வாஸ்துவை எழுப்பாதே……

வாஸ்துராஜா எழுகின்றார்,
வாசல்கதவை மூடுங்கள்;
வாஸ்து என்றால் யாரென்று
விபரம் தெரிந்தால் கூறுங்கள்.

வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி
வீட்டைக் கட்டி முடிக்கின்றார்;
பாயை விரித்துப் பந்தி படைத்துப்
பகட்டாய் ஒருநாள் சிரிக்கின்றார்.

கூட்டில் உப்பு குறைவென்று
குறையைச் சொன்னார் ஒருநண்பர்;
வீட்டில் வாஸ்து குறையென்று
வந்தவர் சிலபேர் சொன்னார்கள்.

கன்னி மூலையில் கதவிருந்தால்
கன்னியர் தமக்குக் கேடென்றார்;
தண்ணீர்த் தொட்டி இருந்தாலோ
கண்ணீர் ஊற்று வற்றாதே.

அக்கினி மூலையில் அடுக்களையை
அமைத்தது மிகவும் நல்லதுதான்;
முக்கில் வீடு இருப்பதுவோ
முற்றும் தீராக் குறைபாடு.

முற்றம் வெளியே இருந்தாலோ
தொல்லைகள் என்றும் தொடர்ந்துவரும்;
சற்றும் யோசனை செய்யாமல்
சட்டென இடித்துத் தள்ளிவிடு.

தெருக்குத்திங்கே இருப்பதனால்
தீபக்கல்லை நட்டுவைத்து,
தெற்குப் பார்த்த விடிதற்கு
அக்கினி வாசல் அமையுங்கள்.

அடியும் பிசகாய் இருக்கிறதே
கட்டிய கொத்தனுக்கு அறிவுண்டா?
முடிந்த வீட்டில் குறைசொல்லும்
முட்டாளைத்தான் என்ன செய்ய?

இடித்து இடித்துக் கட்டியபின்
இடித்து மாற்றிப் புணரமைக்கத்
துடிக்கும் சாத்திரமுட்டாளின்
மூளையின் வாஸ்து சரிதானா?

அறிவியல் காரணம் சிலகொண்டு
அமைக்கிற வாஸ்தில் பொருளுண்டு;
அறியாதனத்தால் இடிபட்டு
அவஸ்தைப் படுவது யார்குற்றம்?

இடித்துக் கட்டிய பூதுவீட்டை
ஈட்டிக்காரன் பறித்துவிட
இடிக்கவீடு இல்லாமல்
இருப்பது வாஸ்து ராஜாவே.

1 comments:

வெறும்பய said...

மிகவும் அருமையாக சொன்னீர்கள்...

வாயை கட்டி, வயித்தை கட்டி சம்பாதித்து வீடு கட்டினால்... நோகாமல் வந்து சொல்லிவிட்டு போவார்கள் பாருங்க... வாஸ்து சரியில்லை என்று..

Post a Comment