ஓடை - கோடை - மேடை

ஓடை - கோடை - மேடை
**************************************
ஓடையில போறதண்ணி
....ஒக்காந்து பாத்துக்கநீ
பாடையில போகுமுன்னே
....பால்தெளிக்க போவதென்ன..?
ஜாடையில ஆறாட்டம்
....சலசலன்னு நீரோட்டம்;
கோடையில வெயிலுவந்து
....கொக்கிபோட்டு இழுப்பதென்ன..?
மழபேஞ்சு நாளாச்சு
....மரஞ்செடிகள் காஞ்சாச்சு
எலதழைகள் சருகாகி
....ஏதுமத்த நெலமாச்சு;
பொழப்பழிஞ்சு போயாச்சு
....போக்கத்து நின்னாச்சு;
ஏலே மனுசங்களா
....ஏனிந்த நெலையாச்சு..?
ஓடம் போனநதி
....ஒய்யாரமான கடல்..!
பாடம் நடத்துதடி
....பாதியா மெலிஞ்சதடி;
ஆடம் பரமெல்லாம்
....அடியோடு போனதடி
ஓடை ஆனநதி
....ஒப்பாரி வைக்குதடி;
ஆடிப் பட்டத்த
....தேடி வெதச்சகுடி
ஓடிப் போனதடி
....ஊர்விட்டு ஊர்தேடி.
ஆட தொவைக்கிறதே
....அழுக்கான தண்ணியடி;
சாக்கட கலந்ததடி
....சந்தனம் மணக்குதடி;
மூக்கட பட்ட
....மேதிக ளாட்டம்
போக்கிட மத்துப்
....போறோ மடி.
மேடையில் மழையாக
....மெய்சிலிர்க்கப் பேசுறவர்
கூடையில் நீரள்ளிக்
....கொட்டாமல் போவாரா..?
ஆடைக்கும் கோடைக்கும்
....அசராத நிழலுக்கு
அரசால மரக்கன்னு
....அசராம நடுவோமே.
ஓசோன் ஓட்டய யார்
....ஒசரப்போய் அடைக்கிறது..?
யோசன சொல்லுகிற
....யோக்கியனே செய்யுறது..!
பேசாம பிசகாம
....ஆளுக்கு அஞ்சுமரம்
........அங்கங்கே நட்டுவப்போம்;
கூசாம குறுகாம
....குலசாமி போலமரம்
........கும்பிட்டு வளத்துவப்போம்;
ஆத்தாடி மழபேஞ்சு
...ஆறெல்லாம் அமுதாகி
........அவனி செழிக்கையில...
கூத்தாடிக் குதிப்போமே..!
....நதிகளை இணைப்போமே..!
........நல்லபடி பொழப்போமே..!
-- கவிதாமணி

0 comments:

Post a Comment