புதுக்கவிதை 3

சந்தனப் பொய்கையில் சாமரம் வீசியா
    மாருதம் வருகிறது? – மந்த
மாருதம் வருகிறது?

காலையில் சேவலும் கூவியா வானிலே
    சூரியன் எழுகிறது? – ஒளிச்
சூரியன் எழுகிறது?

மாங்குயில் கூவிடும் மாமரச் சோலையில்
    வீணையும் எதற்காக? - இசை
வீணையும் எதற்காக?

மாந்தளிர் மேனியாள் மங்கையின் மார்பிலே
    மாலைகள் விழவேண்டும் - திருமண
மாலைகள் விழவேண்டும்.

காமனைக் கும்பிடும் கயவர்கள் மத்தியல்
    காதலும் எதற்காக? உயர்
காதலும் எதற்காக?

மனிதரை மனிதரே மதித்திடா உலகினில்
    பிறவியம் எதற்காக? மானிடப்
பிறவியும் எதற்காக?

நீள்கவிதை

அண்ணன் மாரே தம்பி மாரே
    கொஞ்சம் நில்லுங்க
ரெம்ப அநியாயம் நடக்குதுங்க
    சொன்னாக் கேளுய்க.

எண்ணி எண்ணி உழச்சவங்க
    ஏழைகளா ரோட்டிலே – அட
ஏமாத்திப் பொழைச்சவங்க
    எண்ணுராக நோட்டுக.

தண்ணி வித்து பன்னி வித்து
    பணத்த ரொம்ப புறட்டுரான் - அட
தட்டுக்கெட்ட கூட்டத்தையே
    ஓட்டுப் போடத் திறட்டுறான்.

கண்ணியமா நடக்கச் சொல்லி
    காது கிழியக் கத்துரான் - அட
கத்திப் போட்டு கடத்தெருவில்
    கள்ள நோட் அடிக்கிறான்.

புண்ணியமா தொண்டு செஞ்சா
    புழுதி வாரி எரைக்கிறான் - அட
புத்திமதி சொன்ன முன்னா
    புரிஞ்சுக்காம மொறைக்கிறான்.

திண்ண சோறு செமிக்க லண்ணு
    மாத்திரைக முழுங்குறான் - அட
மாத்திரையுஞ் செமிக்கலன்னு
    மருந்து வாங்கிக் குடிக்கிறான்.

தென்னையிலே கள்ளிறக்கித்
    தீருமட்டுங் குடிக்கிறான் - அட
திண்ணையிலே படுத்துறங்கி
    தேவதாஸா நடிக்கிறான்.

பண்ணையிலே உழைச்சவங்க
    பருக்கையத்தான் பாக்கலே – அட
பாடுபட்ட கூலியத்ததான்
    பண்ணையாரு கொடுக்கலே;

பண்ணையாரு பட்டுலதான்
    மடிப்பு இன்னும் மாறலே – அட
பாட்டாளி இடுப்புலயோ
    பழையதுணி மாறலே

மண்மேடு திருத்தியதில்
    மாளிகைகள் கட்டினான் - அட
மழைபேயும் வேளையிலே
    மரத்தடியில் ஒட்டினான்.

வேசம் போட்டு நடிச்சவங்க
    வெல்வெட்டில் நடக்கிறான் - அட
கோசம் போட்டுக் கொடிபுடுச்ச
    கூட்டம் ரோட்டில் கிடக்குறான்

நாசமான கட்சியிலே
    நாலு பேரு இருக்கிறான் - அட
நாலு நாளில் பிரிஞ்சு போயி
    நாலு கட்சி அமைக்கிறான்.

தூசு தட்டித் தொடச்சு எடுத்து
    கொள்கைகள் விளக்குறான் - அட
துண்டுகள மாத்திப் போட்டு
    தோழமைய வளக்குறான்.

காசு கேட்டு நடுத்தெருவுல
    உண்டியலக் குலுக்குறான் - அட
சோலிச உண்டியல
    சோத்துக்காக உடைக்கிறான்.

ஏசு புத்தன் காந்தி என்று
    என்னனன்னமோ அளக்குறான் - அட
இளிச்ச வாயன் தலையிலதான்
    இழுத்து வச்சு அறைக்கிறான்.

