நீள்கவிதை 4

1. எத்தனை எத்தனை
    சித்திரை வந்தன்
    இத்திரை மீதினிலே – அவை
            எத்தனை எத்தனை
            முத்திரை பதித்தன
            மாந்தரின் நெஞ்சினிலே.

2. பித்தரைப் போலிவர்
    பிதற்றித் திரிந்தது
    எத்தனை காலமடா – அவர்
            பித்தம் தெளிந்ததும்
            சித்தம் சிறந்ததும்
            சத்திய வேதமடா.

3. புத்தரை காந்தியைப்
    போற்றிப் புகழ்ந்த நம்
    புனிதம் போனதெங்கே – அவர்
            போதனை யாவையும்
            புதைகுழி போனதும்
            புழுக்கள் ஆனதங்கே.

4. தோல்வியும் துயரும்
    தொடரா திருப்பது
    தோல்வலி உள்ளவரை – அவர்
            புலன்கள் அடங்கிப்
            புந்தி தெளிந்தால்
            புதியன புரியமடா.

5. ஆன்மா அதற்குள்
    அறிவுச் சுடரொளி
    ஆயிரம் எழுந்ததடா – அதன்
        வெளிச்ச விழுதுகள்
        விரிந்து பரந்தொரு
        வித்தகம் ஆனதடா.

6. தெளியா ஞானச்
    செறுக்கில் மானுடம்;
    சிதிலம் ஆனதடா – அவர்
            தெளிந்து தெளிந்து
            தேரிய போது
            தெய்வதம் ஆனதடா

7. தொண்டே தொழிலாய்க்
    தொண்டவர் நெஞ்சம்
    கோவிலுக்கு இணையாகும் - அவர்
            உடல்பொருள் ஆவி
            உணர்வுகள் யாவும்
            உன்னத மானதடா.

கவலை

கையாளாகாதவர்களின்
கையிருப்பு.
        காதல் தோல்வின்
        கல்யாணப் பத்திரிக்கை.
முறிந்த உறவுகளின்
முத்திரை வாசகம்; மூச்சுக்காற்று
        பிரிவுப் பயணத்தின்
        பிறந்தநாள் வாழ்த்து.
குடும்ப விளக்குகளின்
கோஸ்டி கானம்.
        இளைய தலைமுறையின்
        இன்றைய ஸ்பெசல்.
உறக்கம் கலைத்த
உணர்ச்சிக் கொப்பளம்.

ஆசிரியர் பக்கம்:

நேற்றைய செய்தி ஒருபாதி
    நாளைய செய்தி ஒருபாதி
இன்றைய செய்தி சரிபாதி
    இவையே எங்கள் குலநீதி.

பத்தியை நிறப்பப் படுகிறபாடு
    படித்துப் பார்த்தால் தெரிந்துவிடும்
பத்தியை முழுவதும் படித்துப் பார்ப்பவன்
    பைத்தியம் என்பது புரிந்துவிடும்.

புத்தியைச் சலவை செய்வது எங்கள்
    புத்தக உலகின் செயலாகும்
கத்தியில் நடக்கும் காரியம் சிலவால்
    வாசகர் மனதில் புயலாகும்.

கவர்ச்சிப் படங்கள் இருந்தால் எங்கள்
    புத்தகம் உடனே விலைபோகும்
காட்சிக்கெளிய தலைவர்கள் என்றால்
    காகிதம் என்றே பெயராகும்.

கதைப் பக்கம் கவிதைப் பக்கம்
    சதைப் பக்கம் சந்தைப் பக்கம்
எதைப் பக்கம் போட்டாலும
    எடுப்பாய் இளசுகள் படம்வேண்டும்.

கொள்கைப் பிடிப்பெனும் சொடுஞ் சொல்லை – எங்கள்
    குலத்தில் சொல்வது பாவமடா
கொட்டிக் கொட்டிப் பணம்கொடுத்து – நீங்கள்
    குப்பையைச் சேர்;ப்பது சாபமடா.

காதோடு சொல்வதை எல்லாம் - தினம்
    கடையை விரித்துக் காட்டுகிறோம்
ஏதோ பிழைப்பு நடத்துகிறோம் - உங்கள்
    பொழுதைக் கொஞ்சம் கடத்துகிறோம்.

எதையும் மறக்கும் பண்புடையோர்
    இதையும் மறந்து விடுவீர்கள்
அதையும் நாங்கள் மறக்காமல்
    அச்சில் கோத்து வெளியிடுவோம்.