பொது அறிவு.

     எப்படி முடிகிறது? எல்லாக் கேள்விகளுக்கும் தயக்கமோ தடங்கலோ இல்லாமல் போட்டி போட்டுக் கொண்டு விடை சொன்னார்கள் புத்திசாலிகள்.
    
     கைதட்டும் பாராட்டுமாய்க்  களை  கட்டியது சபை...

     கேள்விகள் தொடர்ந்தன...

     பையா படத்துக்கு பைனான்சியர்  யார்?

     மைனா படத்தின் இசை அமைப்பாளர் யார்?

     சைனா நெடுஞ்சுவர் எந்தப் படத்தில் இடம் பெற்றது?

     நைனா கால் ஒடித்த நடிகன்(மன்னிக்கவும்) நடிகர் யார்?

     கைனா நடித்த ஒரே படம் எது?

     விரல் நுனியில் விடைகள் இருந்தன.விருது வழங்கும் சாக்கில் விரல்
தொட்ட கரை வேட்டிகள் புனிதம் பெற்றதாய்ப்  பூரிப்படைந்தன.

     இதனைப் படம் பிடித்த புகைப்படக் காரனுக்குக் கலைமாமணியும்
ஆஸ்காரும் வழங்க ஆணை பிறப்பித்தார்கள்.

     ஏடா கூடமாய் ஒரு கேள்வி பிறந்தது.... இரு வேறு விதமாய் விடை
சொன்னவர்கள்,இரு அணியாய்ப் பிரிந்து பலம் பார்த்தனர்.

     முடிவில் ஜனநாயக முறைப்படி வாக்கெடுப்பு நடத்தித் தீர்மானித்தனர்....

                                         ஜனவரி 26  சுதந்திர தினம்.

                                         ஆகஸ்ட்  15  குடியரசு தினம். 

    விடை  தெரியாத இன்னொரு கேள்வி--எந்த நாட்டுக்கு?    

நடுங்காத படை

      அடேய்... வேகமா வாடா... ஓடி வாடா... கம்ப எடுடா... கல்லத் தூக்குடா... வேகமா வாங்கடா... போயிரப் போகுதுடா...
    
     ஆத்தீ... எம்மாந்தடி... கருநாகம்டா... போட்டா அம்புட்டுத்தான்...

     எங்கடா...? எங்கடா...? ஏய் தள்ளி நில்லுங்கடா...

     பாத்து... பாத்து...

     அந்தா நெளியுதுடா... அடிடா... அடிடா...

     ஏய் சீறுதுடா... கவனமா அப்படியே குத்திப் பிடிடா...

     வசமா மாட்டிக்குச்சுடா... எலேய் அப்படியே பிடிச்சுக்கிறேன்... நீ தலையில கல்லப் போடு...

     நாலைந்து பேர் சேர்ந்து நையப் புடைத்தனர்...

     ஏய்... போதும்டா... உசுரு போயிருக்கும்டா...

     பொழச்சா, "நீயா" படத்துல மாதிரிப் போட்டுத் தள்ளிரும்டீ...

     செடிய வெலக்குங்கடா... நல்லாப் பாப்பம்;

     கருநாகம் இல்லடா... வெறும்  நாகம் மாதிரிதான் தெரியுது...

     மெதுவாய் மெதுவாய் வெளியே தள்ளிக் கொண்டுவந்து உற்றுப் பார்த்தால், கண்களை எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்தன...

     அட... செத்த பாம்பு. 

அசல் கவலை.

   கவலையோடுதான்  போயிருந்தான்; பலர் கவலைப் படுவது போல் காட்டிக் கொண்டனர்; இன்னும் சிலரோ கச்சிதமாய் அழுது, கண்ணீர் விட்டு, புடவைத் தலைப்பில் மூக்கைச் சிந்தி, அடுத்தவர்களை நோட்டம் விட்டு, நகை நட்டை எடை போட்டு, எதை எதையோ அசை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

   செத்துப் போனவனின் பிள்ளையிடம் கூடுதல் கவலைப் பட்டவனாய்.... துக்கம்  விசாரித்தான்....

