மறந்தன மறவோம்...

மறந்தன மறவோம்...
*******************************

கிராமத்த மறந்தாச்சு
கிழடுகட்ட மறந்தாச்சு
உழவடைய மறந்தாச்சு
ஊருசனம் மறந்தாச்சு
மராமத்து மறந்தாச்சு
மறுகாலும் மறந்தாச்சு
மரக்கால மறந்தாச்சு
மாட்டுவண்டி மறந்தாச்சு
முண்டாச மறந்தாச்சு
முளப்பாரி மறந்தாச்சு
முனுசாமி கோவிலுக்கு
மொட்டபோட மறந்தாச்சு
கண்டாங்கி மறந்தாச்சு
கடையாணி கழண்டாச்சு
காதோல கருகமணி
கருக்கறுவா மறந்தாச்சு
சொலவைய மறந்தாச்சு
கொலவைய மறந்தாச்சு
சொக்கட்டான் ஆடுகிற
சூட்சுமங்கள் மறந்தாச்சு
ஆடுபுலி மறந்தாச்சு
ஆட்டுக்கல் மறந்தாச்சு
அடுக்களையில் அடுக்கிவச்ச
அம்புட்டையும் மறந்தாச்சு
உரியடிய மறந்தாச்சு
உருமியடி மறந்தாச்சு
உச்சிவெயில் பாத்து
மணிசொல்ல மறந்தாச்சு
குச்சுகட்ட மறந்தாச்சு
கும்மியடி மறந்தாச்சு
குளத்துல குதுச்சு
குளிச்சகத மறந்தாச்சு
தப்பைச மறந்தாச்சு
தாழிப்பான மறந்தாச்சு
குப்பையில குத்தவச்ச
குறுகுறுப்பு மறந்தாச்சு
ஊமத்த மறந்தாச்சு
ஊர்மந்த மறந்தாச்சு
சாமத்துக் குடுகுடுப்ப
சத்தத்த மறந்தாச்சு
பூச்சாண்டி மறந்தாச்சு
பொன்வண்டு மறந்தாச்சு
தீப்பெட்டி வண்டியில
தேரிழுக்க மறந்தாச்சு
சாட்பூட் மறந்தாச்சு
சட்டாம்பிள்ள மறந்தாச்சு
சாட்ட பம்பரத்த
சட்டுன்னு மறந்தாச்சு
கிட்டிப்புள்ள மறந்தாச்சு
கிளுகிளுக்க மறந்தாச்சு
சுட்டிப்புள்ள பெறந்தவுடன்
சூடுபோட மறந்தாச்சு
சிட்டுக் குருவிகள
சுட்டுத் திங்கையில
பிச்சுக் குடுக்கின்ற
பிரியங்கள மறந்தாச்சு
காக்கா கடிகடிச்ச
கம்மர்கட்ட மறந்தாச்சு
மூக்கா முனியாண்டி
பேருவைக்க மறந்தாச்சு
கொலகொலையா முந்திரிக்கா
நரியநரிய மறந்தாச்சு
பனங்கா வண்டிவிட்ட
பரபரப்ப மறந்தாச்சு
கோழிக்குண்டு மறந்தாச்சு
கோலாட்டம் மறந்தாச்சு
கொக்கரக்கோ கூவக்கேட்டு
கொள்ளக்காலம் ஆயாச்சு
தாயக்கட்ட மறந்தாச்சு
தட்டாங்கல்ல மறந்தாச்சு
ஆயக்கட்ட மறந்தாச்சு
ஆத்தங்கர மறந்தாச்சு
கண்ணாமூச்சி மறந்தாச்சு
கவட்டவில்லு மறந்தாச்சு
கெந்துகம்பு மறந்தாச்சு
சிட்டிபான மறந்தாச்சு
தூளி மறந்தாச்சு
தூரி மறந்தாச்சு
கூளம் கொழுத்தி
கூதக்காய மறந்தாச்சு
வெள்ளாவி மறந்தாச்சு
வெளக்கமாறு மறந்தாச்சு
