தமிழர் திருநாள்

தந்தனன தானதன தானா – தன
    தானதன தந்தனன தான.

தமிழன்னை தானெந்தன் பேச்சு – அவள்
    தந்ததுவே கவிதையெனும் மூச்சு
அமிழ்தவளைக் கும்பிட்டுக் கேட்டு – அவள்
    அருளாளே பாடுகிறேன் பாட்டு.

உழவனவன் தெய்வத்தின பிள்ளை – உடன்
    ஓட்டிடுவான் உயிர்வகையின் தொல்லை
உழவனுக்கு உலகத்தார் பிள்ளை – உடன்
    ஓட்டிடுவான் உறுபசியின் தொல்லை.

உழவனவன் உலகவர்க்கே ஆணி – துயர்
    ஓட்டுகின்ற தேவலோக ஏணி
உழைத்துழைத்தே ஓயாத தேனி – பயிர்
    ஊக்கத்தால் மேம்பட்ட ஞானி.

மண்மகளை வைகறையில் தொழுவான் - திமிர்
    மாடுகளின் ஏர்பூட்டி உழுவான்
தண்பயிரின் வளமதனைப் பார்க்க – நிமிர்
    தலைசாய்த்து உழைத்திடுவான் வேர்க்க.

நிலமடந்தைக் குழவனிடம் காதல் – அதை
    நிலைநாட்டச் செய்திடுவாள் ஊடல்
குலமகளின் மேனியிலே பசலை – அவள்
    கோலமுகம் காட்டிடுமே அசலை.

நீர்வேந்தன் நீக்கிடுவான் தாகம் - உடன்
    நேருழவர் தந்திடுவார் போகம்.
பார்வேந்தன் போக்கிடுவான் சோகம் - எனில்
    ஏர்வேந்தன் தானந்த மேகம்

மழைமுகில்கள் தருபயனே கூட – உழவன்
    வாழ்த்துகுர லால்வணங்கும் ஆட!
அழைத்திடவே வந்திடுவான் வெய்யோன் - உழவன்
    அன்போடே அனைக்கின்ற மெய்யோன்.

பரிசளிக்க வந்தாளே இயற்கை – நல்ல
    பயிர்வளத்தைத் தந்தாளே இயற்கை
சிரித்தமுகம் போல்வாளே இயற்கை – எல்லார்
    சிந்தையிலும் உறைபவளே இயற்கை

அப்பாடா அவன்பட்ட பாடு – அதை
    அங்கேபார் நெற்குவியல் மேடு
எப்பாடு பட்டதனைப் பெற்றான் - கதை
    ஏட்டினிலா அப்பாடம் கற்றான்

வேளாண்மை தந்திடுமே மகிழ்வு – உடன்
    வேளாளர் நெஞ்சமெல்லாம் நெகிழ்வு
தாளாண்மை தானிதற்கு வழியாம் - உயிர்த்
    தமிழொன்றே சொல்லிவைத்த மொழியாம்.

வெற்றி விழா காணவந்த தைநாள் - கலை
    வேல்விழியார் பாடுகின்ற தைநாள்
நெற்றியிலே செந்தூரம் இட்டு - இவர்
    நெய்ததுவே இன்பத்தின் பட்டு

திருவுடைய உழவர்க்குத் திருநாள் - அது
    தீஞ்சுவையே பொங்கவரும் ஒருநாள்,
அருவடையின் அடையாளத் திருநாள் - அது
    அவனியிலே ஆன்மீகப் பெருநாள்

கால்நடைகள் நீராட்டி இன்று – மணி
    காற்சதங்கை பூட்டிடுவார் நன்று
பால்குடிக்கத் துள்ளிவரும் கன்று – பசு
    பாங்குடனே பால்சுரக்கும் நின்று

கருவுடைய கவிதையுள ஏடு – வளர்
    கால்நடைகள் மேய்ந்துவரும் காடு
உருவுடைய தெய்வத்தேன் கூடு – அது
    உழவனவன் குடியிருக்கும் வீடு.

மணிமுத்துத் தோரணங்கள் தொங்கும் - மலர்
    மாலைகளில் வண்டினங்கள் தங்கும்,
அணிகளன்கள் பல்வகையில் கண்டு – அதை
    அணிந்தணிந்து மகிழ்ந்திடுவாள் பெண்டு.