    அடிவயிற்றைப் பிடித்து அப்பா அலறியதில்  தொடங்கி, ஆம்புலன்ஸ், ஆஸ்பத்திரி, அவசர சிகிச்சை, அனாப் பைசா செலவு உட்பட இத்யாதி இத்யாதிகள் ஒன்று விடாமல் ஒப்பித்துக் கொண்டிருந்தான் பிள்ளை-ஓட்டை ரெக்கார்டு மாதிரி எல்லோரிடமும்.

   கேட்டானான்னு கேட்டா சொன்னானான்னு சொல்லும்படியா இருந்தது சூழல்.

   எடுப்பதற்கு ஏற்பாடானது ... இவன் இன்னும் கூடுதலாய்க் கவலைப் பட்டான்.

   என்ன கவலைப் பட்டு என்ன செய்ய...? போன உசுரு வரவா போகுதுன்னு வியாக்கியானம் பேசாதீங்க....

    செத்தவன், வீட்டுக்குச் சொன்னானோ சொல்லலையோ.... தெரியுமோ தெரியாதோ.... தருவாங்களோ.... மாட்டாங்களோ....                                                       

    வட்டி போனாலும் பரவாயில்லை...
 
    அசலை நினைத்து, அசலாய்க் கவலைப் பட்டான்.

பாத்துப் போங்கடா...


     அந்த மட்ட மத்தியானத்து வெயிலில் தன் ஜீப்பில் கிளம்பிய சிறிது நேரத்தில் நடுத்தர வயதுப் பெரியவரும் அவரது மனைவியும் ஆளுக்கொரு பையைச் சுமந்தபடி நடந்து கொண்டிருந்தனர்....

     யார் என்று தெரியாவிட்டாலும், பாவம்.... வாகனப் போக்குவரத்து குறைந்த பகுதியில், அவர்களுக்கு உதவலாமே என்ற நல்லெண்ணத்தில் வண்டியை நிறுத்தி,வருவதானால் ஏறிக்கொள்ளுங்கள் என்றான்.
  
      மிகுந்த நன்றியோடு ஏறியவர்கள் தங்களை ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்த போதே.... அவர்கள் இறங்க வேண்டிய இடத்திற்கு வந்துவிட்டது வண்டி.

     நிறுத்துங்க.... நிறுத்துங்க.... இறங்கனும்.... இறங்கனும்.... என்று பதறி.... பதறாமல் இறங்கி, பவ்வியமாய்க் கதவடைத்து, பல்தெரிய இளித்து, நன்றிப் பெருக்கோடு விடை பெற்றவர்களைக் கருத்தில் கொள்ளாமல் அவனது கவனமெல்லாம் வண்டி ஓட்டுவதிலேயே இருந்தது.

     சில நாள்களுக்குப் பிறகு.... அவன் தன் காரில் அதே பாதையில் போய்க் கொண்டிருந்தான்.... தூரத்தில் அதே பெரியவர் ஓட்டமும் நடையுமாய்ப் போய்க் கொண்டிருந்தார்....

     தூரிக் கொண்டிருந்த மழை, இடியும் மின்னலுமாய் மிரட்டியது; பாவம் பார்த்தவன், பக்கத்தில் போய் நிறுத்தினான்....

     பயந்து போன பெரியவர் படபடத்தார்.... இப்படியா கண் மண் தெரியாமல் வண்டி ஓட்டுறது...? உங்க அப்பன் வீட்டு ரோடா...? பொரிந்து தள்ளினார்....

     கார் போய்விட்டது....

     வார்த்தைகள் எதிரொலித்தன....

     "பாத்துப் போங்கடா...."

நடக்கக் கூடாதது.

          தலையில் அடிபட்டு பலத்த காயத்துடன் ஐ.சி. யூனிட்டில் கோமாவில் கிடந்தான் கோபால்.
    
          ஒரு தனியார் பேருந்து தாறுமாறாய் ஓடி ரோட்டோரத்துப் புளியமரத்தில் மோதி பலத்த சேதம். எதிரே வந்த கார் அப்பளமாய் நொருங்கிக்கிடந்தது. யாரும் பிழைத்திருந்தால் தம்புரான் புண்ணியம்.

