அற்பம்

        என்ன…… என்ன நினைத்துக் கொண்டு புறப்பட்டானோ? வீட்டில் யார் யார் வழி அனுப்பி வைத்தார்களோ! ஒருவரும் இல்லாதவனாகக்கூட இருக்கலாம்.

        சகுனம் சரியாய் இல்லையா? பார்த்தானா? பார்க்க வில்லையா? எதுவும் தெரியாது……

        முட்டாள்தனமான எத்தனையோ சம்பிரதாயங்களைக் கட்டுடைத்த அவசர உலகத்தில் இவனுக்கு என்ன அவசரமோ……

        எவரெவர் எதெதெதற்காக எங்கெங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பது எவருக்குத் தெரியும்……?

        “எங்கே எதற்குப் பயணம்;
          ஏதும் அறியாமல் விழிக்கும்;
          லாரியில் அடி மாடுகள்”.

        இப்படித்தான் எல்லோரும் பெரும் பயணத்திற்கான ஒத்துகையாய் எத்தனையோ சிறுபயணங்கள் செய்கிறோம்……

        இவன் கூட எந்த நினைவில் எங்கு போய்க் கொண்டிருந்தானோ……? நிகழக் கூடாதது நிகழ்ந்து விட்டது.

        வெறித்த விழிகளோடு சிரித்த முகமாய்ச் செத்துக் கிடக்கிறான். ஓரத்தில் தான் போயிருக்கிறான்...... ஒரே அடியில் போய்விட்டேனே! எப்படி……?

        எருமை வாகனத்தில் வரவேண்டிய எமன் எந்த வாகனத்தில் வந்தான் இவனுக்காக?

        விதி யாரை விட்டது என்று வியாக்கியானம் பேசிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் - இடித்த வண்டியைப் பிடித்துக் கொடுக்கவோ, துடிக்கிற உயிரைக் காப்பாற்ற நினைக்கவோ ஆளில்லாமல் போனதால் சிரித்தபடி செத்துக் கிடக்கிறான்.

        எட்டி நின்று எட்டிப்பார்ப்பவர் கண்களுக்கு எளிதில் தட்டுப்பட்டது அது.

        கொஞ்சம் கொஞ்சமாய்க் கூட்டம் சேர்ந்தது…… முந்தி வந்தவன் பிந்தி வந்தவனிடம் விசாரித்தான். எப்படி நடந்தது?

        உதட்டைப் பிதுக்கி, உற்றுப்பார்த்து விட்டு, பைக்கை உதைத்து, ஆரன் அடித்து விரட்டிக் கொண்டு பறந்து போனான; தனக்கு விபத்தே வராது என்கிற ரீதியில்……

        எல்லோருக்குமே ஏதோ ஒரு அவசரம் இருக்கிறது, செத்துப் போனவனுக்கும், சாகடித்தவனுக்கும் அப்படி ஏதாவது இருக்கலாம்.

        செத்துப்போனவனின் அவசரமும் அவசியமும் செத்துப்போய் விடுமோ? அது செத்துப் போனவனின் சொத்துபத்தைப் பொறுத்தது.

        இவன் கிடப்பதைப்பார்த்தால் இப்போதைக்கு இவனிடமிருப்பது இது மட்டுமாகத்தான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்த என்னை இடித்துக்கொண்டு உள்ளே நுழைந்தது தொப்பை வயிற்றுக் காக்கிச் சட்டை…… பேண்ட் பாக்கெட்டுக்குள் ஏதேதோ புடைத்துக் கொண்டிருந்தன…… தொப்பையைப் போலவே

        என்ன நடந்தது? ஏது நடந்தது? எப்படி நடந்தது? எப்போ நடந்தது? இப்படிக் கேள்விகள் எழுந்தன………

        சின்னச் சின்னதாய்ப் பொத்தாம் பொதுவாய் விசாரித்த போதே கூட்டத்தின் கால்கள் முன்னே பின்னே நடந்தனவே தவிர நடந்ததைச் சொல்ல நாதியில்லை.

        வேடிக்கை பார்ப்போம்…… வேடிக்கை மட்டுமே பார்ப்போம்…… என்ற வாடிக்கை கொண்ட நமக்கு விபத்தும் இழப்பும் ச்சுக் கொட்ட வைக்கிற விசயங்களாகவே தான் இருக்கின்றன.

        தற்செயலாகத் திரும்பினேன்…… அங்கே அது இல்லை. அட சற்றுமுன் அங்கே அது கிடந்ததே அதற்குள் எப்படி மாயமாய் மறைந்தது? யார் எடுத்திருப்பார்? அதுவும் விபத்தாய் இருக்குமா!.

        ஏதோ இனம்புரியாத ஏக்கத்தோடு தேட ஆரம்பித்தேன்; என்னுடையது இல்லை; பிறகு எதற்கு எனக்குள் இந்தப் பதட்டம்……

        போனால் போகட்டும் போடா…… என்று விட்டுவிட ஏன் மனமில்லை?

        அதை எடுத்துப் போய் எவ்வளவுகாலம் அதோடு வாழ்ந்து விடப்போகிறான்……? ஏன் இத்தனை அற்பமாய் மனிதன் இருக்கிறான்?

        எல்லோருமே இப்படித்தானா? வாய்ப்புக் கிடைத்தால் வாரிச் சுருட்டுவது வாழ்க்கை தானா?

        அடுத்த வினாடிக்கு உத்தரவாதம் இல்லாமல் தானே இந்த வினாடியை எடுத்து வைக்கிறோம்; அதற்குள் எதற்கு அடுத்தவன் பொருளை எடுத்து மறைக்கும் அவசியம் வந்தது?

        மனம் படபடத்தது...... கண்கள் பரபரத்தன…… தேடினேன்…… தேடினேன் சிரித்தபடியாய் செத்துக் கிடந்தவன் இப்போது முறைத்துக் கொண்டிருந்தான்.

        இப்போது முறைக்கிறானா? முதலிலும் முறைத்தானா? நான் தான் சரியாகப் பார்க்க வில்லையா?

        அப்போது பார்த்தேன்…… அடையாளம் சொல்லும் அளவிற்குப் பார்த்தேன் அங்கே அது கிடந்தது.

        உறுதியாகி விட்டது. எவனோ அடித்துக் கொண்டு போய்விட்டான்.

        வீட்டுக்கு வந்த பின்னும் புலம்பிக் கொண்டிருந்தேன்…… மனசெல்லாம் அதுவாய் இருந்தது; திருடியவன் மனசிலும் அதுதான் இருக்குமோ?

        மனசிருந்தால் திருடுவானா? அதுக்கும் சொந்தக்காரர் செத்துக் கிடக்கம்போது அதைப்போய்த திருடியிருக்கிறானே……

        என் மனைவி கேட்டாள் அது அது என்கிறீர்களே! அது எது?

        கோபமாய்ச் சொன்னேன் - அது, “செத்துப் போனவனின் செருப்பு”.

2 comments:

ThiThaNaa said...

கவிதை நயத்தோட ஒரு அருமையான கதை’அற்பம்’
கடைசிவரை சஸ்பென்ஸ்.அருமை, உடன் வெளிப்படும் மனிதனின் அசிங்கங்கள்.நண்பரே! தொடருங்கள்.வாழ்த்துக்கள்.சொன்னதில் எதுவும் முகஸ்துதி இல்லை

செய்யாறு. தி.தா.நாராயணன்.

கவிதாமணி said...

வணக்கம் நண்பரே...
மிக்க நன்றி
வருகைத் தொடரட்டும்...

Post a Comment