரியவர்..... 

     மாடி அறையில் யாரும் இல்லை; காத்தாடிகள் மட்டும் சுற்றிக் கொண்டிருந்தன..... பட்டப் பகலில் ட்யூப் லைட்டுகளும் எரிந்தபடி..... ஏதேதோ காகிதங்கள் போட்டது போட்டபடி..... 
    
     மின்வெட்டும், கும்மிருட்டும், கொசுக்கடியும் நினைவுக்கு வந்தவராய் வாசலில் திரும்பி நின்றபடி வேடிக்கை பார்க்கலானார்.....

     யார் யாரோ வந்து போய்க்கொண்டிருந்தார்கள்;கரை வேட்டிகளும், கட்சித் துண்டுகளும் கம்பீரம் காட்டிக் கொண்டிருக்க, அழுக்குச் சட்டையும் பரட்டைத் தலையுமாய் நலத்திட்ட உதவிகளுக்காக ஏங்கித் தவிப்பவர்க்களுமாய்த் தாலுகா ஆபீஸ் தனக்கே உரிய தடபுடலோடு காட்சியளித்தது.

     ஏ.... பெருசு.... அங்க என்ன நிக்குற....? எறங்கி வா....! டீ குடிக்கப் போயிருப்பாங்க.... பெறகு வா..... 

     தயங்கித் தயங்கிப் படி இறங்கினார் பெரியவர்; என்ன எழவுடா? ஆளாளுக்கு அதிகாரம் பண்ணுராய்ங்க..... 

     குல சாமியக் கும்பிட்டபடி திரும்பிப் பார்த்தார்..... மாடியில் இருவர் நிற்பதைக் கண்டு, மீண்டும் படியேறினார்..... முட்டி வலிக்க மேல்படியில் கால் வைத்த போது, அவர்கள் இறங்கத் தொடங்கினார்கள்..... 

     சார் என்று பெரியவர் அழைத்தவுடனே, நாங்களும் உங்களைப் போலத்தான் அப்ளிக்கேசன் கொடுக்க வந்தோம் என்று சொல்லிக் கொண்டே இறங்கிப் போய்விட்டார்கள.

     பெரியவர் படியிலேயே உட்கார்ந்து விட்டார்; எது எப்படிக் கிடந்தாலும் கிடக்காட்டியும், வேலவெட்டி நடந்தாலும் நடக்காட்டியும், பொழுது போறதும், வயிறு பசிக்கிறதும், சரியா நடந்துரும்;  இதுக்குத்தான் சொன்னாங்களோ..... ''கால் காசு உத்தியோகம்னாலும் கவர்மென்ட் உத்தியோகம் பாக்கணுமின்னு;'' 

     மேல ஒருத்தர் ஏறி வந்தார்..... 

     வருவது ஆபிசரா....? இல்ல ..... நம்மளமாதிரி  வெவரங் கெட்ட மனுசனா....? கண்களால் எடை போட்டுக் கொண்டிருந்தார் தர்மலிங்கம். 

     தர்மம் கேட்க்க வந்தவரோ என்று நினைத்தோ என்னவோ, அவரைக் கண்டு கொள்ளாமலேயே  உள்ளே நுழைந்து, தன் இருக்கையில் உட்கர்ந்து எதையோ புரட்டிக் கொண்டிருந்தார் - குமாஸ்தா குமார். 

     மெல்ல எழுந்து.... உள்ளே நுழைந்து.... சார்.... சார்.... என்று தயங்கி அழைத்தவர், சற்று குரலை உயர்த்திக் கூப்பிட்டார். 

     குனிந்த தலை நிமிராமலேயே படித்துக் கொண்டிருந்தார் குமாஸ்தா. 

     காது.... கேக்காதோ.... யோசித்துக் கொண்டிருந்த போது, உள்ளே நுழைந்தார்.... இன்னொரு சாரோ.... மோரோ.... 

     பெரியவரை இவரும் கண்டு கொள்ள வில்லை;  அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள்; அவகாசம் தந்து காத்திருந்தார் தர்மலிங்கம். 

     கங்குலி இப்படிக் கவுதுப்புட்டனே! சேவாக் அதுக்கும் மேல..... 

     இவனுகளுக்கு இதே பொழப்பாப் போச்சு..... ஒரு தடவ ஜெயிச்சா, ஒம்பது தடவ தோப்பாணுக..... 

