துளிப்பாக்கள் 18

கிராமத்து வீட்டில் ஆளில்லை;
கிணற்றுத் தவளைக்கு நீரில்லை;
அமைதியாய் அழுதது ஆகாயம்.

******
குருவியின் கூடு
குடியிருந்தது கூகை
ஆணையிட்டது அமெரிக்கா.

******
தட்டேந்த வில்லை
தவமிருக்க வில்லை
தாராளமயம் வேண்டாம்.

******
புத்தகக் கடை
விற்றுத் தீர்ந்தன
பீடி, சிகரட்.

******
உச்சி வெயில்
தண்ணீர்ப் பழம்
தாகம் தீர்த்தன ஈக்கள்.

******
எங்கே எதற்குப் பயணம்
ஏதும் அறியாது விழிக்கும்
லாரியில் அடிமாடுகள்.

******
வேசம் போட்டார்கள்
கோசம் போட்டார்கள்
வினாவாய் விடியல்.

புதுக்கவிதை

ஒருபானைச் சோற்றில்
ஒன்றுவிடாமல்
பதம் பார்த்ததில்
வெந்துபோனதோ
விரல்கள்.

துளிப்பாக்கள் 17

தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்
டாஸ்மாக் விளம்பரம்.

******
“நேரகாலம் சரியில்லை”
எப்படி இருக்கும்?
இப்படி இருந்தால்.

******
மூச்சைப் பிடி
மூளையைக் கசக்கு
முயன்று உழை.

******
முடவன் எடுத்தான் கொம்புத்தேன்
முட்டாள் இழுத்தான் முதுகில்த்தேர்
முயற்சியை முறைப்படுத்து

******
அழவும் இல்லை
சிரிக்கவும் இல்லை
ஆண்டவனிடத்தில் அசைவேயில்லை.

******
தொழுதான் துடித்தான்
உண்டியல் நிறைத்தான்
கல்லாய் இருந்தான் கடவுள்.

முத்தம்

உன்
அன்பு வானை
முத்தமிட
என்
இதயநிலா
வட்டமிடும்;
         முத்தங்களோ –
           உன் பாதங்களில்……
எனக்கு
உன்
கால்களும்
கன்னங்களும்
ஒன்றுதான்.

துளிப்பாக்கள் 16

தீபம் எரிந்தது
திசைகள் மறைந்தன
திகைப்பாய் இருந்தது.

******
விரிந்த வானம்
தெரிந்த வாழ்க்கை
சின்னச் சின்னத் தேடல்கள்.

******
தூண்டிலை விடு
வலையை எடு
மொத்தமாய்ப் பிடி.

******
பூவா தலையா
போட்டால் தெரியும்
ஐ.நா. சபையின் தீர்மானம்.

******
வாய் வசைபாடியது
கை எழுதியது
ஸ்ரீ ராம ஜெயம்.

******
வீடு மாறினேன்
மாடி ஏறினேன்
கூடு மாறுமா குருவி / குயில்.

சிலைகளின் கண்ணீர்

அதோ
    அங்கே ஒரு சிலை……
    அருகில் சென்று பார்க்கிறோம்;
    அடவோ……
              சட்ட அறிஞர்
              அம்பேத்கரின்
              அற்புதச்சிலை!
    மாலை அணிவித்து
    மரியாதை செய்தோம்
    அடியில் பார்த்தால்……
               அந்தச் சிலையை
               அன்று நாட்டிய
               அத்தனை பேரும்
               அவரது குலம் என்று
               அடிக்குறிப்பு இருக்கிறது.
செக்கிழுத்த செம்மல்
     சிலையாக நிற்கிறார்;
     சிரித்துக் கொண்டே
     அருகில் செல்கிறோம்……
                இவரது சிலையை
                இங்கே நாட்டியோர்
                வேளாளர் குலம் என்று
                வெட்டியிருந்தார்கள்.
கல்விக் கண்திறந்த
     கர்மவீரர் காமராசரை,
     உறவின்முறை மட்டுமே
     உரிமை கொண்டாடுகிறது.
முச்சந்தி ஒன்றில்
     முக்கால் அடி உயரத்தில்
     முளைத்திருந்தது……
                பசும்பொன் திருமகனின்
                பகட்டான சிலை;
     அதனைச் சுற்றி
     அத்தனை பேரும்
     முக்குலத்தோர் என்று
     முத்திரை வாசகம்
     முன்மொழிந்தது.