கதரு வேட்டிக் காரனுக்கு
    காந்தியத் தான் தெரியல – அட
கதறிஅழும் ஏழைகளின்
    கண்ணீருந்தான் மறையல

பேசும் போது இலக்கணத்த
    வீசுறதில் சூரன் தான் - அட
பித்தலாட்டஞ் செய்யுறதில்
    பிறவியிலே வீரன்தான்

கலப்படங்கள் செஞ்சு செஞ்சு
    கடத்தெருவில் விக்குறான் - அட
காவல்துறை காரங்க எல்லாம்
    காவ காத்து நிக்குறான்

பழுப்படஞ்ச அரிசியிலே
    பாதாங்கீரு பண்ணுறான் - அட
பச்சத் தண்ணி கூட ஒரு
    பத்துக் காசு என்னுறான்

உளுத்துப் போன பருப்புலயும்
    உளுந்தவடை பண்ணுறான் - அட
ஊசிப்போன பட்சணத்த
    ஒருவராமா விக்குறான்.

கொழுத்துப் போன பட்லருக்கு
    காசு ஏதுங் குடுக்கலன்னா
மொறைச்சு மெல்ல பாத்து நம்ம
    எச்சிலையே துப்புறான்.

கழுத்துவர சாப்பிடல
    கால் வயிறு நெம்பிடல – அட
கடமுடான்னு வந்த சத்தம்
    மூச்சுவிட முடியலயே

நடைப்பிணமாய் அலைவதுதான்
    நாகரீகப் போதையா – அட
நல்லவர்கள் சொன்னவழி
நாமவந்த பாதையா?

குடைபிடித்து உன்முதுகில்
    குதிரையேறக் குனிவதா? – அட
முதலாளி என்று சொல்லி
    முழந்தாளில் பணிவதா?

தொடை இடுக்கில் கைபுதைத்துத்
    தூங்குவதும் ஏனடா – அட (ஒரு)
தோட்டாவாய்ப் புற்ப்பட்டால்
    தோல்வியதும் ஏதடா?

படைதிறண்டு வந்துநாமும்
    பயணத்தைத் தொடங்குவோம் - அட
புதிதாக இனியேனும்
    மனிதருக்குள் அடங்குவோம்.

உறவின் அவலம்

1.  அட போடா போடா கிறுக்கா - நீ
             எங்க வந்த முறுக்கா
     அட மூடா மூடா உனக்கு - இந்த
             புத்தி இருப்பது எதுக்கு?

2.  அன்பு என்று சொல்லக் கொண்டு
             அலையுது உன் மனசு - அட
     அன்பு என்று சொல்வ தெல்லாம்
             அந்தக் காலப் பழசு.

3.  முன்ன ஒன்னு பின்ன ஒன்னு
             சொல்வது தான் புதுசு - அட
     முதுகில தான் மொய்க்கும் இந்த
             ஈக்கள் பல தினுசு.

4.  அண்ணன் எனத் தங்கை என
             வாழ்ந்த கதை எல்லாம் - அட
     அடுப்பங் கரை சாம்பல் என
             ஆறிப் போன பின்னே,

5.  தொடச் செடுத்து அள்ளிக் கொண்டு
             தூரக் கொட்டு பெண்ணே - அட
     தூசி யாகப் பறந்து வரும்
             தூர விலகு கண்ணே!

6.  இடிச்ச புளிய எடுத்து வச்ச
             ஓலக் கொட்டான் போல - அட
     ஒடிஞ்சு விழுந்த மனசுக் கென்ன
             ஒட்டுப் போடுற வேல.

7.  ஒட்டுப் போட ஒட்டுப் போட
             ஒடைஞ்சு போற கம்பு - அட
     எட்டத் தூக்கி எறிஞ்சு விடு
             எதுக்கு இந்த வம்பு.

8.  பட்டுப் போன இலை நொறுங்கிப்
             பாட்டுப் பாடும் பாரு - அட
     விட்டுப் போன உறவை எண்ணி
             விசும்பி நிற்பது யாரு?

9.  மொட்டுப் போல மன சிருந்தா
             வாசம் எப்படி வீசும்? – அட
     மொட்டு மெல்ல மலர்ந்த போது
             தென்றல் வந்து பேசும்.

10.  வண்ண வண்ணக் கனவுகளை
               வரைஞ்சு வச்ச கையே - அட
       வக்கரித்துக் கொட்டி விடும்
               வரைஞ்ச படத்தில் மையே.

11.  திண்ணத் திண்ணத் திகட்டி விடும்
               தீஞ்சுவைகள் எல்லாம் - அட
       தின்ற பிறகு புத்தி வந்து
               தெரிவது தான் எல்லாம்.

12.  ஒன்னும் ஒன்னும் சேரும் போது
               ஒன்னு ரெண்டா மாறும் - அட
       ஒன்னம் ஒன்னும் பெருக்கும் போது
               ஒன்னு தானே தேரும்.

13.  ஒன்னப் போல உலகைப் போல
               நானிருக்க மாட்டேன் - அட
       ஒன்றை யேனும் செய்தி டாமல்
               உசிரை விட மாட்டேன்.