          விபரம் ஏதும் தெரியவில்லை. ஒரு ஒருத்தர் ஒவ்வொரு விதமாய் விளக்கிக்கொண்டிருந்தார்கள்.
                                                                                                                                 
          ஓட்டுனரும் வண்டியும் கோமாவில்.


          நடந்து போனவனுக்கு என்ன நடந்தது கோமாவில் கிடக்க?

          எங்கேயோ காலராவும் நிமோனியாவும் டைப்பாயடும் வந்து அல்லோலப்பட்டால் இவனுக்கும் வந்துவிடும்.

          சிக்கென் குன்னியா, பன்றிக் காய்ச்சல் இரண்டும் சேர்ந்தே வந்தன இவனுக்கு.
    
          மருந்து, மாத்திரை, மந்திரிப்பு, தாயித்து, பிணிக்கயிறுன்னு பாக்காத பண்டுதமில்ல.
    
          இந்த வயசுலயும் போலியோ சொட்டு மருந்தக்கூட விட்டு வைக்கல.
    
          கோமாவில் இருந்தாலும் இன்னும் என்னென்ன வரும்முன்னு யோசிச்சுக்கிட்டுத்தான் இருப்பாரு நம்ம கோபாலு.
   
          கோமாவுல கிடக்குறவன் யோசிப்பானா?இப்படிக் கதை எழுதுறவன் லூசுப்பயலா? என்று யோசிக்கிறிங்களா?
    
          ஒரு தடவ பிரசவ வலியில துடிச்ச நம்ம கோபாலு எத்தன தடவ செத்தான்னு அவனுக்கே தெரியாது.
            
          அட.... நான் லூசு இல்லைங்க; நெசமாத்தான் சொல்றேன்.... நம்ம பிரண்டு கோபால் இருக்கானே அவன் எதப் பாத்தாலும் கேட்டாலும் தனக்கும் அப்படி நேர்ந்திருமொன்னு நெனைக்கிற டைப்பு.

          இப்படிப்பட்ட கோபால் வாத்தியாரோ, இந்தக் கதையை எழுதுற நானோ இதப்படிக்கிற நீங்களோ நெனச்சுப்பாக்காத ஒன்னு நடந்தது....

          கோபாலுக்குக் கொடுத்தாங்க நல்லாசிரியர் விருது.

தீபாவளி

  நமட்டுச் சிரிப்பும்
    நகையும் பகட்டுமாய்
    நீங்கள்......

  நமத்துப் போன
    நனைந்த வெடியாய்
    நாங்கள்......

  குறும்பும் குதிப்பும்
    குதுகூலமுமாய்
    நீங்கள்......

  கொழுத்திப் போட்ட
    மத்தாப்புக் கம்பியாய்
    நாங்கள்......

  வான வெடியின்
    வெளிச்சப் புன்னகையாய்
    நீங்கள்......

  வாரிக்கூட்டிய
    வாசல் குப்பையாய்
    நாங்கள்......

  நீளச் சர  வெடியின்
    கோலச் சுருளாய்
    நீங்கள்......

  குருவி வெடியின்
    குட்டைத் திரியாய்
    நாங்கள்......

  வெடிக்கும் முன்னே
    மிரட்டும் வெடியாய்
    நீங்கள்......

  வெடித்துச் சிதறிய
    காகிதக் கிளிசலாய்
    நாங்கள்......

  சங்குச் சக்கரத்தின்
    சந்தோசச் சுழற்சியாய்
    நீங்கள்......

  சங்கட மான
    சரவெடிப் புகையாய்
    நாங்கள்......

  பட்டுப் புடவையின்
    பகட்டுச் சரிகையாய்
    நீங்கள்......

  பாம்புக் குழுவையின்
    சாம்பால் வளையமாய்
    நாங்கள்......

  பூந்தொட்டி போலப்
    பூரித்திருப்பவர்
    நீங்கள்......

  புடவைத் தலைப்பில்
    கிளிசலை மறைப்பவர்
    நாங்கள்......

  ஓலை வெடிக்கே
    ஓடி ஒளியும்
    வீரப் பரம்பரை
    நீங்கள்......

