இடியாப்பம்


     வெள்ளை நூலைப் பிரித்துப் போட்டது மாதிரி,அரிசிக்கு  அத்தனை அற்புதமாய்  வடிவ மாற்றமும்,சுவை நேர்த்தியும் செய்து கொடுத்த முதல் தாய்க் குலத்தின் வளைக் கரத்துக்கு வைர வளையலே பூட்ட வேண்டும்தான்.

     பச்சரிசியை ஊறவைத்து, கொஞ்சமாய்த் தண்ணீர் விட்டு, ஆட்டுக்கல்லில் கடகட என்று ஆட்டத் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாய் அரிசி அரைபட அரைபடக் கெட்டிப்பட்டு, செக்காட்டுகிற பிரயத்தனத்தில் இடுப்பும் கையும் நோவெடுத்து உடம்பு ஒரு வழியாகிவிடும்.

     இவ்வளவு கஷ்டப்பட்டு இந்தக் கழுதயத் திங்கணுமா? 'பேசாம சோத்த ஆக்கித் தின்னுட்டுச் சுகமா இருக்கலாம் தானே',என்ற அங்கலாய்ப்பு அம்மாவுக்கு மட்டும் வருவதே இல்லை.

     ஆட்டிய மாவைப் பக்குவமாய் வதக்க வேண்டும்;பக்குவம் தவறிப் போனால் பிழிய வராது; வெந்தபிறகும் கல்லாய் இறுகிப் போகும்.

     நோகாமல் T V பார்த்துக் கொண்டிருந்து விட்டுக் காலாட்டிக் கொண்டே சாப்பிட உட்காரும் அப்பா திட்டித் தீர்ப்பார்.... ''உனக்கு எதுக்குடி இந்த வேண்டாத வேல....? இது இடியாப்பமா....? பாறாங்கல்லா இருக்கு....'' என்று சிடுசிடுப்பார்.

     தான் சாப்பிடும் போதுதான் அம்மாவுக்கும் அதே எண்ணம் வந்து, இறுகிப் போன காரணத்தை ஆராய்ச்சி செய்வார்.

     முற்றிய தேங்காயை ஆட்டிப் பிழிந்து ஏலக்காய் பொடித்துப் போட்டு சீனியும் சேர்த்துத் தேங்காய்ப் பாலில் சாப்பிடும் போது, இடியாப்பம் ஈடு இணையற்ற சுவையாய் இருக்கும்.

     வெங்காயம், பச்சைமிளகாய் வெட்டிப் போட்டு, கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, இடியாப்பத்தைத் தாளிதம் செய்தால், அந்தச் சுவைக்கு இன்னொரு வயிறு கட்டாயம் வேண்டும்.

     கோழிக் குருமா இருந்துவிட்டால், எனக்கு உனக்கு என்று அடிதடியே ஏற்ப்பட்டு விடும்.... பிறகு இத்தனையும் செய்து கொடுத்த அம்மாவுக்கு.... பழைய சோறுதான் மிச்சமிருக்கும்.... அதுவும் இல்லாத பட்டினிப் பொழுதுகளைப்  பட்டியலிட்டபடி அம்மா மனசு ஆறுதலடையும்.

     இந்த இயந்திர உலகத்தில் இடியாப்பம் எளிதாகி விட்டது; அரிசியைப் போட்டால் இடியாப்பமாத் தர இயந்திரம் வந்து விட்டது; இன்ஸ்ட்டன்ட் இடியாப்பம் கிடியாப்ப மெல்லாம் கிடைக்கின்றன....

     பாட்டி பார்த்துப் பார்த்துச் செய்த பக்குவங்களை, பண்டிகை நாள்களில் பட்ட பாடுகளை, பரிதவிப்புக்களை,கதை கதையாய் அம்மா  சொல்லச் சொல்லக் கேட்டு வளர்ந்த பேத்திக்குப் பாட்டியின் மீதான மதிப்பும் மரியாதையும், பாசமும் பரிவும் இடியாப்பம் மாதிரிப் பின்னிக் கிடந்தன....

     ஒரு விடுமுறை நாளில், தானே போராடி மிக அற்புதமாய்  இடியாப்பமும் தேங்காய்ப் பாலும் செய்து, பக்கத்து ஊரில் இருந்த பாட்டி வீட்டுக்குத் தன் டூவீலரில் போனாள் அமுதா....

