கொள்ளி

                                                                     கொள்ளி

                             நீயெல்லாம் மனுசனா?
                             குடிவெறியில
                             பொட்டச்சிகிட்ட
                             வீராப்புக் காட்டுறையே!
                             தூ...தொடாதே...
                                          ​ - சொல்லி வைத்தாள் மனைவி.

                             பெத்த பிள்ளைக்கு
                             பசியாத்தத் துப்பில்ல...
                             நீயெல்லாம்.....
                             எதுக்குடா பிள்ள பெத்த...?
                                             -கடிந்து கொண்டான் மகன்.

                             வீட்டுக்குப் பாரமான
                             நாட்டுக்குப் பாரமான
                             கேடுகெட்ட வாழ்க்கை
                             முடிவுக்கு வந்தது....
                                        
                             நாதியற்றவனாய்
                             நடுநிசியில்
                             நடுவழியில்
                             நாயாய்ச் செத்துக்கிடந்தான்.

                             செத்ததில் எவருக்கும்
                             சங்கடமில்லை;
                             சடங்கில் எவருக்கும்
                             சம்மதமில்லை;

                             ஆனாலும்-
                             திட்டிக்கொண்டே
                             கொள்ளி வைத்தான்
                             சின்னப் பிள்ளை.

ஆடப்பிறந்தவளே ஆடி வா


ஒப்பனை போதுமடி கிளியே


இ்ணையும் பிணையும்


என்னதான் ரகசியமோ இதயத்திலே


கல்லிலே கலை வண்ணம் கண்டான்


மயக்கமா கலக்கமா


ஆயுதங்கள் அழிப்போம்


மனதில் உறுதி வேண்டும்


சுட்டும் விழிச்சுடர்.....

          நல்லிதயம்  பெற்றோரே...!
          நற்றமிழில் வல்லோரே...!
          சின்னக் கவியெந்தன்
          சிரந்தாழ்ந்த வணக்கங்கள்.

என்னைப் பற்றிச்
சிலவரிகள்
எடுத்துச் சொல்ல
விரும்புகிறேன்...

நேரச் செலவைப்
பாராமல்
நேயத்தோடு
நீரிதனை

ஏற்றுக்கொள்ள
வேண்டுகிறேன்
ஏக்கத்தோடு
பாடுகிறேன்....

          பிறவியில் என்பெயர்
          மணிவண்ணன்;
          பெற்றவர் பெயரோ
          ராதாகிருஷ்ணன்.                       
                       
                              இரண்டாம் பிறவியில்
                              என்கவி அறிந்து
                              குன்றக்குடியின்
                              அடிகள் தானும்

                               வாழ்த்திச் சூட்டிய
                               வளர்தமிழ்ப் பெயரே
                               கவிதாமணி யெனும்
                               இரண்டாம் முகவரி.

முதல்வகுப்பு முடியுமுன்னே
முதல்மேடை ஏறியதில்
முதல்பரிசு பெற்றதுவே
முகவரியின் முதல்வரியாம்.

எட்டாம் வகுப்பினிலே
நேருமகான் நேர்த்தியினை
எடுத்தியம்பும் போட்டியதில்
மாநிலத்து முதற்பரிசு.

புகுமுக வகுப்பினிலே
தேவாரக் கட்டுரையில்
மைய அமைச்சரவர்
மகிழ்ந்தளித்த முதற்பரிசு.

பாரதி நூற்றாண்டின்
பாட்டரங்கம் தனிலேறிப்
பாங்காயப் பெற்றதுவும்
பகட்டான முதற்பரிசே!

             தேசிய மாணவர்
             படைதன்னில்
             சேர்ந்து பெற்ற
             பயிற்சிகள் எத்தனை?

             தேசிய அளவில்
             போட்டிகளில்
             தேடிக்கொண்ட
             பரிசுகள் எத்தனை?

சென்னை-
அம்பத்தூர்
இலக்கியப் பேரவையில்
அகவற் போட்டிதனில்
ஆயிரம் பேருள்ளே
இரண்டாம் பரிசெனினும்
இருமாப்பு இருமடங்கு.

கல்லூரி களிலெல்லாம்
கணக்கற்ற போட்டிகளில்
வென்றெடுத்த பரிசுகள்தான்
எத்தனை எத்தனையோ...!

அண்ணா பல்கலையின்
அத்தனை போட்டியிலும்
அள்ளிவந்த பரிசுகளில்
ஆனந்தம் வழிகிறது.

