இ.பி.கோ. - இருபால் பிணைப்புக் கோட்பாடு!

        பொன்னும் மணியும் பூட்டி மகிழ்ந்து, சீராட்டிப் பாராட்டி வளர்த்த செல்ல மகளை, நல்லவன் கையில் ஒப்படைப்பதாய் எண்ணி, ஏமாந்து போகிற எத்தனை எத்தனையோ பெற்றோர் இரத்தக் கண்ணீர் வடிக்கக் காரணம் என்ன?

        ஆணாதிக்க சமூகம் பெண்ணை அடிமையாகவும், போகப் பொருளாகவும் எண்ணி மேலாதிக்கம் (Male ஆதிக்கம்) செய்கிற மெத்தனம், எண்ணம் சொல் செயல் எல்லாவற்றிலும் இரண்டறக் கலந்து விட்ட கயமையால், கண்ணீர் வடிக்கிற குடும்ப விளக்குகள் ஒளிவீச வழி என்ன?

        அச்சம், நாணம், மடம் பயிர்ப்பு என்ற பத்தாம் பசலித்தனமான பண்புகளை வகுத்துத் திணித்து இருட்டடிப்புச் செய்கிற போலித்தனத்தால், மூச்சுக் காற்றுக்குக் கூட முக்காடு போட்டு விடுகிற, முட்டாள்தனமான மூர்க்கத்தனங்களை முறியடிக்கத் தேவையான முனைப்பு என்ன?

        கல்லானாலும் கணவன், புல் (Full) ஆனாலும் புருசன் என்கிற புறட்டுத்தனத்தால் சஞ்சலப்பட்டுப் பதிவிரதைகளாய்ப் பட்டம் பெற்று, பழி பாவங்களுக்கு அஞ்சிப் புதைகுழி போகிற நடைப்பிணங்களை வாழ்விக்க வழி என்ன?

        “ஆண்மகன் ஆயிரம் செய்வேன், பெட்டைக் கழுதைக்கென்ன அத்தனை திமிர்”, என்று ஆர்ப்பறிக்கிற ஆணாதிக்கத்தின் ஆணவத்தை, அகங்காரத்தை அடியோடு அழிக்கிற ஆற்றல்மிகு அஸ்திரம் என்ன?

        சமய சந்தர்ப்பம் பாராத, சம்பளம் இல்லாத வேலைக்காரிகளாய், பிள்ளைகள் பெற்றுத்தரும் இயந்திரங்களாய், அடிமைச் சாசனம் எழுதித்தராத ஆட்டு மந்தைகளாய், குடிகாரக் கணவனுக்கும் குற்றேவல் செய்கிற குணவதிகளாய், அடுப்படி ஒன்றே திருப்பதி என்று தெருப்படி தாண்டாத கிணற்றுத் தவளைகளாய் இன்றைக்கும் இருக்கிற இந்த ஏமாளிகளை உய்விக்கும் உபாயம் என்ன?

        இப்படி என்ன என்ன என்ன என்கிற கேள்விக் கணைகளுக்கு மத்தியில், காலம் மாறிவிட்டதன் அடையாளமாய், புதிய விடியலின் பூபாளமாய், அடிமைத்தனத்தை அடியோடழிக்கும் அலைப்படையாய், அனற்பிழம்பாய், ஆளுமை மிகுந்த ஆவேசப் புயலாய் “எதுவும் முடியும் என்னால்” என்று எத்துறையிலும் பெண்கள் இன்று முத்திரை பதிக்கிற முனைப்பில் 100 சதம் இருந்தாலும் 33 சதம் ஒதுக்கீடு செய்யவே உடன்படாத உதவாக்கரைகள் 200 சதம் இருக்கிறார்கள்.

        வரதட்சணைத் தடைச்சட்டம், பெண் சிசுக்கொலைத் தடைச் சட்டம், பாலியல் பலாத்காரத் தடைச்சட்டம், பெண்மக்கள் சொத்துரிமைச் சட்டம், பெண் வன்கொடுமைத் தடைச்சட்டம் இன்னும் பற்பல சட்டங்கள் இயற்றி, அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் ஆயிரமாயிரம் வந்த பின்னும்,

        “தப்பித்தால் தப்பில்லை”

        என்கிற தான்தோன்றித்தனமான போக்கு மேலோங்க, அத்தனை இ.பி.கோ.விலும் தப்பித்து விடுகிற சாமர்த்தியமான சந்தர்ப்பங்களைச் சட்டமே தந்து விடுவதால் தர்ம ஸ்தூபிகள் தள்ளாடுகின்றன.