14.  வெம்பிப் போன பிஞ்சு லேயும்
               விதை இருக்குது பாரு - அட
       விதைகளுக்குள் ஒழிஞ்சு இறக்கிற
               விதைகள் எத்தனை கூறு?

15.  தும்பை விட்டு வாலைப் பிடிக்கும்
               புத்திசாலிக் கூட்டம் - அட
       தூக்கி எற்ஞ்ச பந்துகள் தான்
               துள்ளிக் குதிக்கும்; ஆட்டம்.

16.  தும்பி எல்லாம் பூவை விட்டுத்
               தூர விரலகிப் பேனா - அட
       துன்ப மெல்லாம் ஓடிவிடும்
               தூக்கம் வரும் தானா.

17.  நம்பி வந்த நடு வழியில
               நாலு பாதை பிரிஞ்சா - அட
       நம்ம வழிய நாம பாத்து
               நடக்க வேணும் தெரிஞ்சா.

18.  கட்டுப் போட கட்டுப் போட
               ஆறிப் போகும் புண்ணு - அட
       கட்டுச் சோத்துல எலிய வச்சுக்
               கட்ட லாமா கண்ணு?

19.  வெட்டி விட வெட்டி விட
               ஒட்டி வளரும் களைதான் - அட
       வெட்டிப் பயல் உனக் கெதுக்கு
               வெடித்த பலாச் சுளைதான்.

20.  தட்டி விடத் தட்டி விடத்
                தாங்கிப் பிடிக்கும் வயசு - அட
       குட்டி விடக் குட்டி விடக்
               குனிஞ்சு கொடுக்கும் மனசு

21.  எட்டி உதைச்ச கால் களிலே
               என்ன வசியம் வச்சியோ - அட
       எழுந்து வந்து கால டியில்
               ஏனோ தவம் கிடக்கிறேன்.

22.  உரசி உரசி பாத்த முன்னா
               தங்கம் கரைஞ்சு போகும் - அட
       உரசா மலே எடுத்த முன்னா
               பித்தளை கலந்து போகும்.

23.  உரசும் போது மனசுக் குள்ளே
               எழுந்து நிக்கிற ஆச - அட
       விரசம் ஒன்னு வந்து விட்டா
               விழுந்து விடும் பூச.

24.  ஒன்னு போல ஒன்னு இருந்தா
               மாற்றம் எப்படித் தெரியும் - அட
       மாற்றம் இல்லா வாழ்க்கை யிலே
               மகிழ்ச்சி எப்படி விரியும்?

25.  என்னப் போல உன்னப் போல
               யாரும் இருக்க வேண்டாம் - அட
       என்ன நமக்கு நடந்த தென்று
               யாரும் அறிய வேண்டாம்.

26.  நாயும் நரியும் நட்பு என்று
               நம்பி வந்த மானே - அட
       நாளை நீயும் நாய் நரியின்
               நல்ல வேட்டை தானே.

27.  நீயும் நானும் சிரித்த தெல்லாம்
               போலி யான வேசம் - அட
       போயும் போயும் நமக் கெதுக்குப்  
               புனித மான பாசம்?

28.  தாயும் சேயும் சேர்ந்து போனா
               தாரு மாறா ஏசும் - அட
       வாயும் வயிறும் வேறு என்று
               தத்து வங்கள் பேசும்.

29.  போயும் போயும் இந்த உலகில்
               நான் இருக்க லாமா? - அட
       நீயும் கூட என்ன விட்டுப்
               போயி ருக்கலாமா?

30.  தேயும் அந்த நிலவினை நான்
               தேடித் தேடித் திரிகிறேன் - அட
       தேய்ந்து நிலவு வளரும் போது
               தேய்ந்து நானும் மடிகிறேன்.

31.  சாய்ந்த மரம் காய்ந்த தனால்
               வேரின் மீது வெறுப்பு – அட
       காய்ந்த மரம் சாய்ந்த தற்குக்
               கிளை களன்றோ பொறுப்பு.

32.  பாய்ந்த புலி பதுங்கு வதால்
               பாய்வ தற்கா தயக்கம் - அட
       படுத்து றங்கப் போவது போல்
               பாசாங்கு மயக்கம்.

33.  ஓய்ந்து மனம் உலன்று தினம்
               ஒடுங்கி விடும் வேளை - அட
       ஆய்ந்து அறிய முடியாமல்
               அடங்கி விடும் நாளை.

34.  ஏதுக்கடா இப்படி நான்
               ஏளனமாய்ப் போனேன் - அட
       தீது செய்த பாவியைப் போல்
               திட்டி விரட்ட லானேன்.

35.  ஓதி வைத்த இலக்க ணங்கள்
               உதவ வில்லை எனக்கு - அட
       பாதிப் பாடம் படித்த தனால்
               பயனும் இல்லை உனக்கு.

