அப்பத்தாவின் ஆசை

     எங்கள் ஊர், முல்லையும் மருதமும் கலந்த, செழிப்பான கிராமம். இதற்கென்று சில நியதிகளும்,வரையறைகளும், இருக்கின்றன; சில வழக்கங்களையும், வாடிக்கைகளையும் இவர்கள், காலம் காலமாய் வழிமொழியும்படிக்கு, முன்மொழிந்தது யாரோ....!

     என் பாட்டி வெள்ளச்சி மாதிரி காது வளத்த பொம்பளைங்கள இப்பெல்லாம் பாக்க முடியுறதில்ல...எனக்குச் சின்ன வயசுல தோணாத ஒரு சந்தேகம் இப்பத் தோணுது.... எங்க குடும்பம் இருந்த இருப்புக்கு, மூக்குத்தி போட்டுக்கவே துப்பில்லாத லட்சணத்துல, தங்கத்துல தண்டட்டி போட வழியேது...? காதுல இரும்பு வளையம் போட்டிருப்பாளோ....!

     காலம் காலமா, எங்க சாதி சனங்க, ஏதிலிகளாத் தட்டழிஞ்ச சங்கதிய, வெள்ளச்சி, கதைகதையாச் சொல்லக் கேட்டு, புரிஞ்சும் புரியாமலேயே 'உம்' கொட்டிய பால்ய வயது நாள்கள், இப்போதும் ஆணி அடித்த மாதிரி அடிமனசுல ஈரம் கசிஞ்சு கெடக்கு....

     வெள்ளச்சி, அடிக்கடி சொல்லிக்கிட்டே கெடக்கும்....ஏ ராசா...! ஓங் காலத்துலயாவது, அது நடக்கணும்....ஆத்தா செல்லாண்டியம்மன ஆயுசெல்லாம் வேண்டிக்கிட்டது வீணாகாது....

     ஏலே முனியாண்டி.... அப்பத்தா செத்துட்டாலும், ஆகாசத்துல இருந்து பாத்துக்கிட்டேதான் இருப்பேன்....

     நானும், மொளைக்காத மீசைய முறுக்கி, வீராப்பா சவால் விட்டதுண்டு.... என்னைப் போலவே, வெவரம் தெரியாத காலத்துல, எத்தனையோ சவால்களை எல்லாரும்தான் செஞ்சிருப்பாக....

     ஆளான பிறகு, அத்தனையும் மறந்து, அன்றாடப் பொழப்புக்கே அல்லாடுற   போது, சின்ன வயசு நெனப்பெல்லாம் செல்லரிச்சுப் போயிடும்.

     எனக்கு நினைவிருக்கிறது....பாட்டி சொன்ன அத்தனை கதைகளின் வலியும் ரணமும், அச்சு அசலாய் நினைவிருக்கிறது....சொல்லப் போனால்.... பாட்டியின் மரணத்திற்குப் பிறகு என் நினைவு அடுக்குகளில் நிரந்தரமாய் இருப்பது அந்த ஒன்றுதான்....

     இப்போதெல்லாம் எங்கள் ஊர் முன்பு போல் இல்லை.... மாறிவிட்டதா...? இல்லை.... மறந்துவிட்டார்களா....? மறதிதான் என்றால், மறந்தது _ அடக்க வேண்டியவர்களா...? அடங்க வேண்டியவர்களா....?

     எது எப்படியோ.... நான் மறக்கவில்லை.... வெளியில் கிளம்பி, காலில் ஷு மாட்டுகிற போதெல்லாம் பாட்டியின் வடு நிழலாடும்....

     ''ஊர் எல்லையில மிதியடியக் கழட்டாம, மேல் சாதிக் காரங்களப் போலவே, நாமளும் வீட்டு வாசல்ல கழட்டுற காலம் வரணுமப்பா...!'' 

கரன்சி நோட்டில் காந்தியார் சிரிப்பதேன்?

நான்
மோகன்தாஸ் கரம்சன்
நேரு பேசுகிறேன்....

என்னை,
காந்தி என்று சொல்லிக்
கேவலப் படுத்தவேண்டாம்.

இந்த மண்ணில்
யார் யரையோ
அன்னை என்று சொல்லிவிட்டு
என்னைத் தந்தை என்று
அவமானப் படுத்தாதீர்கள்.

எச்சிலைத் தொட்டுத் தொட்டு
என் முகத்தில் ஒட்டி ஒட்டி
பணத்தை எண்ணுவீங்க...
என்னை,எண்ண மாட்டீங்க...

கட்டுக் கட்டா நோட்டு வச்சு,
பெட்டிக்குள்ள போட்டு வச்சு,
கட்சிக்குள்ள கூட்டு வச்சு,
ஓட்ட எண்ணுவீங்க.... பிறகு...
நோட்ட எண்ணுவீங்க...

எண்ண வேண்டியத எண்ண மாட்டீங்க...
பண்ண வேண்டியதப் பண்ண மாட்டீங்க...

எனவே....

கோட்சே....!
மீண்டும் நீ பிறந்து வா...

கைத் துப்பாக்கி இல்லையே என்று
கவலைப் படாதே....

இந்தியாவின் ஆயுதக் கிடங்கு
இலங்கையில் இருக்கிறது....
'புத்தம் சரணம்' என்று சொல்....
புரிந்து கொள்வார்கள்;

ஏ.கே.47 எடுத்துக்கொள்....
இன்னொரு சத்திய சோதனை எழுது...

என்ன பார்க்கிறாய்?
அகிம்சையைத் துறக்க வேண்டிய
அவசியம் வந்து விட்டது;

      இந்தியா இரை போட்டது 
      ராஜ பச்சி எச்சமிட்டது 
      அசோகச் சக்கரத்தில். 


அந்தப் பச்சியைச் சுடு...
குறி பார்த்துச் சுடு.

கச்சத் தீவில் கால் வை...
இந்திய தேசியக் கொடியைப் பறக்க விடு...

தமிழகத்தின் தறுதலைகளைத்
தவறாமல் சுடு.

நீ சுட வேண்டிய காந்திகள்
நிறைய இருக்கிறார்கள்....
கவனமாய்ச் சுடு....
புனிதம் பெறு....
மகாத்மாவாய் இரு....

ஹா ... ஹா....ஹா...
காந்தி, ஏன் சிரிக்கிறேன் தெரிகிறதா?
ரணம் புரிகிறதா?