நடக்கக் கூடாதது.

          தலையில் அடிபட்டு பலத்த காயத்துடன் ஐ.சி. யூனிட்டில் கோமாவில் கிடந்தான் கோபால்.
    
          ஒரு தனியார் பேருந்து தாறுமாறாய் ஓடி ரோட்டோரத்துப் புளியமரத்தில் மோதி பலத்த சேதம். எதிரே வந்த கார் அப்பளமாய் நொருங்கிக்கிடந்தது. யாரும் பிழைத்திருந்தால் தம்புரான் புண்ணியம்.

          விபரம் ஏதும் தெரியவில்லை. ஒரு ஒருத்தர் ஒவ்வொரு விதமாய் விளக்கிக்கொண்டிருந்தார்கள்.
                                                                                                                                 
          ஓட்டுனரும் வண்டியும் கோமாவில்.


          நடந்து போனவனுக்கு என்ன நடந்தது கோமாவில் கிடக்க?

          எங்கேயோ காலராவும் நிமோனியாவும் டைப்பாயடும் வந்து அல்லோலப்பட்டால் இவனுக்கும் வந்துவிடும்.

          சிக்கென் குன்னியா, பன்றிக் காய்ச்சல் இரண்டும் சேர்ந்தே வந்தன இவனுக்கு.
    
          மருந்து, மாத்திரை, மந்திரிப்பு, தாயித்து, பிணிக்கயிறுன்னு பாக்காத பண்டுதமில்ல.
    
          இந்த வயசுலயும் போலியோ சொட்டு மருந்தக்கூட விட்டு வைக்கல.
    
          கோமாவில் இருந்தாலும் இன்னும் என்னென்ன வரும்முன்னு யோசிச்சுக்கிட்டுத்தான் இருப்பாரு நம்ம கோபாலு.
   
          கோமாவுல கிடக்குறவன் யோசிப்பானா?இப்படிக் கதை எழுதுறவன் லூசுப்பயலா? என்று யோசிக்கிறிங்களா?
    
          ஒரு தடவ பிரசவ வலியில துடிச்ச நம்ம கோபாலு எத்தன தடவ செத்தான்னு அவனுக்கே தெரியாது.
            
          அட.... நான் லூசு இல்லைங்க; நெசமாத்தான் சொல்றேன்.... நம்ம பிரண்டு கோபால் இருக்கானே அவன் எதப் பாத்தாலும் கேட்டாலும் தனக்கும் அப்படி நேர்ந்திருமொன்னு நெனைக்கிற டைப்பு.

          இப்படிப்பட்ட கோபால் வாத்தியாரோ, இந்தக் கதையை எழுதுற நானோ இதப்படிக்கிற நீங்களோ நெனச்சுப்பாக்காத ஒன்னு நடந்தது....

          கோபாலுக்குக் கொடுத்தாங்க நல்லாசிரியர் விருது.

தீபாவளி

•  நமட்டுச் சிரிப்பும்
    நகையும் பகட்டுமாய்
    நீங்கள்......

•  நமத்துப் போன
    நனைந்த வெடியாய்
    நாங்கள்......

•  குறும்பும் குதிப்பும்
    குதுகூலமுமாய்
    நீங்கள்......

•  கொழுத்திப் போட்ட
    மத்தாப்புக் கம்பியாய்
    நாங்கள்......

•  வான வெடியின்
    வெளிச்சப் புன்னகையாய்
    நீங்கள்......

•  வாரிக்கூட்டிய
    வாசல் குப்பையாய்
    நாங்கள்......

•  நீளச் சர  வெடியின்
    கோலச் சுருளாய்
    நீங்கள்......

•  குருவி வெடியின்
    குட்டைத் திரியாய்
    நாங்கள்......

•  வெடிக்கும் முன்னே
    மிரட்டும் வெடியாய்
    நீங்கள்......

•  வெடித்துச் சிதறிய
    காகிதக் கிளிசலாய்
    நாங்கள்......

•  சங்குச் சக்கரத்தின்
    சந்தோசச் சுழற்சியாய்
    நீங்கள்......

•  சங்கட மான
    சரவெடிப் புகையாய்
    நாங்கள்......

•  பட்டுப் புடவையின்
    பகட்டுச் சரிகையாய்
    நீங்கள்......

•  பாம்புக் குழுவையின்
    சாம்பால் வளையமாய்
    நாங்கள்......

•  பூந்தொட்டி போலப்
    பூரித்திருப்பவர்
    நீங்கள்......

•  புடவைத் தலைப்பில்
    கிளிசலை மறைப்பவர்
    நாங்கள்......

•  ஓலை வெடிக்கே
    ஓடி ஒளியும்
    வீரப் பரம்பரை
    நீங்கள்......

•  ஓலைக் குடிசையில்
    பற்றிய நெருப்பை
    ஓடி அணைப்பவர்
    நாங்கள்......

• ஏழை எளியவர்
    ஏக்க நெருப்பினை
    ஏளனம் செய்பவர்
    நீங்கள்......

•  ஏழையின் சிரிப்பில்
    இறைவனைக் கண்கிற
    இதயம் கொண்டவர்
    நாங்கள்......


•  ஆலைக் கரும்பென
    ஆட்டிப் பிழிந்துயிர்
    அள்ளிக் குடிப்பவர்
    நீங்கள்......

•  பாலை நிலத்தினில்
    பச்சைக் கிளிகளாய்ப்
    பாடிப் பறப்பவர்
    நாங்கள்......


•   கொண்டாடாமலே
     கொண்டாடியதாய்
     அலட்டிககொள்பவர்
     நீங்கள்......

•  கொண்டதைக் கொண்டு
    கொண்டாட்டத்தைக்
    கொண்டாடுபவர்கள்
    நாங்கள்.....
     
•  ஆளுக்கொன்றாய்
     டி.வி.பெட்டிக்குள்
     அடங்கிப்போபவர்
     நீங்கள்.....

•  அக்கம் பக்கம்
    அன்பாய் இருந்து
    ஆனந்திப்பவர்
    நாங்கள்.....
   
•  அடுத்த பண்டிகை
    எப்போ தென்று
    ஏக்கம் கொள்பவர்
    நீங்கள்......
•  இன்னும் காலம்
    இருக்கு தென்று
    நிம்மதி கொள்பவர்
    நாங்கள்......