36.  போது மடா இது வரையில்
               புலம்பி அழுத தெல்லாம் - அட
       தூது போக யாரு மில்ல
               தூய உறவு சொல்ல.

37.  மோது தடா விழி இரண்டில்
               மோக னமாய்த் தூக்கம் - அட
       மேதி னியில் எனக் கிருக்குது
               எத்த னையோ ஏக்கம்;

38.  விட்டு மனம் வெறுத் தவளை
               விலகி விட முடியுமா? - அட
       விருப்பம் இல்லை என்று சொல்லி
               உசிரை விட முடியுமா?

39.  நீரடித்து நீர் விலக
               நீள் நிலத்தில் முடியுமா? - அட
       நீ அடித்து நான் அழுக
               நீயும் சிரிக்க முடியுமா?

40.  ஊர் சிரிக்கும் வாய் அடக்க
               மூடி செய்ய முடியமா? - அட
       தேர் இழுக்கும் வடம் திரிக்க
               நார் உரிக்க முடியுமா? – கல்
               நார் உரிக்க முடியுமா?

41.  யார்எதனைச் சொன்ன போதும்
               நாம் பிரிய லாகுமா? - அட
       உயிர் இருக்கும் வரை நாமும்
               உடன் பிறப்பு அல்லவா!

42.  எங்கோ ஏதோ இடிக்கிறது - அட
               ஏனோ என்மனம் துடிக்கிறது
       பங்கோ பகையோ அடிக்கிறது - அட
               பாசம் என்றே நடிக்கிறது.

43.  மாற்றம் ஒன்று வரவேண்டு - அட
               மாட்சிமை எல்லாம் தரவேண்டும்;
       ஏற்றம் எனக்கு வரவேண்டும் - அட
               ஏக்கம் தீர வரம்வேண்டும்.

44.  காலம் இனியும் கடத்தாதே - அட
               காரியம் தவறாய் நடத்தாதே;
       ஞாலம் முழுதும் இடம் வேண்டும் - அட
               நாளும் எனக்கு நலம் வேண்டும்.

45.  என்னைப் பிடித்த இடறெல்லாம் - அட
               இன்றோ பொழிந்து போகட்டும்; (என்)
       எண்ணம் எல்லாம் ஈடேற - அட
               எதிர்புகள் எல்லாம் சாகட்டும்.
               என் வாழ்வில்
               இன்பம் பொங்கட்டும்;
               இனிமை தங்கட்டும்;
               புதியபாதை அமையட்டும்;
               பொற்காலம் மலரட்டும்.

தழிழ்த் தாய் வாழ்த்து 2

தத்தத்தன                      தத்தத்                தனதன
தத்தத்தன                      தத்தத்                தனதன
தத்தத்தன                      தத்தத்                தனதன                   தனதான

சொத்துத்தரு               வித்துத்             தமிழென
பொற்புக்கவி               மெச்சத்             தருவொரு
பக்கத்துணை               நிற்கத்               தடையெது            திருநாளில்?

சொட்டக்கவி               எட்டுச்               சுவையினில்
கட்டித்தரு                     பட்டுக்               குயிலென
காற்றிட்டவர்               சொக்கத்           தலைகுனி            மயிலாவள்

பச்சைத்தமிழ்               இச்சைத்            தனியொரு
கட்டுப்பொழில்           முத்துத்              திருவென
எட்டுத்திசை                 எட்டிச்                செழுபுகழ்              தமிழாவள்

பத்துப்படை                  முட்டிப்              பொருதிட
மொட்டுத்தமிழ்            கட்டுக்               கதையினை
சுட்டித்தகர்                     புத்துக்                கவிதரு                 கனளாவள்

செட்டித்தமிழ்                செட்டுப்            பொருளென
இற்றைக்கவி                விட்டுத்            தருவன
அச்சுப்பிழை                   வெட்டித்          தகர்வது                எவர்கூறு?

செப்புச்சிலை                 தொட்டுச்        சிலரிது
கற்புச்சிலை                   இக்குப்              பனிமலர்
உச்சித்தலை                  வைத்துப்         பணிவது               தமிழ்தாளை.

தானம்

பழைய உடைகளை
பிள்ளைகள் நிராகரித்தனர்
தயங்கித் தயங்கி
தானம் தந்தேன்
அனாதைக் குழந்தைகள்
அணிந்த போது
அழகாய் இருந்தன......
அசிங்கமாய் தெரிந்தனர்
என் பிள்ளைகள்.

இ.பி.கோ. - இருபால் பிணைப்புக் கோட்பாடு!