     தோக்குறதுக்குன்னே போவாயிங்களோ....? விளம்பரத்துக்கு போஸ் கொடுக்குறது.... கவர்மெண்டு காசுல ஒலகம் சுத்துறது.... போனாப் போகுதுன்னு பேட்டப் பிடிக்கிறது.... பந்தா காட்டுறது.... அவுட்டான சொரனையே இல்லாம வெளிய வாரது.... கோக் குடிக்குறது..... ஊர் மேயுறது..... இந்த லட்சனத்துல கோச் சரியில்ல.... கோர்ட் சரியில்லன்னு உதார் விடுறது.... எல்லாம் வெளங்கா மூஞ்சிக..... 

     இதுல சரத்பவார் வேற தாம் தூம்ன்னு ஸ்டேட்மென்ட் விடுறது.... இவருக்கு விவசாயம் விளையாட்டாப் போச்சு.... விளையாட்டு வெனயாப் போச்சு..... 

     சுந்தரம் பேசியதையோ, பெருசு கூப்பிட்டதயோ, காதில் வாங்காமலேயே சினிமா கிசுகிசுவை சிலாகித்துக் கொண்டிருந்தான் குமார். 

     ஏம்ப்பா.... குடும்ப அட்டை வாங்க, எழுதிக் கொண்டாந்திருக்கேன், யாரு கிட்டக் கொடுக்கணும்?
     
     பெருசு.... இதுக்கெல்லாம் காலையிலேயே வரவேணாமா? A3 குப்புசாமி R I . மீட்டிங் குக்குப் போயிட்டாரே! நாளைக்கு வருவாரோ மாட்டாரோ.... எதுக்கும் நாளான்னிக்கு வாய்யா....! 

     என்ன செய்வது....? அவுக அவுக வேலைய அவுக அவுகதான் பாக்கணும், என்கிற நினைப்போடும், குமாஸ்தா குமார் படித்துக் கொண்டிருந்தது 'சினிமா எக்ஸ்பிரஸ்', என்று தெரியாமலும், படி இறங்கினார் தர்மலிங்கம்.

******

     படிப்படியாப் போனாலும் பசையோட போனாத்தான் கவர்மெண்டுக் காரங்க கண்ணத் தெறப்பாங்க..... 

     தர்மலிங்கத்துக்கு விபரம் புரிந்தது.... 

     நாலஞ்சு தடவ அலஞ்சாச்சு.... நாய் பட்ட பாடாச்சு.... நாதாரிப் பொழப்பாச்சு... 

     தாலுகா ஆபீஸ்க்கு எதிரே மரத்தடியில் கொட்டகை போட்டு, மை கசியும் பேனாவும், மடி நிறைய ஆசையுமாய், ஆறாவது மகள் அல்போன்ஸ் மேரி கல்யாணத்துக்குக் காசு தேடும் கணக்கோடும், காத்திருந்த அடைக்கல ராஜிடம், அடைக்கலமானார் தர்மலிங்கம். 

     கசங்கி, வியர்வை மணக்க, பெருசு கொடுத்த காகிதத்தைப் படித்து விட்டு, புதிதாய் விண்ணப்பம் தயார் செய்து, ஒரு ரூபாய் கோர்ட் பீஸ் ஸ்டாம்புகள் ஐந்தை அடுத்தடுத்து ஒட்டிய களைப்போடு நிமிர்ந்தார் அடைக்கலம். 

     கையெழுத்துப் போட வேண்டிய பேரன் முருகானந்தன், வண்டிப்பெரியார் போயிட்ட விசயத்தைக் கவலையோடு சொன்னார் பெருசு. 

     அட.... இதுக்குப் போயி அலட்டிக்கலாமா....? அச்சு அசலாய், முத்து முத்தாய், முருகானந்தம் கைநாட்டை (கையெழுத்தைத் தான்) போட்டு, அசத்திய அடைக்கலத்துக்கு அப்போதைய வரவு முப்பது ரூபாய்.

     கவலையே படாதீங்க.... நானே சேத்துர்றேன்; வீட்டுல சொல்லி வைங்க; விசாரிக்க வருவாக; எல்லாம் நல்லபடியா நடக்கும்; நம்பிக்கை ஊட்டினார் அடைக்கலம்.

     நிம்மதியாய் நடந்தார் பெருசு.

****** 

     நடந்தது நடந்துருச்சு.... நிம்மதியா  இருங்க.... இன்னைக்கு நிச்சயமாத் தீர்ப்பு ஆயிறும்.... நம்மளக் கொஞ்சம் கவனிச்சிடுங்க - இது வக்கீல் குமாஸ்தாவின் வாயுறை.

