ஞானம்

      அம்மா கட்டாயப் படுத்தியதால் வேண்டா வெறுப்பாக ஜி.ஹெச். வாசல் வரை வந்தவன் உள்ளே போகத் தயங்கினான்.
     மூக்கை மூடிக் கொண்டு அருவருப்பாய் முகத்தைச் சுளித்தபடி வந்து, ஒப்புக்கு நின்று, ஒன்றும் பேசாமலேயே திரும்பி விட்டான்.
     அப்பாவுக்கு ஆப்பரேசன்.... பக்கத்திலிருந்து பார்த்துக் கொள்ள லீவு கிடைக்காது என்று சாக்குச் சொன்னான்.
     அம்மா கிடந்த கிடப்பும், அவர்கள் தவித்த தவிப்பும் ஒன்றுமே செய்யவில்லை இவனை.
     அம்மாவின் பிரியத்துக்குரிய பிள்ளை, இப்படி ஜடம் மாதிரி இருக்கானே என்று அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஆச்சரியப் பட்டார்கள்.
     மனைவியாய் வாய்த்த மகராசிக்கு நல்ல ஆரோக்கியமான உடம்புதான்.... பல் வலி மட்டும் சிப்ட் முறையில் சித்ரவதை செய்யும்.
     எப்போதும் போலவே தானுண்டு தன் வேலை உண்டு என்று காரியத்தில் கண்ணாய் இருப்பான் பிரகாஷ்.
     போன வாரம் தாய்மாமன் சாவுக்குப் போய்வந்த சுமதிக்கு,தலைவலியும் காய்ச்சலும் அந்தப்பாடு படுத்தியது.... அமிர்தாஞ்சனைத் தடவிக் கொண்டே வீட்டு வேலையையும் கவனித்ததை இவன் கண்டு கொள்ளவே இல்லை.
     முந்தாநாள் இரவு  இவனுக்குக் குளிர் காய்ச்சல் வந்து, உடம்பு குதியாய்க் குதித்தது... மனசு தவியாய்த் தவித்தது.... யாராவது பக்கத்திலேயே இருந்து பார்த்துக் கொள்ள மாட்டார்களா என்று பரிதவித்தான்.
     'இப்படித் தானே மத்தவங்களுக்கும் இருக்கும்', என்ற ஞானம் பிறந்தது. இனிமேல் வீட்டில் யாருக்காவது சுகமில்லை என்றால் அக்கரையோடு பார்த்துக் கொள்ள வேண்டும், என்று தீர்மானித்தான்.
     ஆனால், அதற்கு வாய்ப்பில்லாமலேயே பல்லக்கில் பயணித்தான்.