பந்தா

   டேய்....போடா போ.... அவன்லாம் ஒரு ஆளுன்னு அவங்கிட்டப் போயி.... அவன் தரத்துக்கும் தண்டிக்கும் நம்மெல்லாம்.... போடா.... போடா.... பந்தாப் பாண்டியன் பேச்சிலும் முகத்திலும் அலட்சியம் கொப்பளித்தது.

     எப்போதும் எதிலும் எகத்தாளம்.... எக்களிப்பு.... இவையே பாண்டியனுக்கு பந்தாபாண்டியன் பட்டத்தை வாங்கிக் கொடுத்துவிடவில்லை....

     தேவாரம் சுத்துப்பட்டு கிராமங்களில் அவனுக்குக் கொஞ்சம் சொத்துப்பத்து இருந்தது.... நேரகாலம் கூடிவர, நல்ல சம்பந்தம்.... உறவுமுறை.... நட்பு வட்டாரம்.... அரசியல் அறிமுகஙகள் என்று அந்தஸ்து கூடிக்கொண்டே இருந்தது....

     நடை உடை பாவனைகளில் மிடுக்கும் மெருகும் சேர்ந்து சேர்ந்து அவனை பந்தாப்பாண்டியனாய்ப் பறைசாற்றின....

     பந்தாவில் மிதந்து கொன்டிருந்த பாண்டியன், அதைத் தக்க வைத்துக் கொள்ளும் ப்ரயத்தனத்தில், சில பல சிபாரிசுகளைச் செய்து தன்னை அடுத்த தளத்துக்கு ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்தான்.

     முருகபூபதி தன் மகனுக்கு ஐ.டி.ஐ. சீட் வாங்கித் தரும்படி பாண்டியன் வீட்டுக்குப் படை எடுத்தான்.... தலையைச் சொறிந்தபடி தவம் கிடந்தான்....

     தொண்டையைக் கனைத்தபடி பாண்டியன் பேசி முடித்து, அலை பேசியை அணைத்தபடி பூபதியிடம் தொடர்ந்தான்.... ''கவலப்படாத.... ஓம்பையன் மார்க்குக்கு, மாடு மேய்க்கக்கூட லாயக்கில்லன்னாலும்.... நாஞ்சொன்ன பெறகு மறுப்பாங்களா? சீட் தாரேன்னுட்டாங்க.... புதன் கிழம போய், பீசக்கட்டி சேத்துக்க....''

     பூபதி நன்றியோடு கையெடுத்துக் கும்பிட்டு,மகனை அதட்டினான் - ''டேய்! ஐயா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குடா....!''

     388 மார்க்குக்கு பாலிடெக்னிக் சீட்டே ஈசியாக் கிடைக்கும் என்கிற விபரம் பூபதிக்குத் தெரியாததால்தான் பாண்டி மாதிரி ஆள்கள் பந்தாப் பாண்டியன் ஆகிறார்கள்....

     ஏங்க....அவனைத் தெரியும்.... இவனைத் தெரியும்னு யார் யாருக்கோ எது எதுக்கெல்லாமோ சிபாரிசு கிபரிசுன்னு ஊர்ச்சோலி பாத்துக்கிட்டுக் கிடக்கீங்க.... நம்ம பிள்ளைக்கு ஒரு +1 சீட் வாங்க முடியல.... அப்பனா அக்கறையா பஸ்ட் குரூப்ல, சேலம் நாமக்கல் ஏரியாவுல, ஒரு சீட் வாங்கப் பாருங்க.... கண் கலங்கினாள் கனகா.....

     கடைசி நேரத்தில் சங்கரா சங்கரான்னு அடித்துக் கொண்டு பகீரதப் பிரயத்தனப் பட்டதில், தட்டுத் தடுமாறி 10ம் வகுப்பு பாசாகியிருந்தான் பாண்டியன் மகன் பாரதிபாஸ்கர்.

     மகனின் மார்க் சீட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த பாண்டியனுக்குப் பெரிய கும்பிடு போட்டான் முருகபூபதி.... ''சாமி...! ஏ மூணாவது பொண்ணு 467 மார்க் வாங்கி பத்து பாசாகிட்டா.... எங்கயாவது....  ஏதாவது.... சேத்து விடுங்க சாமி....''

       பந்தாப் பாண்டி, மகனின் 202 மார்க்கில், வெக்கப் பாண்டியாய்த்  தலையசைத்தான்.
Category:
Reactions: 

0 comments:

Post a Comment