     நாதியத்த பெருசு.... நீதிமன்ற வராண்டாவில் நின்றிருந்தார்....

     தொப்பை வயிறு தொங்க,கைதிகளிடம் தொங்கிக் கொண்டிருந்தார் ஏட்டையா.

     தாம்பு மாடு மாதிரி வெலங்கு போட்ட வெடலைங்க நிக்கிற ஸ்டைல பாத்தா, இந்த ஜென்மத்துல திருந்துவானுகன்னு தோனல.

     கவலையோடு காத்திருந்ததெல்லாம் கடன் கொடுத்த பார்ட்டிகள்தான்.

    எட்டாவது வாய்தாவில் சர்க்கார் தரப்பு ஆஜராகாததால் நீதிமான் ரவீந்திரன், ஆரவாரமான கோர்டில் அமைதியாய்த் தன தீர்ப்பை வாசித்தார்....

     ''பெரியவர் தர்மலிங்கத்தின் பேரன் முருகானந்தத்தின் விண்ணப்பத்தை உத்தமபாளையம் வட்டாட்சியர் மறுபரிசீலனை செய்ய இந்த கோர்ட் உத்தரவிடுகிறது''.

     தர்மலிங்கத்துக்குத் தலை சுற்றியது.... மறுபடியும் மொதல்ல இருந்தா....?

     முருகானந்தத்திற்கு நம்பிக்கை பிறந்தது - 'தன் பேரனுக்கு ரேசன் கார்டு கிடைத்து விடும்', என்று.

     அடைக்கலம் ஆனந்தப் பட்டார்.

விவஸ்த்தை

     என்ன  செய்கிறோம் என்ற விவஸ்த்தை இல்லாமலேயே என்னென்னவோ செய்கிறோம்..... 

     சாமி கும்பிடு..... சடங்கு சாஸ்திரம்..... அரசியல்..... தேர்தல்..... அக்கம் பக்கத்துப் பொறணி..... 

     செத்த வீடென்ற சிந்தனையே இல்லாமல் செல்போனில் கதைப்பது.....  கேலி பேசிச் சிரிப்பது.....

     இப்படித்தான், முல்லைபெரியாறு பிரச்சனையிலும் முண்டாதட்டி, மூர்க்கமாய் ஆர்ப்பாட்டம் செய்து, கூட்டத்தோடு கூட்டமாய்க் கோசம் போட்டு, மீடியாக்களிடம் வேஷம் போட்டு..... தடியடியில் சிக்காமல் தப்பித்து வந்தான்;

     காலையில் கொக்கரித்த கோழி இப்போது சிக்கன் 65 ஆக மணத்தது.....

     சாப்பிட்டுக் கொண்டே பக்கத்திலிருந்த புத்தகத்தைப் புரட்டினான்.....

     செம்பை முருகானந்தம் எழுதிய 'தவிப்பு' சிறுகதையைப் படிக்கப் படிக்க.....

   ''பதுங்கு குழிக்குள் பயந்து பயந்து,அண்ணன் தன் கண்களை மூடிக் கொண்டு, தங்கையின் வாயைப் பொத்தப் பொத்த,அடக்க முடியாத அலறலோடு பிள்ளைப் போராளி பிறந்த போது..... வெடித்துச் சிதறி வந்து விழுந்த ஒரு வளையல் கையில் ஒற்றை விரல் மட்டும் துடித்துக் கொண்டிருக்க....'' 

     துளாவிக் கொண்டிருந்த இவன் கைகளில்..... காலித் தட்டு.....

     மனைவியை முறைத்தான்.....

     சூடாக விழுந்தன 'சிக்கன் 65'


க(த)ண்ணீர்

     தேங்கிய  நதிகள் 
              அணைகளில் நின்று
                        தூங்கிய காலம் போயிற்று;

     ஏங்கிய நதிகள்
               எங்கோ இருந்து
                         ஓங்கிய விசும்பல் ஆயிற்று;

     வாங்கிய நீரை
               வானும் மண்ணும்
                          வழித்துக் குடித்து ஆர்க்கிறது;

     ஓங்கிய மரங்களை
                ஒடித்து எரித்த
                          ஓலைக் குடிசையும் வேர்க்கிறது;

      சினிமாக் கொட்டகை
                போனால் என்ன?
                            சீடி வகைகள் ஏராளம்;

       இனிமாக் குடித்த
                எளியவர் போல
                              சாக்கடை நதிகள் தாராளம்;

