அசல் கவலை.

   கவலையோடுதான்  போயிருந்தான்; பலர் கவலைப் படுவது போல் காட்டிக் கொண்டனர்; இன்னும் சிலரோ கச்சிதமாய் அழுது, கண்ணீர் விட்டு, புடவைத் தலைப்பில் மூக்கைச் சிந்தி, அடுத்தவர்களை நோட்டம் விட்டு, நகை நட்டை எடை போட்டு, எதை எதையோ அசை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

   செத்துப் போனவனின் பிள்ளையிடம் கூடுதல் கவலைப் பட்டவனாய்.... துக்கம்  விசாரித்தான்....

    அடிவயிற்றைப் பிடித்து அப்பா அலறியதில்  தொடங்கி, ஆம்புலன்ஸ், ஆஸ்பத்திரி, அவசர சிகிச்சை, அனாப் பைசா செலவு உட்பட இத்யாதி இத்யாதிகள் ஒன்று விடாமல் ஒப்பித்துக் கொண்டிருந்தான் பிள்ளை-ஓட்டை ரெக்கார்டு மாதிரி எல்லோரிடமும்.

   கேட்டானான்னு கேட்டா சொன்னானான்னு சொல்லும்படியா இருந்தது சூழல்.

   எடுப்பதற்கு ஏற்பாடானது ... இவன் இன்னும் கூடுதலாய்க் கவலைப் பட்டான்.

   என்ன கவலைப் பட்டு என்ன செய்ய...? போன உசுரு வரவா போகுதுன்னு வியாக்கியானம் பேசாதீங்க....

    செத்தவன், வீட்டுக்குச் சொன்னானோ சொல்லலையோ.... தெரியுமோ தெரியாதோ.... தருவாங்களோ.... மாட்டாங்களோ....                                                       

    வட்டி போனாலும் பரவாயில்லை...
 
    அசலை நினைத்து, அசலாய்க் கவலைப் பட்டான்.

பாத்துப் போங்கடா...


     அந்த மட்ட மத்தியானத்து வெயிலில் தன் ஜீப்பில் கிளம்பிய சிறிது நேரத்தில் நடுத்தர வயதுப் பெரியவரும் அவரது மனைவியும் ஆளுக்கொரு பையைச் சுமந்தபடி நடந்து கொண்டிருந்தனர்....

     யார் என்று தெரியாவிட்டாலும், பாவம்.... வாகனப் போக்குவரத்து குறைந்த பகுதியில், அவர்களுக்கு உதவலாமே என்ற நல்லெண்ணத்தில் வண்டியை நிறுத்தி,வருவதானால் ஏறிக்கொள்ளுங்கள் என்றான்.
  
      மிகுந்த நன்றியோடு ஏறியவர்கள் தங்களை ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்த போதே.... அவர்கள் இறங்க வேண்டிய இடத்திற்கு வந்துவிட்டது வண்டி.

     நிறுத்துங்க.... நிறுத்துங்க.... இறங்கனும்.... இறங்கனும்.... என்று பதறி.... பதறாமல் இறங்கி, பவ்வியமாய்க் கதவடைத்து, பல்தெரிய இளித்து, நன்றிப் பெருக்கோடு விடை பெற்றவர்களைக் கருத்தில் கொள்ளாமல் அவனது கவனமெல்லாம் வண்டி ஓட்டுவதிலேயே இருந்தது.

     சில நாள்களுக்குப் பிறகு.... அவன் தன் காரில் அதே பாதையில் போய்க் கொண்டிருந்தான்.... தூரத்தில் அதே பெரியவர் ஓட்டமும் நடையுமாய்ப் போய்க் கொண்டிருந்தார்....

     தூரிக் கொண்டிருந்த மழை, இடியும் மின்னலுமாய் மிரட்டியது; பாவம் பார்த்தவன், பக்கத்தில் போய் நிறுத்தினான்....

     பயந்து போன பெரியவர் படபடத்தார்.... இப்படியா கண் மண் தெரியாமல் வண்டி ஓட்டுறது...? உங்க அப்பன் வீட்டு ரோடா...? பொரிந்து தள்ளினார்....

     கார் போய்விட்டது....

     வார்த்தைகள் எதிரொலித்தன....

     "பாத்துப் போங்கடா...."

நடக்கக் கூடாதது.

          தலையில் அடிபட்டு பலத்த காயத்துடன் ஐ.சி. யூனிட்டில் கோமாவில் கிடந்தான் கோபால்.
    
          ஒரு தனியார் பேருந்து தாறுமாறாய் ஓடி ரோட்டோரத்துப் புளியமரத்தில் மோதி பலத்த சேதம். எதிரே வந்த கார் அப்பளமாய் நொருங்கிக்கிடந்தது. யாரும் பிழைத்திருந்தால் தம்புரான் புண்ணியம்.

          விபரம் ஏதும் தெரியவில்லை. ஒரு ஒருத்தர் ஒவ்வொரு விதமாய் விளக்கிக்கொண்டிருந்தார்கள்.
                                                                                                                                 
          ஓட்டுனரும் வண்டியும் கோமாவில்.


          நடந்து போனவனுக்கு என்ன நடந்தது கோமாவில் கிடக்க?

          எங்கேயோ காலராவும் நிமோனியாவும் டைப்பாயடும் வந்து அல்லோலப்பட்டால் இவனுக்கும் வந்துவிடும்.

          சிக்கென் குன்னியா, பன்றிக் காய்ச்சல் இரண்டும் சேர்ந்தே வந்தன இவனுக்கு.
    
          மருந்து, மாத்திரை, மந்திரிப்பு, தாயித்து, பிணிக்கயிறுன்னு பாக்காத பண்டுதமில்ல.
    
          இந்த வயசுலயும் போலியோ சொட்டு மருந்தக்கூட விட்டு வைக்கல.
    
          கோமாவில் இருந்தாலும் இன்னும் என்னென்ன வரும்முன்னு யோசிச்சுக்கிட்டுத்தான் இருப்பாரு நம்ம கோபாலு.
   
          கோமாவுல கிடக்குறவன் யோசிப்பானா?இப்படிக் கதை எழுதுறவன் லூசுப்பயலா? என்று யோசிக்கிறிங்களா?
    
          ஒரு தடவ பிரசவ வலியில துடிச்ச நம்ம கோபாலு எத்தன தடவ செத்தான்னு அவனுக்கே தெரியாது.
            
          அட.... நான் லூசு இல்லைங்க; நெசமாத்தான் சொல்றேன்.... நம்ம பிரண்டு கோபால் இருக்கானே அவன் எதப் பாத்தாலும் கேட்டாலும் தனக்கும் அப்படி நேர்ந்திருமொன்னு நெனைக்கிற டைப்பு.

          இப்படிப்பட்ட கோபால் வாத்தியாரோ, இந்தக் கதையை எழுதுற நானோ இதப்படிக்கிற நீங்களோ நெனச்சுப்பாக்காத ஒன்னு நடந்தது....

          கோபாலுக்குக் கொடுத்தாங்க நல்லாசிரியர் விருது.