  ஓலைக் குடிசையில்
    பற்றிய நெருப்பை
    ஓடி அணைப்பவர்
    நாங்கள்......

ஏழை எளியவர்
    ஏக்க நெருப்பினை
    ஏளனம் செய்பவர்
    நீங்கள்......

  ஏழையின் சிரிப்பில்
    இறைவனைக் கண்கிற
    இதயம் கொண்டவர்
    நாங்கள்......


  ஆலைக் கரும்பென
    ஆட்டிப் பிழிந்துயிர்
    அள்ளிக் குடிப்பவர்
    நீங்கள்......

  பாலை நிலத்தினில்
    பச்சைக் கிளிகளாய்ப்
    பாடிப் பறப்பவர்
    நாங்கள்......


   கொண்டாடாமலே
     கொண்டாடியதாய்
     அலட்டிககொள்பவர்
     நீங்கள்......

  கொண்டதைக் கொண்டு
    கொண்டாட்டத்தைக்
    கொண்டாடுபவர்கள்
    நாங்கள்.....
     
  ஆளுக்கொன்றாய்
     டி.வி.பெட்டிக்குள்
     அடங்கிப்போபவர்
     நீங்கள்.....

  அக்கம் பக்கம்
    அன்பாய் இருந்து
    ஆனந்திப்பவர்
    நாங்கள்.....
   
  அடுத்த பண்டிகை
    எப்போ தென்று
    ஏக்கம் கொள்பவர்
    நீங்கள்......
  இன்னும் காலம்
    இருக்கு தென்று
    நிம்மதி கொள்பவர்
    நாங்கள்......

குப்பை

மக்கும் குப்பையோ.....
மக்காக் குப்பையோ.....
பொதியைக் குறைத்தால் போதும்!

(குப்பை = கல்வி)

சமச்சீர் - கல்வி

படித்துக் கிழித்தவர்கள்
படிப்பைக் கிழித்தார்கள்.
கிழிக்காகமல் படிக்கவும்
கிழிபடாமல் படிக்கவும்
 பூவா தலையா போட்டுப் பார்க்கலாம்
பூவிழுந்தால் புதைக்கலாம்...
தலைவிழுந்தால் எரிக்கலாம்...
அதுவரைக்கும் -
இரண்டும் கெட்டானாய் இருக்கலாம்.....

அறிக்கை

எழுதிய கடிதங்கள்
வீண் போகவில்லை;

மத்திய அரசும்
மக்களும்
கைவிட்ட நிலையில்......

ஸ்பெக்ட்ரம் இழப்பை
பத்மநாபபுரத்து பகவான்
ஈடு செய்து விட்டான்;

இனியாவது -
கனிமொழியை விடுவித்து,
தக்காராய் நியமிக்க்,
சட்டப்படி
நடவடிக்கை எடுக்க,
மஞ்சள் துண்டின் மீது
ஆணையிடுகிறேன்.

தோல்வி.

வழக்கமற்ற கெடுபிடி,
வழக்கமற்ற கட்டுப்பாடு,
வழக்கமற்ற கண்காணிப்பு,
வழக்கமற்ற சட்டப்படி
சரியாய் நடந்தது தேர்தல்....
          வழக்கமான வரிசை,
          வழக்கமான சமிக்கை,
          வழக்கமான விசாரிப்பு,
          வழக்கமான கரும்புள்ளி,
          வழக்கமான பதிவு,
          வழக்கமான தோல்வியில்
          வாக்காளர்கள்.

தொண்டன்.

தொண்டர்கள் துடிப்போடுதான்
கொடிபிடித்துக் கோசமிட்டு,
அடிபட்டு, மிதிபட்டு, ஆதங்கப்பட்டு,
ஆவேசமாய் அணிதிறள்கிறார்கள்;
         விலைபேசுவதும் விலைபோவதும்
         தலைவர்கள் மட்டுமே.