        போதாக் குறைக்கு
                 வீதிக் கிரண்டு
                           டாஸ்மாக் கடைகள் திறந்தாச்சு;

         தோதா நமக்குத்
                  தொலைவாய்ப் போச்சு
                             தேசியம் என்பதை மறந்தாச்சு;

         குடிக்கத் தண்ணீர்
                    கேட்டுக் குழந்தை
                               கண்ணீர் விட்டுக் கதறும்;

         குவளைத் தண்ணீர்
                     எடுக்கப் போன
                                அம்மா மனசு பதறும்; 

          தண்ணீர் விற்கிற
                    கடைகள் எல்லாம்
                               அடைத்துக் கிடக்குது ஐயா!

          கண்ணீர் விடுறேன்
                    கையில் பிடித்து
                               நக்கிக் குடிடா பையா!

கடலை


     பீச், பார்க்,பஸ் ஸ்டாண்ட் என்று பொது இடங்களில் பக்கத்தில் இருப்பவர்களைப் பற்றிய கவலையே இல்லாமல், ஒரு ஆணும் ஒரு பெண்ணும், பேசிக்கொண்டிருந்தால் அதற்குக் "கடலை போடுதல்" என்று கண்டுபிடித்துச் சொன்னவன் யாரோ? அதைப் பற்றி 4 பக்கத்துக்கு எழுதச் சொல்லியிருந்தார் அவன் வேலை பார்க்கும் பத்திரிக்கை ஆசிரியர்.


     பேனாவைப் பிடித்தபடி,பேப்பரை முறைத்தபடி,எதை எதையோ யோசித்தபடி இருந்தான்.... எழுத முடியவில்லை நினைத்தபடி....


     ''அழைக்காதே....அழைக்காதே.... அவைதனிலே.... என்னை....யே.... ராஜா....'' பாடல் ஒலித்தது; அவனது செல் போன் ரிங் டோன் அது.

      அவசரமாய் எடுத்தான்....

      எதிர் முனையில்....

     அடே மச்சி.... தெளிவாய் ஏதும் கேட்கவில்லை; சிக்னல் ப்ராப்ளம்; தொடர்பைத் துண்டித்தான்;

     தன் பள்ளிக்கூட நண்பனுடன், கிராமத்து வீட்டில் துள்ளித் திரிந்த நினைவுகள் அலைமோதின....

     கடலைக் காட்டில் தப்புக் கடலை பெறக்கி, சுட்டுத் தின்ற சுகமான நாள்கள்....

     எழுத்தே ஓடவில்லை.... எண்ணமெல்லாம் கடலைக்குள் இருக்க, எழுத்தில் மட்டும், எப்படிக் கடலை போடுவது....?

     அவன் மனைவியும் என்னங்க.... என்னங்க.... என்று இழுத்தாள்....

     ஏன்டி.... இப்படி எழுத விடாம அனத்துற....? என்று சிடுசிடுத்தபடியே திரும்பினான்.... 

     பக்கத்தில் வைத்தாள்-''பாலித்தின் பையில் பச்சைக் கடலை.''

     பேனாவை மூடிவிட்டு....

     பரபரப்பாய்க் கடலை போட்டான்.

வரம்.


     அவன் ஒன்றும்  பெரிய எழுத்தாளன் இல்லை; ஆனால் எழுதிக்கொண்டேதான் இருப்பான்....

     அவன் கவிஞனும் இல்லை;ஆனால் தன் பெயருக்கு முன்னால் கவிஞன் என்று போடாததற்காகத் தன் கல்யாணத்தையே நிறுத்தியவன்.....

     பேனாவில் எழுதப் பிடிக்காது; பென்சில்....பென்சில்தான் தன் சிந்தனை ஓட்டத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் என்று நம்பி, பென்சிலும் பேப்பருமாய் அலைபவன்.....

     100  வார்த்தைகளை வைத்துக் கொண்டு 400 பக்கங்கள் எழுதிவிடும் சாமர்த்தியத்தைத் தெரிந்தவர்களிடமெல்லாம் படித்துக் காட்டிப் பரவசப் படுவான்.....

     ஓடி ஒழிந்தவர்களும், பின்னால் பேசியவர்களும் பாக்கியசாலிகள்.

     பாவப்பட்ட ஒரே ஜென்மம்..... தன் இஷ்ட தெய்வத்திடம் மன்றாடிக் கேட்டது விவாஹரத்தல்ல.....

     செவிடாய்ப் போகும் வரம்.