அரும்புகளின் ஆசை

எதிர்வீட்டுப் பிள்ளை
எங்க ஜாதியில்லை;
புதிர் போட்டு அம்மா
பேசுறதோ தொல்லை.

மாடிவீட்டு மாமா
மகனப்பாரு ஜோரு;
கூடி நாங்க ஆட,
கூடுதில்ல பாரு.

எங்களோட மனசு
எவருக்குமே தெரியல;
உங்களோட மனசு
எங்களுக்கும் புரியல.

பள்ளிவாசல் பார்த்தபோது
வணங்கிப்புட்டா சீத்தா;
கிள்ளிக் காத திருகிப்புட்டார்
கோபக்காரத் தாத்தா.

பொங்க சோறு திங்கும் போது
பொட்டு வச்சா ஆத்தா;
எங்க வீடு வந்ததுக்கு
எதுக்கடிச்சார் அத்தா?

நற்ச்செய்திக் கூட்டத்துக்கு
நாங்களெல்லாம் போனோம்;
கர்த்தரோட அப்பமெல்லாம்
கன்வெர்டுக்கு மட்டும்.

ஜாதியில்லை என்ற பாட்டைத்
தமிழய்யா சொன்னார்;
நாதியில்லை கேட்பதற்க்கு
நாங்களென்ன செய்ய?

ஜாதிச் சான்று வேணுமின்னார்
பெரிய வாத்தியாரு;
நீதிநெறிச் சாரமெல்லாம்
நித்தம் பேசுவாரு.

அவரைச் சொல்லிக் குத்தமில்லை
அரசு ஆணைஅப்படி;
எவரைச் சொல்லி என்ன செய்ய
இந்தியாவே இப்படி.

எங்களைப்போல் இருந்தவங்க
இப்பவுள்ள பெருசுங்க;
எங்களையும் உங்களைப்போல்
மாத்துறது ஏனுங்க?

சாமிபேரச் சொல்லிச் சொல்லி
சாகடிச்சது போதுமே;
பூமியினித் தாங்காது
பூகம்பம் ஆகுமே.

ஜாதிமத பேதமெல்லாம்
நாய் நரிக்கு இல்லையே!
ஜாதி பாத்து மணப்பதில்லை
சாமந்தி முல்லையே!

காது மந்தமானவங்க
கவனமாகப் பாருங்க;
சாது நாங்க செய்யுறது
சரித்திரமா மாறுங்க;


சாமிகளின் சங்கமத்த
சாமி நாங்க நெய்யுறோம்;
பூமியெங்கும் ஓர் குலமாய்ப்
பூமணக்கச் செய்யுறோம்.

அரும்பின் ஆசை

பள்ளிக் கூடம் போகலாம்;
பாட்டுப்பாடி ஆடலாம்;
துள்ளித் துள்ளி ஓடலாம்;
துடுக்குத்தனம் பண்ணலாம்;

ஆடிப்படித் திரியலாம்;
ஆனந்தமாய் இருக்கலாம்;
கூடிப்பேசிக் களிக்கலாம்.
கும்மாளம் தான் போடலாம்.

என்று எண்ணி இருந்தவன்
இப்போதென்ன செய்கிறான்?
ஒன்னு கூட நடக்கல
ஒடிஞ்சு போயிக் கிடக்கிறான்.

வேலை வெட்டி செய்யிறான்;
வேகாமலே வேகுறான்;
ஓலக் குடிசை ஒழுகுதுன்னு
ஓட்ட நாழி வைக்கிறான்.

அழுக்கு பிடிச்ச சட்டைய
அடிச்சுத் தொவைக்க முடியல;
இழுத்துப் பிடிச்சுக் குத்தவே
ஊக்கு வாங்க முடியல.

கால்வயித்துக் கஞ்சிய
காலையில குடிச்சவன்;
மேல் மாடி வீட்டுல
மேஜையில்ல தொடைக்கிறான்.

பஞ்சு மிட்டாய் விக்கிறான்;
பழைய பேப்பர் பொறுக்குறான்;
பிஞ்ச செருப்பு தைக்கிறான்;
பிட்டுத் துணி விக்கிறான்.

அப்பனாத்தா சரியில்ல;
அவனுக்கினி வழியென்ன?
எப்பனாச்சும் சாமி வந்தா
இவனுக்காக வேண்டுவேன்.

துளிப்பாக்கள் 11

மகப்பேறு மனை
சேர்க்கை மின்பதிவு
இடமில்லை பள்ளியில்.

****** 
பிறக்கவும் இடமில்லை;
புதைக்கவும் இடமில்லை;
இனப்பெருக்கம் செய்யாதே.

****** 
அழுகிய பிணங்கள்
அர்த்தப்படுத்தின......
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

****** 
பசியோடு விதைத்தான்;
பசியோடு அறுத்தான்;
பசியோடு படுத்தான்.

****** 
அதே மனைவி
அப்படியே இருந்தாள்……
போகி - போய்விட்டது.

****** 
மலர்களில் மாற்றம் இல்லை;
மனங்களில் முரண்பாடுகள்;
வேதனையில் விதவைப் பூக்காரி.

துளிப்பாக்கள் 10

கண்ணகி சிலை
சிலம்புக்கு என்ன விலை?
உள்ளே கூழாங்கற்கள்.