        பொன்னும் மணியும் பூட்டி மகிழ்ந்து, சீராட்டிப் பாராட்டி வளர்த்த செல்ல மகளை, நல்லவன் கையில் ஒப்படைப்பதாய் எண்ணி, ஏமாந்து போகிற எத்தனை எத்தனையோ பெற்றோர் இரத்தக் கண்ணீர் வடிக்கக் காரணம் என்ன?

        ஆணாதிக்க சமூகம் பெண்ணை அடிமையாகவும், போகப் பொருளாகவும் எண்ணி மேலாதிக்கம் (Male ஆதிக்கம்) செய்கிற மெத்தனம், எண்ணம் சொல் செயல் எல்லாவற்றிலும் இரண்டறக் கலந்து விட்ட கயமையால், கண்ணீர் வடிக்கிற குடும்ப விளக்குகள் ஒளிவீச வழி என்ன?

        அச்சம், நாணம், மடம் பயிர்ப்பு என்ற பத்தாம் பசலித்தனமான பண்புகளை வகுத்துத் திணித்து இருட்டடிப்புச் செய்கிற போலித்தனத்தால், மூச்சுக் காற்றுக்குக் கூட முக்காடு போட்டு விடுகிற, முட்டாள்தனமான மூர்க்கத்தனங்களை முறியடிக்கத் தேவையான முனைப்பு என்ன?

        கல்லானாலும் கணவன், புல் (Full) ஆனாலும் புருசன் என்கிற புறட்டுத்தனத்தால் சஞ்சலப்பட்டுப் பதிவிரதைகளாய்ப் பட்டம் பெற்று, பழி பாவங்களுக்கு அஞ்சிப் புதைகுழி போகிற நடைப்பிணங்களை வாழ்விக்க வழி என்ன?

        “ஆண்மகன் ஆயிரம் செய்வேன், பெட்டைக் கழுதைக்கென்ன அத்தனை திமிர்”, என்று ஆர்ப்பறிக்கிற ஆணாதிக்கத்தின் ஆணவத்தை, அகங்காரத்தை அடியோடு அழிக்கிற ஆற்றல்மிகு அஸ்திரம் என்ன?

        சமய சந்தர்ப்பம் பாராத, சம்பளம் இல்லாத வேலைக்காரிகளாய், பிள்ளைகள் பெற்றுத்தரும் இயந்திரங்களாய், அடிமைச் சாசனம் எழுதித்தராத ஆட்டு மந்தைகளாய், குடிகாரக் கணவனுக்கும் குற்றேவல் செய்கிற குணவதிகளாய், அடுப்படி ஒன்றே திருப்பதி என்று தெருப்படி தாண்டாத கிணற்றுத் தவளைகளாய் இன்றைக்கும் இருக்கிற இந்த ஏமாளிகளை உய்விக்கும் உபாயம் என்ன?

        இப்படி என்ன என்ன என்ன என்கிற கேள்விக் கணைகளுக்கு மத்தியில், காலம் மாறிவிட்டதன் அடையாளமாய், புதிய விடியலின் பூபாளமாய், அடிமைத்தனத்தை அடியோடழிக்கும் அலைப்படையாய், அனற்பிழம்பாய், ஆளுமை மிகுந்த ஆவேசப் புயலாய் “எதுவும் முடியும் என்னால்” என்று எத்துறையிலும் பெண்கள் இன்று முத்திரை பதிக்கிற முனைப்பில் 100 சதம் இருந்தாலும் 33 சதம் ஒதுக்கீடு செய்யவே உடன்படாத உதவாக்கரைகள் 200 சதம் இருக்கிறார்கள்.

        வரதட்சணைத் தடைச்சட்டம், பெண் சிசுக்கொலைத் தடைச் சட்டம், பாலியல் பலாத்காரத் தடைச்சட்டம், பெண்மக்கள் சொத்துரிமைச் சட்டம், பெண் வன்கொடுமைத் தடைச்சட்டம் இன்னும் பற்பல சட்டங்கள் இயற்றி, அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் ஆயிரமாயிரம் வந்த பின்னும்,

        “தப்பித்தால் தப்பில்லை”

        என்கிற தான்தோன்றித்தனமான போக்கு மேலோங்க, அத்தனை இ.பி.கோ.விலும் தப்பித்து விடுகிற சாமர்த்தியமான சந்தர்ப்பங்களைச் சட்டமே தந்து விடுவதால் தர்ம ஸ்தூபிகள் தள்ளாடுகின்றன.