புத்தாடை பொன்மணியும் பூண்டு – உடன்
    புன்னகை பூத்திடுவாள் ஆண்டு
முத்தான பிள்ளையரும் வந்து கடன்
    முத்தங்கள் பெற்றிடுவார் தந்து

இந்திரனை இந்நாளில் போற்றி – துணை
    இருந்திடவே அவனிடத்து சாற்றி
பந்தமுடன் தீபங்கள் ஏற்றி – புகழ்
    பாடிடுவோம் பக்தியினால் போற்றி

இந்திரனின் கோயிலிலே கூட்டம் - தெரு
    இனிக்கின்ற பூவையரின் தோட்டம்
சுந்தரமா மங்கையரின் ஆட்டம் - அவர்
    சுனைமுழ்க ஆடவர்க்கு நாட்டம்.

இந்துக்கள் மனைதோரும் பொங்கல் - அதை
    இன்புடனே காணவரும் திங்கள்
சொந்தங்கள் எல்லாரும் கூடி – மனம்
    சொக்கிடுவார் மஞ்சள் நீர் ஆடி.

பச்சரிசி பாலினிலே பொங்க – நல்ல
    பசுநெய்யில் பருப்புமிக முங்க
கச்சிதமாய்ப் பொங்கலுமே படைக்க உண்டு
    களித்திடுவோம் வயிறுமிகப் புடைக்க

செங்கனிகள் தந்தசிறு வித்து – அவை
    தென்பாண்டி உழவனுக்கு முத்து
இங்குபுகழ் தரவல்ல சொத்து – அதை
    ஈட்டுவதில் உழவனுக்குப் பித்து

நிறைநாழி நெல்வைத்து நல்ல – சுவை
    நெடுங்கரும்பும் உடன் வைத்து மெல்ல
இறைவணக்கம் செய்யுமனம் துள்ள – உடன்
    இதைக்காண்பார் நெஞ்சமெல்லாம் அள்ள

கற்கண்டும் தேன்பாகும் கொண்டு – சுவை
    கம்பமாவின் பண்டவகை உண்டு
நெற்பயிரும் கனிவகையும் கொணர்ந்து – நிறை
    நெஞ்சங்கள் வாழ்த்திடுமே உணர்ந்து

மார்தட்டி மீசையினை முறுக்கி - இடை
    வார்தட்டி வடிவத்தைக் குறுக்கி
கூர்கொம்புக் காளைகளை மடக்கி - இரு
    கொம்பொடித்து வீழ்த்திடுவார் அடக்கி

வீரம்தான் விளையாடித் துள்ளும் - விழி
    மீனொத்த பாவையுளம் கிள்ளும்
தீரத்தைப் பார்புகழ்ந்து சொல்லும் - வழி
    சீர்படவே எந்நாளும் செல்லும்.

எங்கெங்கு பார்த்தாலும் இன்பம் - பயிர்
    ஏற்றத்தால் வந்ததுவே என்பம்
மங்காத புகழோனே உழவன் - அவன்
    மண்ணாள வந்தவொரு கிழவன்.

இன்பத்தேன் இன்றிங்கே கொஞ்சும் - பெரு
    ஈகைத்தேன் வெள்ளமது விஞ்சும்
அன்புத்தேன் ஓடிவரும் நெஞ்சம் - அது
    ஆன்மீகக் காதலுக்கு மஞ்சம்.

கவிநெஞ்ச ரோசாவின் பொழில் - ஒளிக்
    கண்நெஞ்சு வள்ளியரின் எழில்
புவியினிலே இயற்கையவள் அருமை – அவை
    பொங்கலிலே உழவனுக்குப் பெருமை.

மங்காத புகழ்மறையைப் பேணி – தினம்
    மங்கையவள் வந்திடுவாள் நாணி
சங்கீத வீணைகளும் இன்று – மனச்
    சல்லாபம் பேசிடுமே வென்று.

தைப்பொங்கல் திருநாளில் மட்டும் - தகை
    சான்றவொரு புத்துணர்வு கிட்டும்.
காப்புடைய இயற்கையவள் விருந்து – வரும்
    காலத்தை வளமாக்கும் மருந்து

தைப்பொங்கல் நாள்முதலாய் விழித்து – மதி
    தப்பாது தீயவற்றை ஒழித்து
எப்போதும் மேன்மையது கொழித்து - இனி
    எந்நாளும் வாழியவே செழித்து

வண்ணத்தை வளமாய்த்; தீட்டி
    எண்ணத்தை அதிலே ஊட்டி
அன்னத்தை ஒப்புமை காட்டி
    கன்னத்தை கவிதை பாடி
நல் வித்தை நிலத்தே நாட்டி
    நன்முத்தை பயனாய் ஈட்டி
பத்தை நூறாய்க் கூட்டி
    இத்தை நாளில் இனிதே வாழ்க!

0 comments:

Post a Comment