தேர்தல் 2

பிரச்சாரம் முடிந்தது
தேர்தல் முடிந்தது
ஜனநாயகம் மடிந்தது.
******
விழித்துக் கொண்டது 
தேர்தல் ஆணையம்...
உறக்கத்தில் கருப்புப்பணம்.
****** 
எச்சரிக்கை நெருப்பு
வேகவில்லை பருப்பு...
கலக்கத்தில் கரைவேட்டிகள்.          

சுவை....

வயிற்றுப் பொருமல்,
வாய்வுக் குத்து,
ரெத்தக் கொதிப்பு,
மூச்சு இரைப்பு,
வரட்டு இருமல்,
 வாந்தி பேதி,
சர்க்கரை நோயின்
சங்கடங்கள் எல்லாம்....
ஒருபக்கம் இருக்கட்டும்;
            வாய்க்கு ருசியாய்
            வக்கனையாய்க் கேட்கிற
             நாக்கு பேசியது_
நொறுங்கத்தின்றால்
நோயில்லை.
          

வெறுப்பு

               என்னைப் பெருவதற்காய்
               அவர்கள் கூடவில்லை;
               அவர்கள் கூடியதால்
               நான் பிறந்தேன்.
 
அத்தனை திமிரும்
அடங்கி விட்டது;

காசு பணம்
கரைந்து விட்டது;

இரத்தம் சுண்டிச்
சுருங்கி விட்டது;

ஏதேதோ நோய்....
ஏதேதோ மருந்து....

எல்லாமுமாய்ச் சேர்ந்து
எண்ணிக் கொண்டிருக்கிரார்
நாட்களை;

செத்தால்....
செய்தி
சொல்ல வேண்டாம்.
            என்
            பிறப்புக்கு மட்டுமே
            விதை போட்ட
             ஒருவனை....
எப்படிச் சொல்வேன்
அப்பனென்று? 

துளிப்பாக்கள் 21

கூரையில்லா வீட்டில்
குடையாய் விரிந்தது
டிஸ் ஆண்ட்டனா.
****** 

புல்லாங்குழல் இசை
இடையே டொக்டொக்
சில்லரைகள் சேர்ந்தன.

தேர்தல்

அபாய அறிவிப்பு
எச்சரிக்கையாய் இருங்கள்;
தேர்தல் வருகிறது.
****** 
தவறானவர்கள்
தவறானவர்களுக்குத்
தவறாமல் செய்த தவறு
தவறாமல் தவறாது.

******
நாங்கள் சோசலிஸ்டுகள்
எங்களுக்கு எல்லோரும் சமம்
அணிமாறுவோம்; கொடி மாறாது.
****** 
 போடுறாங்க நோட்டு;
போடுறாங்க ஓட்டு;
போடுறாங்க வேட்டு.
******
அடுத்த தேர்தலில்
நாங்களே வெல்வோம்
“ஆஸ்கார் விருது” அள்ளித் தருவோம்.
******
பொய்கள் இலவசம்
போலிகள் புதுவேசம்
தேர்தல் தேரோட்டம்.
******

அஞ்சமாட்டோம் – எவரையும்
கெஞ்சமாட்டோம் – ஜனநாயகம்
எங்கள் கையில்.
******
இந்நாளை
முந்நாளாக்கி...
முந்நாளை
இந்நாளாக்கிய...
எந்நாளும்
ஏழைக்கு...
விடியல்
எந்நாளோ..?

தமிழர் திருநாள்

தந்தனன தானதன தானா – தன
    தானதன தந்தனன தான.

தமிழன்னை தானெந்தன் பேச்சு – அவள்
    தந்ததுவே கவிதையெனும் மூச்சு
அமிழ்தவளைக் கும்பிட்டுக் கேட்டு – அவள்
    அருளாளே பாடுகிறேன் பாட்டு.

உழவனவன் தெய்வத்தின பிள்ளை – உடன்
    ஓட்டிடுவான் உயிர்வகையின் தொல்லை
உழவனுக்கு உலகத்தார் பிள்ளை – உடன்
    ஓட்டிடுவான் உறுபசியின் தொல்லை.

உழவனவன் உலகவர்க்கே ஆணி – துயர்
    ஓட்டுகின்ற தேவலோக ஏணி
உழைத்துழைத்தே ஓயாத தேனி – பயிர்
    ஊக்கத்தால் மேம்பட்ட ஞானி.