        விலையுயர்ந்த பொருட்களைப் பிறந்த வீட்டிலிருந்து பெற்று வரும்படி மனைவியைக் கணவனோ அவனைச் சார்ந்தவர்களோ வற்புறுத்தினால் இ.பி.கோ.498 அ பிரிவின்படி அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கலாம்; ஆனால் அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியோ 3 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை தரும் அதிகார உச்சவரம்பைப் பெற்றிருப்பது போன்ற முரண்கள் சட்டத்தின் எல்லா மூலை முடுக்குகளிலும் நிறைந்திருப்பதால்,

        ஸ்ரீ ராமன்களைக் கூண்டில் நிறுத்தி,
                ராவணன்களைக் காப்பாற்ற,
        சீதாப்பிராட்டிகளே சிலிர்த்தெழும்போது
                சிறைக் கம்பிகளுக்குள்
        மண்டோதரிகளே மாட்டிக் கொள்கிறார்கள்.

        அறிவின் ஆளுமை அதிகரிக்க அதிகரிக்க உணர்வின் உன்னதம் உதிர்ந்து போவதால், உறவுப்பாலங்கள் உடைந்து போகின்றன. சட்டத்தால் ஓட்டுப் போடும் ஓட்டைப் படகுகள், ஆழ்கடலின் அலைகளுக்குள் அகப்பட்டுக் கொள்வதால், ஓரக்கடலில் ஒதுக்கப்படுகிற உறவுப் பிணங்களை, உற்று நோக்கும் சட்டக் கழுகுகள் சாப்பிட்டு விடுகின்றன.

        “இரவும் நிலவும் வளரட்டுமே – நம் இனிமை சுகங்கள் தொடரட்டுமே……” என்று,

        யாசிக்கவும், தன் தேவைக்காக மட்டுமே நேசிக்கவும் சாய்ந்த இரவுகளின் சல்லாபப் பொழுதுகளில் பூஜிக்கவும் வெட்கப்படாத விசமிகள் நச்சுக் கிருமிகளாய், நாடெங்கும் இருப்பதால்,-

        “நேற்று - குழந்தை
         இன்று - குமரி
         நாளை - அடிமை”

        என்கிற இரத்தப் புற்றுநோய், நம் நாடி நரம்புகளை அரித்துத் தின்றுவிடும் அவலம், காலம் காலமாய்த் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

        பிழையான பாட்டைப் பிழையென்று சொன்னதற்கே நெற்றிக்கண் திறந்த திருநீலகண்டன், சரிபாதி பெண்மைக்குத் தந்தான் என்ற தத்துவத்தை, உடன்கட்டை ஏற்ற மட்டுமே உபயோகித்த உத்தமர்கள், ஆண்டவன் சாபத்திற்கு ஆளாகிப் போனதால் சிதையூட்டாத சீதைகளைச் சிறைபிடித்துச் சிற்றின்பப் போதையில், “சிவாய”, என்றவர்க்கு அபாயமில்லையே!

        காலம் காலமாய்க் கதவுகளுக்குப் பின்னால் நடக்கிற இந்தக் கயமைகளுக்குக் கண்ணீர்த் தாரைகளே சாட்சிகளாயின. இந்தக் காட்சிகள் மாறும் காலம் வந்தது…… கொஞ்சம் கொஞ்சமாயக் கண்கள் திறந்தன…… நஞ்சு மனங்களின் நாசம் மறைந்தன……

        எங்கோ மூலையில் இருட்டடிப்பாய் இன்றும் தொடரும் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வராமல் வீட்டுக் கதவுகளே காபந்து செய்கிற கயமை, கற்பூரம் போலக் கணநேரம் எரிந்து கரும்புகையின் கரிபூசிவிடும் என்பதைக் காலம் உணர்த்தும் வரை, காத்திருக்க வேண்டாம்.

        வீடுகளின் வெளிச்சம் வீதிகளுக்கு வரட்டும்: வீதியின் இருட்டில் வீணைகள் வீறுகொண்டு எழட்டும். அச்சம் அகன்று நாணமும் மடமும் பெண்ணுக்கு வேண்டாம்; பயிர்ப்பு என்பது ஆடவர் பண்பாய் ஏற்றுக் கொண்டால் ஆணும் பெண்ணும் சமமென்ற ஆடையின் மாற்றங்களைப் போலவே, அச்சு அசலாய், 50க்கு 50 மாட்சிமை பொங்கும் மகத்துவமாகும். அப்போது இ.பி.கோ. என்பது “இருபால் பிணைப்புக் கோட்பாடாய்”, அகிலம் புகழும் அர்த்தனாரீஸ்வரராய், ஆனந்தத் தாண்டவம் ஆடும்.

        கவனக்குறிப்பு : தாலி கட்டிய பாவத்திற்காகத் தனிமையில் கண்ணீர் விட்டுக் கதறியழும் கண்ணியமான கணவனாய் நொந்து நூலாய்ப் போன ஆயிரத்தில் ஒருவன்களுக்கு எந்த வன்கொடுமைச் சட்டமும் வக்காலத்து வாங்காதது கணக்கில் வராத சாபக்கேடு.