கோவை மாநகரில்
தனியொருவன் நானாகத்
தட்டிவந்த சுழற்கோப்பை
தனிப்பெருமை கொண்டதுதான்.

மதுரை-
வேளாண் பல்கலையின்
வித்தெல்லாம் எனக்கங்கே
தனிமன்றம் அமைக்கின்ற
விசித்திரமும் நடந்ததுவே.

மதுரைப் பல்கலையின்
மகுடத்து உச்சியிலே
படுத்துறங்கும் பெருவாய்ப்பு
பலகாலம் வாய்த்ததுவே.

        சென்னை-
        கம்பன் கழகத்தின்
        கவிதைப் போட்டியிலே
        முதற்பரிசு பெற்றுபுகழ்
        முடிசூட்டிக் கொண்டவன்நான்.

                  "தேவதை வருகிறாள்"
                  கைஎழுத்திதழ் ஆசிரியராய்
                  அரும்பணி ஆற்றிய
                  அனுபவமும் இருக்கிறது. 

கல்லூரிக் காலமெல்லாம்
கவிபாடித் திரிந்ததனால்
கட்டாயப் பாடத்தில்
கரையேற வில்லைநான்.

                    சிந்தையெல்லாம் செந்தமிழின்
                    சிந்தனையே இருந்தாலும்
                    எந்தையவர் என்னைத்தான்
                    தினித்ததுறை வணிகவியல்.

வணிகவியற் பாடத்தில்
முதுகலையிற் பட்டத்தை
முதல்வகுப்பிற் பெற்றாலும்
முதலீடு ஆகவில்லை.

                    கல்வித்துறையில் ஒருபட்டம்
                    கணக்காய்நானும் பெற்றாலும்
                    கற்றுக்கொடுக்கும் ஒருவாய்ப்பு,
                    கனவைப்போல வாய்த்ததுவே.

பலியாடாய்ப் போனாலும்
பலகாலம் ஆனாலும்
விழிபிதுங்கி நிற்கின்ற
விபரீதம் எனக்கில்லை.
               
மொழித்தாயின் அரவணைப்பில்
முகச்சாயம் இல்லாத
தனித்தன்மை இருப்பதனால்
தலைநிமிர்ந்து நிற்கின்றேன்.

                      சொல்லூரும் நாவுக்குச்
                      சுகமூறும் பாவுக்குத்
                      தடைகூறும் யாருக்கும்
                      தலைசாய்க்க மாட்டேன்நான் .

ஏரோட்டும் என்பேனா
என்றேனும் ஒருநாளில்
தேரோட்டும் என்கின்ற
தெம்பெனக்கு இருப்பதனால்...

யார்மாட்டும் யாசித்து
ஒருவாயப்புப் பெறுவதிலே
ஒருநாளும் என்நெஞ்சு
உடன்பாடு கொண்டதில்லை.

          பாட்டரங்கம் பலஏறிப்
          பாராட்டுப்  பெற்றாலும்
          சீராட்டும் வாய்ப்பெனக்குச்
          சீர்கொண்டு வரவில்லை.

          இத்தனை மேடை
          ஏறிய பின்னும்
          இத்தரை தன்னில்
          எனக்கிட மில்லை.

          குடத்திடை இட்ட
          நெருப்பென நெஞ்சு
          தகிக்கிற  தாகம்
          தீர்ந்திட வில்லை.

எனக்குத் தெரிந்ததில்
எள்ளளவேனும்
தனக்குத் தெரியும்
என்பவர் கூட
உயரப் பறக்கும்
குருவிகள் போல
ஊர்வலம் வருவது
எப்படியோ...!

உதிர்ந்த இறகினைப்
போல நானும்
உட்க்கார்ந் திருப்பது
சரிதானா...?

           அடையாளம் தெரியாத
           உடையாரும் இல்லார்முன்
           அவமானப் படுவதுதான்
           வெகுமானம் ஆகிறது.

           அவதூறு சொன்னாலும்
           அழகில்லை என்றாலும்
           சிப்பிக்குள் முத்திருந்து
           சிரிப்பதற்குத் தடையுண்டோ...?

                            மேலேறி வருவதற்கு
                            மேனியுரம் இருந்தாலும்
                            மேலேரும் வரையேணி
                            வேண்டிய தாகிறது.

காலம் கடந்திதனை
அறிந்துகொண்ட காரணத்தால்
கடவுளைக் கொஞ்சம்
கண்திறக்க வேண்டுகிறேன்.

