பொன்மகள் வந்தாள்

செல்லப் பிள்ளை
பிறந்து விட்டாள்
தங்கக் கட்டி போல – அட
சொல்லிச் சொல்லி
வளர்த் தெடுப்பேன்
சொக்கத் தங்கமாக.

அச்சம் நாணம்
என்பது எல்லாம்
அடவோ நமக்கு வேண்டாம் – அட
எச்சில் விழுங்க
அனுமதி கேட்கும்
பத்தாம் பசலி வேண்டாம்.

சமைக்கிற வேலை
செய்வது மட்டும்
சாதனை என்பது வேண்டாம் – அட
இமைக்கும் பொழுதில்
எதையும் வெல்லும்
இதயம் உனக்கு வேண்டும்.

மிச்சம் மீதி
இருந்தால் உண்டு
காயும் சருகாய் வேண்டாம் – அட
உச்சம் உனது
உயர்வே என்று
உணர்த்தும் உஷ்ணம் வேண்டும்.

ஆணும் பெண்ணும்
சரியே என்னும்
சரித்திரம் சமைக்க வேண்டும் – அட
பூணும் வெற்றியில்
புவனம் சிலிர்க்கப்
புரட்சி பாட வேண்டும்.

காணும் யாவும்
கைவச மாக்கும்
கலைகள் கற்க வேண்டும் – அட
வானும் மண்ணும்
உனக்குள் அடக்கி
வாழிய செல்ல மகளே!

0 comments:

Post a Comment