ஆசிரியர் பக்கம்:

நேற்றைய செய்தி ஒருபாதி
    நாளைய செய்தி ஒருபாதி
இன்றைய செய்தி சரிபாதி
    இவையே எங்கள் குலநீதி.

பத்தியை நிறப்பப் படுகிறபாடு
    படித்துப் பார்த்தால் தெரிந்துவிடும்
பத்தியை முழுவதும் படித்துப் பார்ப்பவன்
    பைத்தியம் என்பது புரிந்துவிடும்.

புத்தியைச் சலவை செய்வது எங்கள்
    புத்தக உலகின் செயலாகும்
கத்தியில் நடக்கும் காரியம் சிலவால்
    வாசகர் மனதில் புயலாகும்.

கவர்ச்சிப் படங்கள் இருந்தால் எங்கள்
    புத்தகம் உடனே விலைபோகும்
காட்சிக்கெளிய தலைவர்கள் என்றால்
    காகிதம் என்றே பெயராகும்.

கதைப் பக்கம் கவிதைப் பக்கம்
    சதைப் பக்கம் சந்தைப் பக்கம்
எதைப் பக்கம் போட்டாலும
    எடுப்பாய் இளசுகள் படம்வேண்டும்.

கொள்கைப் பிடிப்பெனும் சொடுஞ் சொல்லை – எங்கள்
    குலத்தில் சொல்வது பாவமடா
கொட்டிக் கொட்டிப் பணம்கொடுத்து – நீங்கள்
    குப்பையைச் சேர்;ப்பது சாபமடா.

காதோடு சொல்வதை எல்லாம் - தினம்
    கடையை விரித்துக் காட்டுகிறோம்
ஏதோ பிழைப்பு நடத்துகிறோம் - உங்கள்
    பொழுதைக் கொஞ்சம் கடத்துகிறோம்.

எதையும் மறக்கும் பண்புடையோர்
    இதையும் மறந்து விடுவீர்கள்
அதையும் நாங்கள் மறக்காமல்
    அச்சில் கோத்து வெளியிடுவோம்.

0 comments:

Post a Comment