காலூன்ற விழைகின்ற
கவியெந்தன் பாட்டுக்குச்
செந்தமிழின் வல்லோரே
செவியூன்ற வேண்டுகிறேன்.

            மூன்றாம் பிறவிக்கு
            முறையீடு செய்கின்றேன்...
            முடிந்தால் வாய்ப்பளித்து
            வாழ்த்துங்கள் வாழ்த்துங்களேன்...

அறிமுகம் செய்வதிலும்
ஆணவமே கலந்திருப்பின்
அறியாமை என்றதனை
அழித்துவிட வேண்டுகிறேன்.

குறைகுடம் என்பதனால்
கூத்தாடி இருக்கின்றேன்...
நிறைகுட மாகவென்னை
நேர்படுத்த வேண்டுகிறேன்.

            எழுத்தின் வேகம்
            மிகுந்த தனால்
            ஏதேதோ நான்
            எழுதிவிட்டேன்.

                              எந்தப் பிழைதான்
                              இருந்தாலும்
                              சொந்தப் பிள்ளை
                              போல் நீரும்
                              பொறுத்துக் கொள்ள
                              வேண்டுகிறேன்;
                              வாழ்த்தி அருளத்
                              தூண்டுகிறேன்.

                                                                                           நன்றி..!
                                                                                           வணக்கம்..!
                                                                                           அன்புடன்-
                                                                                           கவிதாமணி.

பின்குறிப்பு:

இப்படிப் பெருமை
பேசிட எனக்கு
எப்படி மனமும்
ஒப்பியதோ..!

செப்படி வித்தை
செல்லா தெனக்குத்
தப்படி யேனும்
தப்பிடுமோ..!

அப்படி யேதும்
தருவ தென்றால்
அடியேன் தனியே
வருகின்றேன்...!

முப்படி யேறி
மூப்படி எய்திட
முதுகைத் திருப்பித்
தருகின்றேன்.  

சரித்திரம் படிப்பதை விட படைப்பது மேல்


மானமே உயிர்


தழிழ் எங்கள் பிறவிக்குத் தாய்


ஆடுவார் ஆடினால் பாடத்தோன்றும்


சிந்தனை ஏதடி சித்திரமே


தாயே தழிழே காத்தருளே!


கனி கொண்ட களிப்பு


நான்


முழக்கம்

                                              முழக்கம் 

                                       அப்துல் கலாம்

                                       கனவு கண்ட

                                       20 20 ஐ

                                       கிரிக்கட் போட்டிகளுக்குக்

                                       காவு கொடுத்து விட்டோம்;

                                       இனி...

                                       30 30 என்று

                                       முழக்கமிடுவோம் ;

                                       அதுவரையில்...

                                       ஊத்தைப் பல்லைக்

                                       குத்திக் கொண்டு,

                                       உண்ட களைப்பில்

                                       உறங்கிப் போவோம்.                                                                                                                                                                                                                                                                                                                                     

வங்கி

                                                               வங்கி

                                            காசாளர் வேலை
                                            எண்ணிக் களைத்தான்
                                            காசில்லை கையில்.
என்ற, என் கவிதை, கொஞ்சம் பொய்யாகிப் போன சூழலை, வங்கியில் பார்த்தேன்.பணத்தை எண்ணிப் பார்க்கவும், கள்ள நோட்டைக் கண்டு பிடிக்கவும், இயந்திரங்கள் வந்துவிட்டன.எத்தனை முறை எண்ணினாலும் இயந்திரம் களைப்பதில்லை. ஆனால் இப்போதும் ஏதோ ஒரு வங்கியின் காசாளர் எண்ணிக் களைக்கா விட்டாலும், கையிலும் பையிலும் காசில்லாத கவலையில், களைத்தும் சலைத்தும் தவிக்கலாம்.

                 குளிர்சாதன வசதி செய்யப்பட்ட, தனியறையில் இருந்தபடி,மேலாளர், இயந்திரத்தனமாய், ஏதேதோ செய்துகொண்டிருந்தார்.

                  11 மணி.... பரபரப்பில் எல்லோருமே இயந்திரத்தனமாகத்தான்  இருந்தார்கள்.ஏதோ ஒரு ஒழுங்குக்குள் ஓடிக்கொண்டிருந்தன வேலைகள்....

