புதுக்கவிதை 4

கணக்கும் பிணக்கும் எதனால் என்ற
    காரணம் நமக்குத் தெரியாமல்
        கயமைத்தனங்கள் ஒழிவதில்லை

பணத்தின் மேலே பணத்தைப் போட்டுப்
    பாது காத்தும் பயனில்லை;
       பாடையில் பேதம் ஏதுமில்லை

பிணத்தின் மேலே பிணத்தைப் போட்டுப்
    புதைத்துப் பார்த்தும் முடியவில்லை.
        பூமியில் சவக்குழி மீதமில்லை

குணத்தில் உயர்ந்த குவலய மாந்தர்
    குழியில் இருந்தும் உயிர்த் தெழுவார்
        கோபுரம் போலே நிமிர்ந்திடுவார்
        (வேறு)

தனக்கத் தனக்கெனும் தன்னுணர்வு
    தகர்ந்தால் தேசம் நன்மை பெறும்
        எனக்கும் உனக்கும் பகைமூட்டம்
            எல்லாம் இந்தச் சுயநலமே

மனமே எதற்கும் ஆதாரம்
    மாண்புகள் தங்கும் கூடாரம்
        மனமே கனவுகள் நனவாக
            மானிடப் பண்பினை வளர்த்துவிடு.

கனக்கும் இதயச் சுமைகளுமே
    கண்ணீர் விட்டால் கரைந்திடுமோ?
        உனக்கென உருகும் இதயங்கள்
            உறுதுணை யானால் இடர்வருமா?

அன்பால் உலகை வசப்படுத்து
    அதனால் உன்னை வளப்படுத்து
        உன்னால் உலகம் வளமானால்
            உயிரின் பயனே அதுதானே!

1 comments:

மதுரை சரவணன் said...

/பிணத்தின் மேலே பிணத்தைப் போட்டுப்
புதைத்துப் பார்த்தும் முடியவில்லை.
பூமியில் சவக்குழி மீதமில்லை//

அருமை...வாழ்த்துக்கள்

Post a Comment