அற்பம்

        என்ன…… என்ன நினைத்துக் கொண்டு புறப்பட்டானோ? வீட்டில் யார் யார் வழி அனுப்பி வைத்தார்களோ! ஒருவரும் இல்லாதவனாகக்கூட இருக்கலாம்.

        சகுனம் சரியாய் இல்லையா? பார்த்தானா? பார்க்க வில்லையா? எதுவும் தெரியாது……

        முட்டாள்தனமான எத்தனையோ சம்பிரதாயங்களைக் கட்டுடைத்த அவசர உலகத்தில் இவனுக்கு என்ன அவசரமோ……

        எவரெவர் எதெதெதற்காக எங்கெங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பது எவருக்குத் தெரியும்……?

        “எங்கே எதற்குப் பயணம்;
          ஏதும் அறியாமல் விழிக்கும்;
          லாரியில் அடி மாடுகள்”.

        இப்படித்தான் எல்லோரும் பெரும் பயணத்திற்கான ஒத்துகையாய் எத்தனையோ சிறுபயணங்கள் செய்கிறோம்……

        இவன் கூட எந்த நினைவில் எங்கு போய்க் கொண்டிருந்தானோ……? நிகழக் கூடாதது நிகழ்ந்து விட்டது.

        வெறித்த விழிகளோடு சிரித்த முகமாய்ச் செத்துக் கிடக்கிறான். ஓரத்தில் தான் போயிருக்கிறான்...... ஒரே அடியில் போய்விட்டேனே! எப்படி……?

        எருமை வாகனத்தில் வரவேண்டிய எமன் எந்த வாகனத்தில் வந்தான் இவனுக்காக?

        விதி யாரை விட்டது என்று வியாக்கியானம் பேசிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் - இடித்த வண்டியைப் பிடித்துக் கொடுக்கவோ, துடிக்கிற உயிரைக் காப்பாற்ற நினைக்கவோ ஆளில்லாமல் போனதால் சிரித்தபடி செத்துக் கிடக்கிறான்.

        எட்டி நின்று எட்டிப்பார்ப்பவர் கண்களுக்கு எளிதில் தட்டுப்பட்டது அது.

        கொஞ்சம் கொஞ்சமாய்க் கூட்டம் சேர்ந்தது…… முந்தி வந்தவன் பிந்தி வந்தவனிடம் விசாரித்தான். எப்படி நடந்தது?

        உதட்டைப் பிதுக்கி, உற்றுப்பார்த்து விட்டு, பைக்கை உதைத்து, ஆரன் அடித்து விரட்டிக் கொண்டு பறந்து போனான; தனக்கு விபத்தே வராது என்கிற ரீதியில்……

        எல்லோருக்குமே ஏதோ ஒரு அவசரம் இருக்கிறது, செத்துப் போனவனுக்கும், சாகடித்தவனுக்கும் அப்படி ஏதாவது இருக்கலாம்.

        செத்துப்போனவனின் அவசரமும் அவசியமும் செத்துப்போய் விடுமோ? அது செத்துப் போனவனின் சொத்துபத்தைப் பொறுத்தது.

        இவன் கிடப்பதைப்பார்த்தால் இப்போதைக்கு இவனிடமிருப்பது இது மட்டுமாகத்தான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்த என்னை இடித்துக்கொண்டு உள்ளே நுழைந்தது தொப்பை வயிற்றுக் காக்கிச் சட்டை…… பேண்ட் பாக்கெட்டுக்குள் ஏதேதோ புடைத்துக் கொண்டிருந்தன…… தொப்பையைப் போலவே

        என்ன நடந்தது? ஏது நடந்தது? எப்படி நடந்தது? எப்போ நடந்தது? இப்படிக் கேள்விகள் எழுந்தன………

        சின்னச் சின்னதாய்ப் பொத்தாம் பொதுவாய் விசாரித்த போதே கூட்டத்தின் கால்கள் முன்னே பின்னே நடந்தனவே தவிர நடந்ததைச் சொல்ல நாதியில்லை.

        வேடிக்கை பார்ப்போம்…… வேடிக்கை மட்டுமே பார்ப்போம்…… என்ற வாடிக்கை கொண்ட நமக்கு விபத்தும் இழப்பும் ச்சுக் கொட்ட வைக்கிற விசயங்களாகவே தான் இருக்கின்றன.

        தற்செயலாகத் திரும்பினேன்…… அங்கே அது இல்லை. அட சற்றுமுன் அங்கே அது கிடந்ததே அதற்குள் எப்படி மாயமாய் மறைந்தது? யார் எடுத்திருப்பார்? அதுவும் விபத்தாய் இருக்குமா!.