****** 
நிலவைப் பிடித்தேன்
முத்தம் கொடுத்தேன்
கன்னத்தில் கடித்தது – குழந்தை.

****** 
விளைநிலங்களில் வீடுகள்
வீதியில் கிடந்தான் உழவன்;
நினைவுச் சின்னமாய்க் கலப்பை.

****** 
சன்னலைத் திறந்ததும்
சட்டென மறைந்தது……
சந்தோச நிலா.

****** 
சமைத்து விளையாடிய போது
சமைந்த பெண்
சமைத்து விளையாடுகிறாள் – இப்போதும்.

****** 
பொய்கள் இலவசம்
போலிகள் புதுவேசம்
தேர்தல் தேரோட்டம்.

உடன்பிறப்பே……!

நீ என் தங்கை;
உன் கணவன்
என் மைத்துனன்;
உன் பிள்ளைகளுக்கு
நான் தாய்மாமன்;
நம் உறவு முறைகளில்
நமக்குச் சந்தேகம் இல்லை.

             பிறந்த நாள்……
             திருமண நாள்……
             புத்தாண்டு……
             பண்டிகைகள்……
தொலைபேசியில் கூட
வாழ்த்திக் கொள்ள
அனுமதி இல்லை.

              ரக்ஷா பந்தனில்
              நீ
              கற்பனையில் கட்டும்
              ராக்கியை
              நான்
              கழற்றுவதே இல்லை.

வெவ்வேறு மதத்தில்
வெவ்வேறு ஜாதியில்
வெவ்வேறு பெற்றோருக்குப்
பிள்ளைகளாய்ப் பிறந்ததுதான்
பிழையா தங்கையே!

              இதுதான் முடிவென்றால்
              இல்லை வெறு வழியென்றால்
              அமைதியாய் இருப்போம்
              அசை போட்டபடி.

துளிப்பாக்கள் 9

பத்தர்கள் கூட்டம்
எண்ண முடியவில்லை;
கம்பி எண்ணியது காவி.

****** 
காவியைச் சுற்றிக் காவலர்கள்
நீதி தேவதை நெளிந்தாள்;
பார்வையில் கற்பழிப்பு.

****** 
கற்பழிப்பு வழக்கு
சாட்சி இல்லை இதற்கு
விடுதலையானது காமம்.

****** 
காம வெறியன்
தப்பித்துக் கொண்டான்
“கல்லாய்” அழுதாள் கண்ணகி.

****** 
ஏக்கத்தோடு பக்தை
சிரித்துக் கொண்டே சாமியார்
சிலிர்த்தன சிறைக்கம்பிகள்.

துளிப்பாக்கள் 8

காவல் தெய்வத்தையே
காவல் காத்தான்
உண்டியல் நிரம்பவில்லை.

****** 
நிரந்தரம் இல்லா வாழ்வில்
நிரந்தரம் ஆனது
சாவு.

****** 
தொடர்பு கொள்ள முடியாத
தொலைபேசி எண்
அவசரபோலீஸ் 100.

****** 
பொய்யும் பொய்யும்
ஒன்று கலந்தன……
தேர்தல் கூட்டணி.

****** 
பாவ மன்னிப்புக் கேட்ட
எலிப் பொறியை
ஏளனம் செய்தது தூண்டில்முள்.

******
பட்டுப்பூச்சிகள் பணியில் இருந்தன
கடையின் பெயரோ
வெட்டிங் கலெக்சன்ஸ்.

******
முதிர் கன்னிகள்
விற்பனை செய்தனர்
முகூர்த்தப் பட்டுகள்.

கொடுப்பினை

யாரோ தவமிருக்க
யார்யாருக்கோ
வரம் கிடைக்கிறது:
           தவறு –
           தவமிருந்ததா?
           வரம் கொடுத்ததா?
           தட்டிப் பறித்ததா?
விட்டுக் கொடுத்ததா?
விடை தெரியாத வினோதம்
வினாக் குறியாய் விரியும்.

துளிப்பாக்கள் 7

அம்மா ஆடு இலை
அலுத்துக் கொண்டது பிள்ளை
சேனலை மாற்ற முடியாதா?

****** 
பளபளக்கும் பங்களா
பளிங்குக் கழிவறை
வேறு என்ன செய்வது?

****** 
பெண்னைப் பிடித்தது
பட்சணம் பிடித்தது
சீர்வரிசை பிடித்தது. (பிடிக்கவில்லை)

****** 
செக்கு மாடுகளை
ஜோடி சேர்த்தனர்
இழுத்தன இடவலமாய்.

****** 
சந்தோச வாசனை
மறைத்துக் கொண்டது
திருமணப் பந்தல்.

****** 
மருமகன் வந்து
மாமனாருக்குத் தந்தான்
மரணப் பரிசு.

துளிப்பாக்கள் 6

உரித்த கோழி 60 ரூபாய்
உயிருடன் கோழி 40 ரூபாய்
உயிருக்கு விலை இல்லை.