        விலையுயர்ந்த பொருட்களைப் பிறந்த வீட்டிலிருந்து பெற்று வரும்படி மனைவியைக் கணவனோ அவனைச் சார்ந்தவர்களோ வற்புறுத்தினால் இ.பி.கோ.498 அ பிரிவின்படி அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கலாம்; ஆனால் அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியோ 3 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை தரும் அதிகார உச்சவரம்பைப் பெற்றிருப்பது போன்ற முரண்கள் சட்டத்தின் எல்லா மூலை முடுக்குகளிலும் நிறைந்திருப்பதால்,

        ஸ்ரீ ராமன்களைக் கூண்டில் நிறுத்தி,
                ராவணன்களைக் காப்பாற்ற,
        சீதாப்பிராட்டிகளே சிலிர்த்தெழும்போது
                சிறைக் கம்பிகளுக்குள்
        மண்டோதரிகளே மாட்டிக் கொள்கிறார்கள்.

        அறிவின் ஆளுமை அதிகரிக்க அதிகரிக்க உணர்வின் உன்னதம் உதிர்ந்து போவதால், உறவுப்பாலங்கள் உடைந்து போகின்றன. சட்டத்தால் ஓட்டுப் போடும் ஓட்டைப் படகுகள், ஆழ்கடலின் அலைகளுக்குள் அகப்பட்டுக் கொள்வதால், ஓரக்கடலில் ஒதுக்கப்படுகிற உறவுப் பிணங்களை, உற்று நோக்கும் சட்டக் கழுகுகள் சாப்பிட்டு விடுகின்றன.

        “இரவும் நிலவும் வளரட்டுமே – நம் இனிமை சுகங்கள் தொடரட்டுமே……” என்று,

        யாசிக்கவும், தன் தேவைக்காக மட்டுமே நேசிக்கவும் சாய்ந்த இரவுகளின் சல்லாபப் பொழுதுகளில் பூஜிக்கவும் வெட்கப்படாத விசமிகள் நச்சுக் கிருமிகளாய், நாடெங்கும் இருப்பதால்,-

        “நேற்று - குழந்தை
         இன்று - குமரி
         நாளை - அடிமை”

        என்கிற இரத்தப் புற்றுநோய், நம் நாடி நரம்புகளை அரித்துத் தின்றுவிடும் அவலம், காலம் காலமாய்த் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

        பிழையான பாட்டைப் பிழையென்று சொன்னதற்கே நெற்றிக்கண் திறந்த திருநீலகண்டன், சரிபாதி பெண்மைக்குத் தந்தான் என்ற தத்துவத்தை, உடன்கட்டை ஏற்ற மட்டுமே உபயோகித்த உத்தமர்கள், ஆண்டவன் சாபத்திற்கு ஆளாகிப் போனதால் சிதையூட்டாத சீதைகளைச் சிறைபிடித்துச் சிற்றின்பப் போதையில், “சிவாய”, என்றவர்க்கு அபாயமில்லையே!

        காலம் காலமாய்க் கதவுகளுக்குப் பின்னால் நடக்கிற இந்தக் கயமைகளுக்குக் கண்ணீர்த் தாரைகளே சாட்சிகளாயின. இந்தக் காட்சிகள் மாறும் காலம் வந்தது…… கொஞ்சம் கொஞ்சமாயக் கண்கள் திறந்தன…… நஞ்சு மனங்களின் நாசம் மறைந்தன……

        எங்கோ மூலையில் இருட்டடிப்பாய் இன்றும் தொடரும் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வராமல் வீட்டுக் கதவுகளே காபந்து செய்கிற கயமை, கற்பூரம் போலக் கணநேரம் எரிந்து கரும்புகையின் கரிபூசிவிடும் என்பதைக் காலம் உணர்த்தும் வரை, காத்திருக்க வேண்டாம்.

        வீடுகளின் வெளிச்சம் வீதிகளுக்கு வரட்டும்: வீதியின் இருட்டில் வீணைகள் வீறுகொண்டு எழட்டும். அச்சம் அகன்று நாணமும் மடமும் பெண்ணுக்கு வேண்டாம்; பயிர்ப்பு என்பது ஆடவர் பண்பாய் ஏற்றுக் கொண்டால் ஆணும் பெண்ணும் சமமென்ற ஆடையின் மாற்றங்களைப் போலவே, அச்சு அசலாய், 50க்கு 50 மாட்சிமை பொங்கும் மகத்துவமாகும். அப்போது இ.பி.கோ. என்பது “இருபால் பிணைப்புக் கோட்பாடாய்”, அகிலம் புகழும் அர்த்தனாரீஸ்வரராய், ஆனந்தத் தாண்டவம் ஆடும்.

        கவனக்குறிப்பு : தாலி கட்டிய பாவத்திற்காகத் தனிமையில் கண்ணீர் விட்டுக் கதறியழும் கண்ணியமான கணவனாய் நொந்து நூலாய்ப் போன ஆயிரத்தில் ஒருவன்களுக்கு எந்த வன்கொடுமைச் சட்டமும் வக்காலத்து வாங்காதது கணக்கில் வராத சாபக்கேடு.
Category:
Reactions: 

0 comments:

Post a Comment