        ஏதோ இனம்புரியாத ஏக்கத்தோடு தேட ஆரம்பித்தேன்; என்னுடையது இல்லை; பிறகு எதற்கு எனக்குள் இந்தப் பதட்டம்……

        போனால் போகட்டும் போடா…… என்று விட்டுவிட ஏன் மனமில்லை?

        அதை எடுத்துப் போய் எவ்வளவுகாலம் அதோடு வாழ்ந்து விடப்போகிறான்……? ஏன் இத்தனை அற்பமாய் மனிதன் இருக்கிறான்?

        எல்லோருமே இப்படித்தானா? வாய்ப்புக் கிடைத்தால் வாரிச் சுருட்டுவது வாழ்க்கை தானா?

        அடுத்த வினாடிக்கு உத்தரவாதம் இல்லாமல் தானே இந்த வினாடியை எடுத்து வைக்கிறோம்; அதற்குள் எதற்கு அடுத்தவன் பொருளை எடுத்து மறைக்கும் அவசியம் வந்தது?

        மனம் படபடத்தது...... கண்கள் பரபரத்தன…… தேடினேன்…… தேடினேன் சிரித்தபடியாய் செத்துக் கிடந்தவன் இப்போது முறைத்துக் கொண்டிருந்தான்.

        இப்போது முறைக்கிறானா? முதலிலும் முறைத்தானா? நான் தான் சரியாகப் பார்க்க வில்லையா?

        அப்போது பார்த்தேன்…… அடையாளம் சொல்லும் அளவிற்குப் பார்த்தேன் அங்கே அது கிடந்தது.

        உறுதியாகி விட்டது. எவனோ அடித்துக் கொண்டு போய்விட்டான்.

        வீட்டுக்கு வந்த பின்னும் புலம்பிக் கொண்டிருந்தேன்…… மனசெல்லாம் அதுவாய் இருந்தது; திருடியவன் மனசிலும் அதுதான் இருக்குமோ?

        மனசிருந்தால் திருடுவானா? அதுக்கும் சொந்தக்காரர் செத்துக் கிடக்கம்போது அதைப்போய்த திருடியிருக்கிறானே……

        என் மனைவி கேட்டாள் அது அது என்கிறீர்களே! அது எது?

        கோபமாய்ச் சொன்னேன் - அது, “செத்துப் போனவனின் செருப்பு”.

உயிரின் பயன்......!

கணக்கும் பிணக்கும் எதனால் என்ற
        காரணம் நமக்குத் தெரியாமல்
                கயமைத்தனங்கள் ஒழிவதில்லை!

பணத்தின் மேலே பணத்தைப் போட்டுப்
        பாது காத்தும் பயனில்லை:
                பாடையில் பேதம் ஏதுமில்லை!

பிணத்தின் மேலே பிணத்தைப் போட்டுப்
        புதைத்ததுப் பார்த்தும் முடியவிலலை:
                பூமியில் சவக்குழி மீதமில்லை!

குணத்தில் உயர்ந்த குவலய மாந்தர்
        குழியில் இருந்தும் உயிர்த் தெழுவார்:
                கோபுரம் போலே நிமிர்ந்திடுவார்!

தனக்குத் தனக்கெனும தன்னுணர்வு
        தகர்ந்தால் தேசம் நன்மை பெறும்:
                எனக்கும் உனக்கும் பகை மூட்டம்
                        எல்லாம் இந்தச் சுயநலமே!

மனமே எதற்கும ஆதாரம்
        மாண்புகள் தங்கும கூடாரம்:
                மனமே கனவுகள் நனவாக –
                        மானிடப் பண்பினை வளர்த்துவிடு!

கனக்கும் இதயச் சுமைகளுமே
        கண்ணீர் விட்டால் கரைந்திடுமா?
                உனக்கென உருகும் இதயங்கள்
                        உறுதுணையானால் இடர் வருமா?

அன்பால் உலகை வசப்படுத்து;
        அதனால் உன்னை வளப்படுத்து;
                உன்னால் உலகம் வளமானால்
                        உயிரின் பயனே அதுதானே!

அலங்காரம்

சீவினாள்
சிங்காரித்தாள்
அலங்காரப்பொருளை
அள்ளி அள்ளிப்
பூசினாள்......
அப்படியே இருந்தது -
"அவலச்சனம்"

காந்தியம் வாழியவே!

மகாத்மாவே!
ஞாயிற்றுக் கிழமையில்
உன் பிறந்தநாள் வந்தால்
அடுத்த நாள்
விடுமுறை அறிவிக்க
அரசு ஆணையிட்டால்
"காந்தியம் வாழியவே!"