     பேத்தியின் கன்னங்களைத் தடவி ஆரத் தழுவினாள் பாட்டி.....

     உங்களுக்காக நானே இடியாப்பம் செஞ்சு கொண்டாந்திருக்கேன் அம்மாச்சி!

     ஏண்டிம்மா...எனக்கு சக்கர வியாதி... சீனி, தேங்காப் பாலெல்லாம் தொடவே கூடாது.... இருந்தாலும் பரவாயில்ல.....ஒங்கையால செஞ்சதச் சாப்பிடக் கொடுத்து வச்சிருக்கணும்....

     அமுதாக்கண்ணு மிக்சியில ஒரு அடி அடிச்சு கூழா ஒரு கிளாஸ் குடுக்குறியாடா....?

      இடியாப்பத்தோடு அமுதாவும் அரைபட்டுக் கொண்டிருந்தாள்.... 

     கரண்ட் கட்டானது.

இன்னும்....

காற்றில் கலந்து
காணாமல் போன
வாயைக் கடந்த
வார்த்தைகள் போலப்
போய்விட்டாய்.....

புயல் கடந்து
போன பின்னும்
பூவில் மணம்
மிச்சமிருப்பதைப் போல்
நினைவில் நிற்கிறாய்.....

நீருக்குள் கல்போல
நெஞ்சுக்குள் மூழ்கிவிட்டாய்.....
       
கல்லுக்குள் நீர்போலக்
கட்டாயம் இருப்பேனா?

படையல்

     தலையில தலையில அடிச்சேனே! பாவி மனுஷன் மர மண்டைல ஏறலையே! இப்படியுமா கண்டிருக்கோம்.... சாகுற வயசா? அப்படி அதுல என்னாதே இருக்கோ? இப்புடிப் போய்ச் சேந்துட்டாரே....!
 
     நண்டுஞ் சுண்டுமாத் திரியுதுகளே! இந்த மூணு பொட்டயையும் எப்படிக் கரை சேக்கப் போறாளோ....? மகராசன் கண்ண மூடிட்டுப் போயிட்டாரே....!
 
     எத்தன குடியக் கெடுத்தாலும் குடிய விட்டொழிக்கத் தெரியலையே....!
 
     குடி மட்டுமா? பான்பராக் வேற....
 
     எந்த நேரமும் ஒதக்கித் தின்னுக்கிட்டே கெடந்தா.... அதான் தின்னுடுச்சு....
 
     வாயி வயிறெல்லாம் புண்ணு; அரிச்சிடுமில்ல.... பூராம் வெந்து போச்சு....
 
     டாக்டர் வைத்தியம் பாக்க மாட்டேன்ல சொல்லிட்டாரு.... இது தான் கடைசி.... இனி ஒருக்கா பான்பராக்கத் தொட்ட.... அடுத்து...  ஏங்கிட்ட வராதன்னுட்டார்ல....

     உசுரோட இருந்தாத்தான வாரத்துக்கு....

     இதுக்குமேல வைத்தியம் இல்ல; ஒங்க பக்குவம்தான் முக்கியம்; எச்சரித்து அனுப்பினார் பெரிய டாக்டர்.

     புத்தி கெட்ட மனுஷனுக்கு எத்தன நேரம்தான் காவ காக்குறது? தானா இழுத்து வச்சு, எல்லாரையும் கஷ்ட்டப் படுத்திட்டுக் கண்ண மூடிட்டாரு.

     எழவுக்கு வந்த எல்லாருக்கும் இதுதான் பேச்சு....

     கத்தல்கள், கதறல்களுக்கிடையே மயானத்துக்குப் போய் வந்தவர்கள் மறுநாள் சாஸ்திரத்துக்கு வாங்க வேண்டிய சாமான்களை எழுதிக் கொண்டிருந்தார்கள்....

     ''படையலுக்கு, பாட்டிலும் பான்பராக்கும் மறக்காம வாங்கிடுங்க,'' என்றொரு  குரல் ஒலித்தது.
 
     அத்தனை உதடுகளும் ஆமோதித்தன.