                  காசோலையைக் கொடுத்துவிட்டு 11ம் எண் வில்லையைப் பெற்றுக் கொண்டு காத்திருந்தேன்.

                  சுற்றுச் சுவர்களில், குட்டிக் குட்டி எழுத்துக்களில் ஆங்கிலத்திலும், இந்தியிலும் அறிவிப்புப் பதாதைகள் தொங்கின; சம்ரதாயமாகத்தான் இருந்தனவே ஒழிய, அதுபடி ஏதும் நடப்பதாகவோ, யாரும் கண்டு கொண்டதாகவோ, தெரியவில்லை.

                  எழுதிவிட்டுத் தருவதாக, ஏன் பேனாவை, ஒருவர் இரவல் கேட்டார்; முன்னெச்சரிக்கையோடு, மூடியை எடுத்துக் கொண்டு,பேனாவை மட்டும் கொடுத்தேன்.

                 குழி விழுந்த கன்னமும், சுருங்கிய கண்களும், தளர்ந்த நடையுமாய், வத்தலும் தொத்தலுமாய், ஒரு பாட்டி உட்கார்ந்திருந்தார்....

                  இந்தக் கிழவிக்கு, இங்கென்ன வேலை...? பரட்டைத் தலையும், அழுக்குப் பிடித்த சேலையுமாய், எதற்கு வந்திருப்பார்...? யாராவது கூட்டி வந்திருப்பார்களோ... சுற்று முற்றும் பார்த்தேன்....

                  கலர் கலராய்க் காகிதங்கள் ஒட்டியிருந்தார்கள். ஆயுத பூசையையோ, புத்தாண்டையோ கொண்டாடியிருக்கலாம்....

                  பலரும் வந்து போகிற பொது நிறுவனத்தில், சாமி படம், எப்படி சாத்தியப்பட்டது...?

                   அடுப்படியையும் தெருப்படியையும் தாண்டாத, அம்மணிகள் எல்லாம், சுய உதவிக் குழுக்களில் சேர்ந்து, வங்கிப் படிகளில் ஏறத் தொடங்கி விட்ட சூழலில்,குட்டி குருமாக்களும் வங்கியில் வரவு செலவு செய்வது சகஜமாகி விட்டது,

                    காசாளர் கூண்டுக்கு வெளியே, அவசரமும் அவஸ்த்தையுமாய்ச்  சிலர்.... பெருமையும் மிடுக்குமாய்ச் சிலர்.... அடுத்தவர் கையில் இருக்கும் பணத்தையும், பூர்த்தி செய்த எழுத்தையும், நோட்டமிட்டபடிச் சிலர்....

                     நம்ம பணத்தைப் போட்டுட்டு, நாம எடுக்கப் போனா, ஏதோ.... அவங்க தேட்டக் கேட்ட மாதிரி அதட்டல், அதிகாரம், அது இருக்கா? இது இருக்கா? யாரு கையெழுத்து? கேள்வி மேல் கேள்வி கேட்டு, நொனனட்ன  பண்ணுவாக....

                    ஹைதர் அலி காலத்தில், கணிப்பொறிகள் இல்லையே.... பிறகு எப்படி வங்கிக் கணினிகள், வேலை செய்யாமலே வேலை செய்கின்றன-- அலுவலர்களைப் போலவே...!

                    சொடுக்கிச் சொடுக்கி, அலுத்துப் போய் ஆத்திரமாய்ப் பொத்தானை அழுத்துவார்.... அசைந்து கொடுத்த பிரின்ட்டரில், பேப்பர் சிக்கும்....

                    நாலே வரியில் இருக்க வேண்டிய ஸ்டேட்மெண்ட்டை, பக்கத்துக் கொன்றாய், நாலு பக்கத்தில் அச்சடித்துத் தரும் ஆபீசர் ஒரு பக்கம்....

                    பேப்பரை மிச்சப் படுத்துகிறேன் பேர்வழி  என்று, சலான்களைத் தன் கஸ்ட்டடியில் வைத்துக் கொண்டு,ஒரு கையில் இரட்டைக் குழல் துப்பாக்கியைப் பிடித்தபடி, எச்சிலைத் தொட்டுத் தொட்டு, ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு சலானாய், எடுத்துக் கொடுக்கிற, செக்யூரிட்டி ஒரு பக்கம்.....

                     லோன் வாங்க லோல்பட்டு, அல்லாடுகிறவர்கள் ஒரு பக்கம்....

                     இப்படியாகப் பல வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறது  பேங்க்.