     அதிர்ந்து போனோம்
     அத்தனை சிலைகளும்
     அவரவர் சாதியின்
     அடையாளச் சின்னமாய்……
                 அவமானப் படுத்திவிட்டதாக
                அத்தனை மகான்களும்
                அழுது கொண்டிருக்கிறார்கள்.
                தொழுது உங்களைக்
                கேட்டுக் கொள்கிறேன் –
     தன்னலமில்லாத்
     தங்கத் தலைவர்களை
     மட்டுமாவது
     சாதிச் சாக்கடையில்
     புதைத்து வீடாதீர்கள்.

துளிப்பாக்கள் 15

கண்ணாடி காதுக்கருவி
கட்டாயம் வேண்டும்……
குருடாய்ச் செவிடாய்ச் சாமிசிலைகள்.


******
சிறப்பு மருத்துவர்கள்
சீக்கிரம் வரட்டும்
சவக்கிடங்குகளில் சாமிசிலைகள்.


******
காசு காசு
எல்லாத்துக்கும் காசு
இலவச மருத்துவ மனை.


******
வயிறு எரிந்தது
வாழ்க்கை எரிந்தது
காடு எரிந்தது.


******
சுற்று வீடுகளில்
தொலைக்காட்சித் தொடர்கள்……
இடையில் ஒரு இழவுவீடு.


******
நாளை தேர்வு
நானா எழுதுகிறேன்
அலறும் தொலைக்காட்சி.

பொன்மகள் வந்தாள்

செல்லப் பிள்ளை
பிறந்து விட்டாள்
தங்கக் கட்டி போல – அட
சொல்லிச் சொல்லி
வளர்த் தெடுப்பேன்
சொக்கத் தங்கமாக.

அச்சம் நாணம்
என்பது எல்லாம்
அடவோ நமக்கு வேண்டாம் – அட
எச்சில் விழுங்க
அனுமதி கேட்கும்
பத்தாம் பசலி வேண்டாம்.

சமைக்கிற வேலை
செய்வது மட்டும்
சாதனை என்பது வேண்டாம் – அட
இமைக்கும் பொழுதில்
எதையும் வெல்லும்
இதயம் உனக்கு வேண்டும்.

மிச்சம் மீதி
இருந்தால் உண்டு
காயும் சருகாய் வேண்டாம் – அட
உச்சம் உனது
உயர்வே என்று
உணர்த்தும் உஷ்ணம் வேண்டும்.

ஆணும் பெண்ணும்
சரியே என்னும்
சரித்திரம் சமைக்க வேண்டும் – அட
பூணும் வெற்றியில்
புவனம் சிலிர்க்கப்
புரட்சி பாட வேண்டும்.

காணும் யாவும்
கைவச மாக்கும்
கலைகள் கற்க வேண்டும் – அட
வானும் மண்ணும்
உனக்குள் அடக்கி
வாழிய செல்ல மகளே!

சுதந்திரம்

இன்று
சுதந்திர தினம்.....
இந்த தேசத்தைப் போலவும்
அதன் சுதந்திரத்தைப் போலவும்
என் ஆடையைப் போலவும்
கசங்கிக் கிழிந்த தேசியக்கொடி இருக்கிறது
ஊசி தாருங்கள்
கொடி குத்த அல்ல
கிழிசல்களைத் தைக்க.

இந்தியா

இனிய தமிழ் ரசிகர்களுக்கும் தங்கள் வாசிப்பால் என் எழுத்துக்களை சுவாசிக்கச் செய்யும் வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளுடன் இனிய
சுதந்திர தின வாழ்த்துக்கள்.

(இக்கட்டுரை சுதந்திரப் பொன்விழா மாநில அளவிலான போட்டியில் முதல்
  பரிசு பெற்றது.)


துளிப்பாக்கள் 14

நாங்கள் சோசலிஸ்டுகள்
எங்களுக்கு எல்லோரும் சமம்
அணிமாறுவோம்; கொடி மாறாது.

****** 
அஞ்சமாட்டோம் – எவரையும்
கொஞ்சமாட்டோம் – ஜனநாயகம்
எங்கள் கையில்.

****** 
உங்கள் குழந்தைக்குப்
போஷாக்குக் கொடுங்கள்’
வளரவேண்டாமா? – “விலைவாசி” போல.

****** 
கஜானா காலியா
கவலை வேண்டாம்
அச்சு இயந்திரம் ஆளுக்கொன்று.

****** 
கனவு காணுங்கள்
இலவசமாய்த் தருகிறோம்
தூக்க மாத்திரைகள்.

****** 
ஏரோப்ளேன் ஏறுவோம்
அமெரிக்க அல்வா தின்போம்
எகிப்தில் ஏப்பம் விடுவோம்.

வாஸ்துவை எழுப்பாதே……

வாஸ்துராஜா எழுகின்றார்,
வாசல்கதவை மூடுங்கள்;
வாஸ்து என்றால் யாரென்று
விபரம் தெரிந்தால் கூறுங்கள்.

வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி
வீட்டைக் கட்டி முடிக்கின்றார்;
பாயை விரித்துப் பந்தி படைத்துப்
பகட்டாய் ஒருநாள் சிரிக்கின்றார்.

கூட்டில் உப்பு குறைவென்று
குறையைச் சொன்னார் ஒருநண்பர்;
வீட்டில் வாஸ்து குறையென்று
வந்தவர் சிலபேர் சொன்னார்கள்.

கன்னி மூலையில் கதவிருந்தால்
கன்னியர் தமக்குக் கேடென்றார்;
தண்ணீர்த் தொட்டி இருந்தாலோ
கண்ணீர் ஊற்று வற்றாதே.

அக்கினி மூலையில் அடுக்களையை
அமைத்தது மிகவும் நல்லதுதான்;
முக்கில் வீடு இருப்பதுவோ
முற்றும் தீராக் குறைபாடு.

முற்றம் வெளியே இருந்தாலோ
தொல்லைகள் என்றும் தொடர்ந்துவரும்;
சற்றும் யோசனை செய்யாமல்
சட்டென இடித்துத் தள்ளிவிடு.

தெருக்குத்திங்கே இருப்பதனால்
தீபக்கல்லை நட்டுவைத்து,
தெற்குப் பார்த்த விடிதற்கு
அக்கினி வாசல் அமையுங்கள்.

அடியும் பிசகாய் இருக்கிறதே
கட்டிய கொத்தனுக்கு அறிவுண்டா?
முடிந்த வீட்டில் குறைசொல்லும்
முட்டாளைத்தான் என்ன செய்ய?

இடித்து இடித்துக் கட்டியபின்
இடித்து மாற்றிப் புணரமைக்கத்
துடிக்கும் சாத்திரமுட்டாளின்
மூளையின் வாஸ்து சரிதானா?

அறிவியல் காரணம் சிலகொண்டு
அமைக்கிற வாஸ்தில் பொருளுண்டு;
அறியாதனத்தால் இடிபட்டு
அவஸ்தைப் படுவது யார்குற்றம்?

இடித்துக் கட்டிய பூதுவீட்டை
ஈட்டிக்காரன் பறித்துவிட
இடிக்கவீடு இல்லாமல்
இருப்பது வாஸ்து ராஜாவே.

துளிப்பாக்கள் 13

போடுறாங்க நோட்டு;
போடுறாங்க ஓட்டு;
போடுறாங்க வேட்டு.

****** 
மழையா குடம் தருகிறோம்
வேயிலா குடை தருகிறோம்
நாங்களே ஆட்சி செய்கிறோம்.

****** 
காவல் நிலையம் வேண்டாம்;
நீதி மன்றம் வேண்டாம்;
நாங்கள் திருத்தி விட்டோம்.

****** 
ஈழத் தமிழா ஏமாறாதே!
தெற்கே சூரியன் உதிக்காது
வடக்கோ கையைக் கொடுக்காது.

****** 
கூவம் நதியே உனக்கொன்று……
பெப்சி கோலா உனக்கொன்று……
இந்தா பிடி – “கலைமாமணி”

****** 
அடுத்த தேர்தலில்
நாங்களே வெல்வோம்
“ஆஸ்கார் விருது” அள்ளித் தருவோம்.

கடிதம்

அடித்தார்களா?
துடித்தீர்களா?
அயலகச் சிறையில்
அடைத்தார்களா?
கவலை வேண்டாம்;

இறந்தவர் எண்ணிக்கை
தெரியட்டும்;
கண்டனக் கடிதம்
எழுதிவிடுகிறேன்.

துளிப்பாக்கள் 12

அவரவர் சாமியை
அவரவர் வேண்டியே
கூடி உண்போம் கூட்டாஞ்சோறு.


******
சவப்பெட்டிகள் சாட்சிகள் ஆயின
விரைத்துக் கிடந்தன புத்தகங்கள்
அமைதி காத்தார் நூலகர்.


******
பதைபதைப்போடு பிரித்தனர்
பாட்டியின் சுருக்குப்பை
சிரித்தன செல்லாக் காசுகள்.


******
முயற்சி திருவினை ஆக்குமா?
பிணத்தின் பின்னால்
பிதா மகன்கள்.


******
உதடுகளுக்குள்
ஒழிந்து கிடக்கின்றன
உண்மையின் உதடுகள்.


******
ஊராட்சி மன்றங்களிலிருந்து
உலக வங்கி வரை
உலா வருகிறார்கள் ஒசாமாக்கள்.