நீள்கவிதை 3

ஒவ்வொரு அசைவிலும்
ஒருசில பூக்கள்
உதிர்வது எதனாலே?
       உயிரில் கலந்த
       மணத்தைப் பிரிந்த
       வாட்டம் அதனாலே!

நாரே நீயும்
தலையில் இருந்து
நடிப்பது எதனாலே?
       நறுமலர் தன்னை
       நயமுடன் கோர்த்த
       நளினம் அதனாலே!

பிரிவது அறியாப்
பெண்ணே உனக்குப்
பிரியம் எதனாலே?
       அழகும் மணமும்
       அருகருகிருக்கும்
       அற்புதம் அதனாலே!

சிதறிக் கிடக்கும்
பூக்கள் மெல்லச்
சிரிப்பது எதனாலே?
       சிகையெனும் சிறையில்
       சிக்கிக் கிடந்த
       சிறமம் அதனாலே!

விடுதலை என்பது
கெடுதலை ஆகிற
விசமம் எதனாலே?
       விழுவதை மிதிக்கும்
       பெண்ணே உந்தன்
       கால்கள் அதனாலே!

விழுகிற பூவில்
விதையிலை என்றால்
விழுவது வீணாகும்

தொழுகிற தெய்வம்
துணையிலை என்றால்
தொழுவது வீணாகும்

அழுகிற குழந்தை
அடிக்கிற தாயை
அன்புடன் நோக்காது

உழுகிற போது
விழுகிற வியர்வை
பூமியில் தூங்காது

உழைக்கிற போது
உதிரும் வியர்வை
உறக்கம் கொள்ளாது

எழுகிற எண்ணம்
எழுந்து விட்டால்
எழுவது என்பது எளிதாகும்

கழுமரம் கூடப்
பூக்களை உதிர்க்கும்
கவிஞன் எனக்காக.

0 comments:

Post a Comment