                     பாஸ் புத்தகத்தில், கோடு ஒரு பக்கம் இருக்க, பதிவு இன்னொரு பத்தியில் இருக்கும்... நேர இருந்தாலே புரியாது.... பற்றா வரவான்னு தெரியாது.... ஏதோ நம்பிக்கையில் -- திவால் ஆனா வங்கிகளிலும் -- நடவடிக்கைகள் தொடர்கின்றன....

                     கூட்டுறவு வங்கிகளின், தேர்தல் அடிதடிகளில், மரண பயத்தோடு, கரைவேட்டிகள் கிழிபடுவது தனிக் கதை....

                     டாஸ்மாக் வரிசையிலோ, டாலர் தேசத்துப் பாஸ்போர்ட் வரிசையிலோ, காத்திருந்து கடுக்காத கால்கள்,வங்கி வரிசையில் வாடித் தவித்தன....

                     டோக்கன் 6... டோக்கன் 6... என்ற அழைப்பு வந்தது....என்னைப் போலவே பலரும் தங்கள்  வில்லை எண்ணைப் பார்த்தார்கள்....

                     ஆறு... அது யாரு...? என்று நானும் தேடினேன்....

                     உள்ளே இருந்து சப்த்தம் கேட்டது.... அந்தக்  கெழவிக்குத் தான்யா கொடுத்தேன்.... இருக்குதா பாரு...

                     காக்கிச்  சட்டைச் சிப்பந்தி கிழவியை நெருங்கினான்....

                     ஏ  கெழவி...! எத்தன தடவ கத்துறது...? டோக்கன எங்க...?

                     பேந்தப் பேந்த விழித்தபடி, தன் மடியில் தேடிக் கிடைக்காமல், சிரமத்தோடு எழுந்து, அழுக்குப் புடவையை, உதறிப் பார்த்தாள்.... கிடைக்க வில்லை.

                     எப்ப வந்தாலும், ஒனக்கு, இதே பொழப்பாப் போச்சு... மாசந் தவறாம, எங்க உசுர, எடுக்க வந்துருவ....

                     எதையும் காதில் வாங்காத கிழவிக்கு, 'காது கேட்குமோ... கேட்க்காதோ...!'

                     ரூவா குடுங்க சாமி....

                     ஒனக்கு இன்னும் பணம் வரல....

                     நாலு நாளா இதையேதான சொல்றீக...

                     துணுக்குற்றேன்.... பாட்டிக்குக் காது கேட்க்கிறது.

                     டொய்ங்.... சத்தத்தோடு, உருண்டு புறண்டு, ஓடியது டோக்கன்... ஒரு குழந்தை, எடுக்க ஓடியது....

                     விசுக்கென்று எடுத்த ஒருவர், கவுண்ட்டரில் கொடுத்தார்....

                     ஓடிய குழந்தையும், குனிந்து எடுத்தது, ஒரு பேனா மூடி....

                     நினைவு வந்தவனாய்ப் பேனா  வாங்கிய ஆளைத் தேடினேன்... அடையாளம் நினைவில்லை.... ஆத்திரமாய்த் தேடினேன்....

                     கிழவி, படி இறங்கிக் கொண்டிருந்தாள்....

                     மூடியைக் குழந்தையிடம் கொடுத்தேன்....

                     குதுகூலமாய்க் குதித்தது குழந்தை.
                              

பத்து மார்க்

                                                                 பத்து மார்க்.

          மக்கும் குப்பையோ .... மக்காக் குப்பையோ.... பொதியைக் குறைத்தால் போதும். குப்பை =கல்வி. மெக்கேலாவின் கல்வி முறைக்குச் சரியான குறியீடு குப்பைதான்.
       
          இந்த லட்சனத்தில் 'ஜெயித்துக் காட்டுவோம்',என்று சத்தமில்லாமல் சமர் புரிவதில் எல்லோருமே சமத்தாய்க் களமிறங்கியிருப்பது தவிர்க்க முடியாத சாபக்கேடு.
       
          ஏதேதோ கனாக் கண்டவர்களும், சவால் விட்டவர்களும், ஆவலாய், கவலையாய், அவஸ்த்தையாய் அலைந்தவர்களும், எதிர் பார்த்த, பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின.
       
          படித்த லட்சணமும், படிப்பித்த லட்சணமும் வெட்ட வெளிச்சமாய் வீதிக்கு வந்தன. தேர்தல் முடிவுகளைவிடத் தேர்வு முடிவுகளின் அதிர்வுகள் விநோதமானவை..... விபரீதமானவை....
       