மண்மகளை வைகறையில் தொழுவான் - திமிர்
    மாடுகளின் ஏர்பூட்டி உழுவான்
தண்பயிரின் வளமதனைப் பார்க்க – நிமிர்
    தலைசாய்த்து உழைத்திடுவான் வேர்க்க.

நிலமடந்தைக் குழவனிடம் காதல் – அதை
    நிலைநாட்டச் செய்திடுவாள் ஊடல்
குலமகளின் மேனியிலே பசலை – அவள்
    கோலமுகம் காட்டிடுமே அசலை.

நீர்வேந்தன் நீக்கிடுவான் தாகம் - உடன்
    நேருழவர் தந்திடுவார் போகம்.
பார்வேந்தன் போக்கிடுவான் சோகம் - எனில்
    ஏர்வேந்தன் தானந்த மேகம்

மழைமுகில்கள் தருபயனே கூட – உழவன்
    வாழ்த்துகுர லால்வணங்கும் ஆட!
அழைத்திடவே வந்திடுவான் வெய்யோன் - உழவன்
    அன்போடே அனைக்கின்ற மெய்யோன்.

பரிசளிக்க வந்தாளே இயற்கை – நல்ல
    பயிர்வளத்தைத் தந்தாளே இயற்கை
சிரித்தமுகம் போல்வாளே இயற்கை – எல்லார்
    சிந்தையிலும் உறைபவளே இயற்கை

அப்பாடா அவன்பட்ட பாடு – அதை
    அங்கேபார் நெற்குவியல் மேடு
எப்பாடு பட்டதனைப் பெற்றான் - கதை
    ஏட்டினிலா அப்பாடம் கற்றான்

வேளாண்மை தந்திடுமே மகிழ்வு – உடன்
    வேளாளர் நெஞ்சமெல்லாம் நெகிழ்வு
தாளாண்மை தானிதற்கு வழியாம் - உயிர்த்
    தமிழொன்றே சொல்லிவைத்த மொழியாம்.

வெற்றி விழா காணவந்த தைநாள் - கலை
    வேல்விழியார் பாடுகின்ற தைநாள்
நெற்றியிலே செந்தூரம் இட்டு - இவர்
    நெய்ததுவே இன்பத்தின் பட்டு

திருவுடைய உழவர்க்குத் திருநாள் - அது
    தீஞ்சுவையே பொங்கவரும் ஒருநாள்,
அருவடையின் அடையாளத் திருநாள் - அது
    அவனியிலே ஆன்மீகப் பெருநாள்

கால்நடைகள் நீராட்டி இன்று – மணி
    காற்சதங்கை பூட்டிடுவார் நன்று
பால்குடிக்கத் துள்ளிவரும் கன்று – பசு
    பாங்குடனே பால்சுரக்கும் நின்று

கருவுடைய கவிதையுள ஏடு – வளர்
    கால்நடைகள் மேய்ந்துவரும் காடு
உருவுடைய தெய்வத்தேன் கூடு – அது
    உழவனவன் குடியிருக்கும் வீடு.

மணிமுத்துத் தோரணங்கள் தொங்கும் - மலர்
    மாலைகளில் வண்டினங்கள் தங்கும்,
அணிகளன்கள் பல்வகையில் கண்டு – அதை
    அணிந்தணிந்து மகிழ்ந்திடுவாள் பெண்டு.

புத்தாடை பொன்மணியும் பூண்டு – உடன்
    புன்னகை பூத்திடுவாள் ஆண்டு
முத்தான பிள்ளையரும் வந்து கடன்
    முத்தங்கள் பெற்றிடுவார் தந்து

இந்திரனை இந்நாளில் போற்றி – துணை
    இருந்திடவே அவனிடத்து சாற்றி
பந்தமுடன் தீபங்கள் ஏற்றி – புகழ்
    பாடிடுவோம் பக்தியினால் போற்றி

இந்திரனின் கோயிலிலே கூட்டம் - தெரு
    இனிக்கின்ற பூவையரின் தோட்டம்
சுந்தரமா மங்கையரின் ஆட்டம் - அவர்
    சுனைமுழ்க ஆடவர்க்கு நாட்டம்.