****** 
ஓரத்து இருக்கையில்
உட்காரச் சண்டை
ஊர் வந்துவிட்டது.

****** 
நேரம் என்ன?
பார்த்துச் சொல்வதற்குள் –
முள் நகர்ந்துவிட்டது.

******

பூந்தோட்டத்தில்
பூச்சிமருந்து தெளித்தார்கள்
மணம் மாறவில்லை.

****** 
வெள்ளை யூனிபார்ம்
கருப்பு ஷூ
சிணுங்கும் குழந்தை.

****** 
அடுத்த தேர்தலின்
அறுவடைக்கு
ஆயுதம் செய்வோம் வாருங்கள்.

துளிப்பாக்கள் 5

அடிக்கடி உடைத்துக்
கொள்கிறது அணை
கன்னத்தில் கண்ணீர். 

****** 
சுண்டெலிக்கு
யானை மீது காதல்
எலி – ஆணா? பெண்ணா?

****** 
ஆகாசக் கோட்டை
அற்புதமாய்க் கட்டினோம்
அஸ்திவாரம் போடத்தான் ஆளேயில்லை.

****** 
வறண்ட பூமியின்
திரை அரங்குகளில்
வியர்வை வெள்ளம்.

****** 
எடுத்துப் போட்ட
இலையில் இருந்தது
வாழ்கையின் வாசனை.

******
எடுத்துப் போட்ட
இலையில் இருந்து
எடுத்தான் - வாழ்க்கையை.

******
பசித்த வயிரோ பசித்திருக்கும்
புசித்த வயிரே புசித்திருக்கும்
ஆட்சி மாற்றம் அடுக்கடுக்காய்.

வரவேற்பு

எத்தனை எத்தனை
வரவேற்புகள்.....
மாநகராட்சி
அன்புடன் வரவேற்கிறது.....
தொலைத்தொடர்ப்புத் துறை
பிரியமுடன் வரவேற்கிறது.....
சரவணபவனும்
முனியாண்டி விலாசும்
முந்திக் கொண்டு வரவேற்கின்றன.....
எல்.ஐ.சி..... ஏ.வி.எம்..... ஆர்.எம்.கே.வி.....
எவையெவையோ வரவேற்கின்றன.....
நான்
ஆசையாய்த் தேடிப்போன
என் பிள்ளை கேட்டான் -
'எதற்கு வந்தாய்?'

துளிப்பாக்கள் 4

நேற்று குழந்தை
இன்று குமரி
நாளை - அடிமை/அரசி.

****** 
இந்தச் சந்தையில்
எல்லாம் கிடைக்கும்
எனக்குத் தேவை – அம்மா அப்பா.

******
தூரம் அதிகமென்ற
துயரம் ஏதுமில்லை
ஹலோ...... ஹலோ......

******
மணியைப் பார்த்து
மணியை அடித்தான்
மணிப்பொறிக்கு ஓய்வில்லை.

******
ராமனும் லட்சுமணனும்
அடித்துக் கொண்டார்கள்
ராவணன் மனைவி யாருக்கென்று.

******
கண்ணகியா சீதையா?
பட்டிமன்றத்தில் –
பாஞ்சாலி சபதம்.

துளிப்பாக்கள் 3

தரிசு நிலத்தில்
உழைத்துக் க(ளை)ளித்தான்,
விளைந்த பயிரில் வியர்வைத் துளிகள்.

******
சேறும் சகதியுமாய்
வண்ணத்துப் பூச்சிகள்
நாற்று நடும் பெண்கள்.

******
வரப்பு கட்டி
வரம்பு கட்டினர்
வற்றிப் போனது வாய்க்கால்.

******
நேற்று வயல்.....
இன்று தரிசு.....
நாளை - ரியல் எஸ்டேட்.

******
நேற்று வழக்கு.....
இன்று வாய்தா.....
நாளை - மறுவாய்தா.

******
நேற்று இட்லி.....
இன்று உப்புமா.....
நாளை - பட்டினி.

துளிப்பாக்கள் 2

பரிசுக் குவியலுக்குள்.....
கசங்கிக் கிடந்தது
வாழ்த்துக் கவிதை.

******
மகளுக்கு வளைகாப்பு.....
பிரசவ வலியில் -
தாய்.

******
கற்பூரத்தட்டில் காசைப் பார்த்தான் – பூசாரி
கருவறையில் கடவுளைப் பார்த்தான் – பக்தன்
எதையுமே பார்க்கவில்லை – கடவுள்.

******
ஒதுக்கீடு வேண்டாம்;
சலுகைகள் வேண்டாம்;
சாதியும் வேண்டாம்.

******
வலையில் சிக்குமா?
நீரில் மிதக்கும் -
நிலா.

 ******
அடிக்கும் போது வேடிக்கை;
அடங்கிய போது ஆர்ப்பாட்டம்;
அடடா அரசியல் வாடிக்கை.