வெள்ளாம மறந்தாச்சு
வெல்லக்கட்டி மறந்தாச்சு
ஏத்தம் மறந்தாச்சு
எசப்பாட்டு மறந்தாச்சு
கூத்தனாச்சி கோயிலுக்கு
கூழூத்த மறந்தாச்சு
சிறுவாடு மறந்தாச்சு
சீர்செனத்தி மறந்தாச்சு
சிறுக்கணிக்கி மறந்தாச்சு
சீயக்கா மறந்தாச்சு
கவைய மறந்தாச்சு
களிக்கிண்ட மறந்தாச்சு
கருப்பட்டி நல்லெண்ண
கதகதப்ப மறந்தாச்சு
பாக்குரல மறந்தாச்சு
பச்சாக்கல்ல மறந்தாச்சு
சுருக்குப்பைய மறந்தாச்சு
சும்மாடு மறந்தாச்சு
தண்டட்டி மறந்தாச்சு
தாயத்த மறந்தாச்சு
ஈறுவழி மறந்தாச்சு
ஈயத்தட்டு மறந்தாச்சு
கூடுவண்டி மறந்தாச்சு
கூட்டாஞ்சோறு மறந்தாச்சு
காடுகர மறந்தாச்சு
கட்டுச்சேவல் மறந்தாச்சு
மஞ்சள்பூச மறந்தாச்சு
மஞ்சுவிரட்டு மறந்தாச்சு
மஞ்சத்தண்ணி மறந்தாச்சு
மச்சான மறந்தாச்சு
வேட்டிகட்ட மறந்தாச்சு
வெடிதேங்கா மறந்தாச்சு
பாட்டிசெத்த பாட்டோடு
பல்லாங்குழி மறந்தாச்சு
சொலகு மறந்தாச்சு
சோழி மறந்தாச்சு
பழச மறந்தாச்சு
பாசத்த மறந்தாச்சு
உலக்க மறந்தாச்சு
ஒழுகா மறந்தாச்சு
குலுக்க மறந்தாச்சு
குழுதாணி மறந்தாச்சு
வெதப்பொட்டி மரக்கா
வீசக்கல்ல மறந்தாச்சு
பழுகணி பரம்பு
பாரக்கல மறந்தாச்சு
குறுணி பதக்கு
அரைக்கா மாகாணி
அரைவீசம் படியென்ற
அளவுகள மறந்தாச்சு
மேக்கா மேழியெல்லாம்
மேலோகம் போயாச்சு
மூக்கண முழக்குச்சி
முச்சூடும் மறந்தாச்சு
குருகுலத்த மறந்தாச்சு
குலசாமி மறந்தாச்சு
குறுக்குச் சாலோட்டும்
குள்ளநரி ஆயாச்சு
ஆத்தாள மறந்தாச்சு
அப்பத்தாள மறந்தாச்சு
அய்யனாரு சாமிவந்து
ஆடுறத மறந்தாச்சு
எதயெதயோ மறந்தாச்சு
ஏளனமா இருந்தாச்சு
பதபதைக்கும் மனசுக்கு
பட்டகத மருந்தாச்சு...
போகம் ஒன்னுக்கே
போக்கத்த விவசாயி
சாகும் படியாக
சங்கூதி மறந்தாச்சு.
மறந்தாச்சு மறந்தாச்சு
சுவடுகள மறந்தாச்சு
காலத்தின் பெருவெளியில்
கால்களையும் மறந்தாச்சு

ஐயா சாமிகளா
ஐ. டி. ஆளுகளா
மெய்யா நாமிருந்த
மேன்மைகளப் பாருங்கப்பா..
குய்யோ முறையோன்னு
கும்புட்டா போதாது;
பொய்யும் புறட்டெல்லாம்
போகட்டும் இத்தோடு...
மறந்ததெல்லாம் மறக்காம
மறுபடியும் பாருங்கப்பா...
மறந்தநம் பண்பாட்டை
மார்தட்டிக் கூறுங்கப்பா .
-- கவிதாமணி.

0 comments:

Post a Comment