          தலையில தலையில அடிச்சேன்.... அடங்காத நாயி ஆட்டம் போட்டுட்டு... முழுசா மூணு பாடத்துல பெயிலாகி நிக்கிறான்.... முட்டாப்பய....

          அப்பன் குடிகாரன், ஆத்தா கைநாட்டு.... பிள்ளைகளப் பாரு.... ஒன்னுக்கொன்னு வீச்சா.... கஞ்சிக்கு இல்லாட்டியும், படிப்புல யாரும் மிஞ்ச முடியாது....

          இவன்லாம், தேருவான்னே  நெனைக்கல.... பஸ்ட்  அட்டம்ட்லையே பாசாயிட்டான்யா....

          எலே .... பொட்டப்புள்ள மாதிரி விசும்பாதலே.... போனப் போகுது, அக்டோபர்ல பாத்துக்கலாம்.... அதுவும் இல்லாட்டி இருக்கவே இகுக்கு நம்ம தொழிலு.... இன்னொரு கடையப்  போட்டுக்  காலாட்டிக்கிட்டே, காலம் தள்ளலாம்....

          இப்படி, இன்னும், எத்தனை எத்தனையோ சம்பாசனைகளும் சங்கதிகளும் எல்லோரும் கேட்பதும் பார்ப்பதும் சகஜம்தான்.

          ஆனால் வித்தியாசமான, விசித்திரமான சம்பவம்தான், இந்தக் கதையின்.... இல்லை.... நிஜத்தின் நிஜம்.

          ஒரு குடும்பமே கலவரத்தின் களேபரத்தில் கசங்கிக் கிடந்தது.... அதிர்ந்துபோய் உட்கார்ந்திருந்தார் அப்பா ராமமூர்த்தி; எவரெவர் முகமேல்லமோ அவர்முன் நிழலாடி  நின்றன.... எவர் முகத்திலும் முழிக்க முடியாதவராய் நெகிழ்ந்தார்.... ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தாள் அம்மா.... ஏழாவது போகப் போகிற தங்கைகூட ஏளனமாய்த்தான் பார்த்தாள்....

          கணக்கு டீச்சர் காயத்ரி மேடம், போனில் கூப்பிட்டு, வறுத்து எடுத்து விட்டார்; தன்னைக் கேவலப் படுத்திவிட்டதாகக் கடிந்து கொண்டாள் தமிழம்மா வள்ளித்தாய் .

          பேச்சு, கவிதை, ஓவியம், கபடி, கைப்பந்து, கராத்தேன்னு வெட்டி வேல செய்யாதன்னு எத்தனதடவ எச்சரிச்சேன்.... கேட்டியா.... நீ வாங்குன கப்பும் மேடலுமா காப்பாத்தப் போகுது? பொரிந்து தள்ளினாள் ஹெட்மிஸ்ட்ரஸ் கீதாக்கண்ணன்.

          நொந்து நூலாகிப் போன, மீனாகுமாரி, கம்ப்யூட்டரில் எடுத்த, மார்க் லிஸ்ட்டை, மூன்றாவது முறையாகக் கூட்டிப் பார்த்தாள்.... எப்படிக் கூட்டினாலும், 490 தான் வருகிறது.

          எங்கே போனது 10 மார்க்....? எப்படிப் போகும் 10 மார்க்....?
                                           
                                                               *  *  *  *  *
 கிளைக்கதை:

               ரீ வேல்யுவேசன் போட்டார்கள்....
                           கணக்குல 5 வந்து செண்டம் ஆனது.
                           தமிழ்ல 2 வந்து 99 ஆனது.      
                இப்போ டோட்டல் 497.
                            அப்படியானால், 496 ல் ஸ்ட்டேட் பஸ்ட் என்று பேப்பரிலும் TVயிலும் போஸ் கொடுத்து, பேட்டி கொடுத்து, அலட்டிக் கொண்ட அமலாவையும் அவள் படித்த சூப்பர் பள்ளியையும் என்ன செய்வது....?                
                                  
கிளைக்கதையின் கிளைக்கதை:

                  விட்டுப் போன 3 மார்க், நெத்தியில் மூணு விரல் நாமமிட்டது.
                             நடந்த கதை நடந்ததுதான்.
                             முடிந்த கதை முடிந்ததுதான்.