சிலைகளின் கண்ணீர்

அதோ
    அங்கே ஒரு சிலை……
    அருகில் சென்று பார்க்கிறோம்;
    அடவோ……
              சட்ட அறிஞர்
              அம்பேத்கரின்
              அற்புதச்சிலை!
    மாலை அணிவித்து
    மரியாதை செய்தோம்
    அடியில் பார்த்தால்……
               அந்தச் சிலையை
               அன்று நாட்டிய
               அத்தனை பேரும்
               அவரது குலம் என்று
               அடிக்குறிப்பு இருக்கிறது.
செக்கிழுத்த செம்மல்
     சிலையாக நிற்கிறார்;
     சிரித்துக் கொண்டே
     அருகில் செல்கிறோம்……
                இவரது சிலையை
                இங்கே நாட்டியோர்
                வேளாளர் குலம் என்று
                வெட்டியிருந்தார்கள்.
கல்விக் கண்திறந்த
     கர்மவீரர் காமராசரை,
     உறவின்முறை மட்டுமே
     உரிமை கொண்டாடுகிறது.
முச்சந்தி ஒன்றில்
     முக்கால் அடி உயரத்தில்
     முளைத்திருந்தது……
                பசும்பொன் திருமகனின்
                பகட்டான சிலை;
     அதனைச் சுற்றி
     அத்தனை பேரும்
     முக்குலத்தோர் என்று
     முத்திரை வாசகம்
     முன்மொழிந்தது.

     அதிர்ந்து போனோம்
     அத்தனை சிலைகளும்
     அவரவர் சாதியின்
     அடையாளச் சின்னமாய்……
                 அவமானப் படுத்திவிட்டதாக
                அத்தனை மகான்களும்
                அழுது கொண்டிருக்கிறார்கள்.
                தொழுது உங்களைக்
                கேட்டுக் கொள்கிறேன் –
     தன்னலமில்லாத்
     தங்கத் தலைவர்களை
     மட்டுமாவது
     சாதிச் சாக்கடையில்
     புதைத்து வீடாதீர்கள்.

3 comments:

வெறும்பய said...

சாதி எனு சாக்கடையில் மூழ்கி விட்டதை திரும்ப பெறுவது மிகவும் கடினம் நண்பரே..

கவிதை மிகவும் அருமை.. சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளீர்கள் உங்கள் ஆதங்கத்தை..

மதுரை சரவணன் said...

//தன்னலமில்லாத்
தங்கத் தலைவர்களை
மட்டுமாவது
சாதிச் சாக்கடையில்
புதைத்து வீடாதீர்கள்.
//
அருமை .. ஆனால் கலந்து விட்டனரே.. ஆதங்கம் புரிகிறது. வாழ்த்துக்கள்

cs said...

இன்றைய சூழ்நிலையில்,சுதந்திரத்திற்க்காக பாடுபட்ட தலைவர்கள்

அனைவரும் ஜாதி என்னும் வட்டத்திற்குள் வந்து விட்டார்கள்.

அண்ணாதுரை--- முதலியார்.

காமராஜர்------------ நாடார்.

டாக்டர்.அம்பேத்கர்--------தலித்

பசும்பொன்.முத்துராமலிங்கம்---------தேவர்

ராஜாஜி-----------அய்யர்

தீரன் சின்னமலை-------------கவுண்டர்

கட்டபொம்மன்---------நாயக்கர்

மருது சகோதரர்கள்-----------செட்டியார்கள்

காயிதே மில்லத்-----------இஸ்லாமியர்

இப்படி ஒவ்வொரு ஜாதி சங்கமும் தங்கள் ஜாதிக்காரரை

அடையாளப் படுத்திக் கொள்கிறது.

அன்று தலைவர்கள் எல்லோரும் தங்கள் பெயருக்கு பின்னால் ஜாதியை வைத்துக்கொண்டு

ஜாதி,மத பேதமில்லாமல் ஒற்றுமையாய் இருந்தார்கள்.

ஆனால் இன்று எனன நிலை என்று? எண்ணி பார்த்தால்

அந்த தலைவர்களே வெட்கி தலை குனிவார்கள் என்பதே

உண்மை.

அ.சந்தர் சிங்.

Post a Comment