இந்துக்கள் மனைதோரும் பொங்கல் - அதை
    இன்புடனே காணவரும் திங்கள்
சொந்தங்கள் எல்லாரும் கூடி – மனம்
    சொக்கிடுவார் மஞ்சள் நீர் ஆடி.

பச்சரிசி பாலினிலே பொங்க – நல்ல
    பசுநெய்யில் பருப்புமிக முங்க
கச்சிதமாய்ப் பொங்கலுமே படைக்க உண்டு
    களித்திடுவோம் வயிறுமிகப் புடைக்க

செங்கனிகள் தந்தசிறு வித்து – அவை
    தென்பாண்டி உழவனுக்கு முத்து
இங்குபுகழ் தரவல்ல சொத்து – அதை
    ஈட்டுவதில் உழவனுக்குப் பித்து

நிறைநாழி நெல்வைத்து நல்ல – சுவை
    நெடுங்கரும்பும் உடன் வைத்து மெல்ல
இறைவணக்கம் செய்யுமனம் துள்ள – உடன்
    இதைக்காண்பார் நெஞ்சமெல்லாம் அள்ள

கற்கண்டும் தேன்பாகும் கொண்டு – சுவை
    கம்பமாவின் பண்டவகை உண்டு
நெற்பயிரும் கனிவகையும் கொணர்ந்து – நிறை
    நெஞ்சங்கள் வாழ்த்திடுமே உணர்ந்து

மார்தட்டி மீசையினை முறுக்கி - இடை
    வார்தட்டி வடிவத்தைக் குறுக்கி
கூர்கொம்புக் காளைகளை மடக்கி - இரு
    கொம்பொடித்து வீழ்த்திடுவார் அடக்கி

வீரம்தான் விளையாடித் துள்ளும் - விழி
    மீனொத்த பாவையுளம் கிள்ளும்
தீரத்தைப் பார்புகழ்ந்து சொல்லும் - வழி
    சீர்படவே எந்நாளும் செல்லும்.

எங்கெங்கு பார்த்தாலும் இன்பம் - பயிர்
    ஏற்றத்தால் வந்ததுவே என்பம்
மங்காத புகழோனே உழவன் - அவன்
    மண்ணாள வந்தவொரு கிழவன்.

இன்பத்தேன் இன்றிங்கே கொஞ்சும் - பெரு
    ஈகைத்தேன் வெள்ளமது விஞ்சும்
அன்புத்தேன் ஓடிவரும் நெஞ்சம் - அது
    ஆன்மீகக் காதலுக்கு மஞ்சம்.

கவிநெஞ்ச ரோசாவின் பொழில் - ஒளிக்
    கண்நெஞ்சு வள்ளியரின் எழில்
புவியினிலே இயற்கையவள் அருமை – அவை
    பொங்கலிலே உழவனுக்குப் பெருமை.

மங்காத புகழ்மறையைப் பேணி – தினம்
    மங்கையவள் வந்திடுவாள் நாணி
சங்கீத வீணைகளும் இன்று – மனச்
    சல்லாபம் பேசிடுமே வென்று.

தைப்பொங்கல் திருநாளில் மட்டும் - தகை
    சான்றவொரு புத்துணர்வு கிட்டும்.
காப்புடைய இயற்கையவள் விருந்து – வரும்
    காலத்தை வளமாக்கும் மருந்து

தைப்பொங்கல் நாள்முதலாய் விழித்து – மதி
    தப்பாது தீயவற்றை ஒழித்து
எப்போதும் மேன்மையது கொழித்து - இனி
    எந்நாளும் வாழியவே செழித்து

வண்ணத்தை வளமாய்த்; தீட்டி
    எண்ணத்தை அதிலே ஊட்டி
அன்னத்தை ஒப்புமை காட்டி
    கன்னத்தை கவிதை பாடி
நல் வித்தை நிலத்தே நாட்டி
    நன்முத்தை பயனாய் ஈட்டி
பத்தை நூறாய்க் கூட்டி
    இத்தை நாளில் இனிதே வாழ்க!